Thursday, December 5, 2024

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; இரு தரப்பும் பேசித் தீர்ப்போம்; நாடாளுமன்றில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு.!

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடுவதன் மூலமே இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்பது தொடர்பில் ஒரு முடிவுக்கு வர முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

இவ்விடயம் தொடர்பாக தமிழரசுக் கட்சியினர் ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அத்துடன் பாராளுமன்றத்திலும் அது தொடர்பான விடயங்கள் பேசப்பட்டன.

இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி தலையிடுவதாக வாக்குறுதி வழங்கியதாக கூறப்பட்டது.

கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் அந்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினையுள்ளது.

எனவே இது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடுவோம். கலந்துரையாடல் ஊடாக இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்த்துக்கொள்வது என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும்.

இந்த விடயம் தொடர்பில் சாணக்கியன் எம்.பி. மற்றும் சத்தியலிங்கம் எம்.பியுடன் கலந்துரையாடினேன். எமது மக்களின் பிரச்சினை தொடர்பாகவும் அவர்களுடன் கலந்துரையாடியுள்ளேன். அதனால் இவ்வாறான பிரச்சினைகள் - முரண்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் மூலம் தீர்த்துக் கொள்வோம்.

அத்துடன் இந்த பிரதேச செயலகம் தொடர்பில் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக எல்லை நிர்ணயம்   தொடர்பாக பல குழுக்களும் இருக்கின்றன.

எனவே இந்த விடயங்கள் அனைத்தையும் கருத்திற் கொண்டு ஒரு தீர்மானத்துக்கு வருவோம் - என்றார்.

No comments:

Post a Comment