-அஸ்லம் எஸ்.மெளலானா-
இஸ்லாமாபாத் சுனாமி வீட்டுத் தொகுதியில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற கழிவு நீர் பிரச்சினை குறித்து ஆராய்ந்து - நடவடிக்கை எடுப்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா மற்றும் கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை (09) மாலை அங்கு கள விஜயம் மேற்கொண்டனர்.
இஸ்லாமாபாத் வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் பொது மக்கள் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் பொருட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா அவர்கள் இன்று கல்முனை மாநகர சபைக்கு விஜயம் செய்து - மாநகர ஆணையாளருடன் இவ்விடயம் குறித்து கலந்துரையாடியதையடுத்தே அதிகாரிகள் சகிதம் ஸ்தலத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.
கல்முனை மாநகர சபையின் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் , உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், உள்ளூராட்சி உத்தியோகத்தர் எம். சர்ஜூன், வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம். நுஸைர் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது குறித்த பிரச்சினைக்கு விரைவாக நிரந்தரத் தீர்வு காண்பதற்கான மூலோபாய திட்டங்கள் தொடர்பிலான ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டதுடன் சாத்தியமான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் காரணமாக கல்முனையில் வீடு வாசல்களை இழந்த மக்களுக்காக இஸ்லாமாபாத் பகுதியில் அமைக்கப்பட்ட வீட்டுத் தொகுதியில் 194 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவ்வீடுகளுக்கான மலசல கூடக் கழிவுகளும் குளியலறை மற்றும் சமையலறை கழிவு நீர்களும் ஒட்டுமொத்தமாக ஒரே கழிவுக் குழியில் செலுத்தப்படுவதால் அக்குழியில் பாரிய அழுத்தங்களும் வெடிப்புகளும் ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறுவதால் அங்கு வசிக்கும் மக்கள் நீண்ட காலமாக சுகாதார சீர்கேடு மற்றும் துர்நாற்றத்திற்கு முகம் கொடுத்துக் கொண்டு பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த வீட்டுத் தொகுதிகள் அமைக்கப்படும் போது மலசல கூட மற்றும் கழிவு நீர்கற்றலுக்கு முறையான திட்டமிடலுடன் கழிவுக் குழிகள் அமைக்கப்படாமையே இப்பிரச்சினைக்கு பிரதான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எவையும் வெற்றியளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment