Tuesday, March 29, 2022

சாய்ந்தமருது நகர சபை குறித்த அதாவுல்லாவின் கருத்து நகைப்புக்குரியது; மக்கள் இனியும் ஏமாறத் தயாரில்லை என்கிறார் யஹியாகான்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது நகரசபை விடயம் கால ஓட்டத்தில் நடைமுறைக்கு வரும் என்ற தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவின் கருத்து நகைப்புக்குரியது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா திங்களன்று (28) நடத்திய ஊடக மாநாட்டில் சிறு பிள்ளைத்தனமாக கருத்துக்களை கூறியது மட்டுமன்றி சாய்ந்தமருது நகர சபை விடயத்தை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு, அலட்சிய போக்கில் கருத்துக் கூறியிருப்பது கண்டனத்துக்குரிய விடயமாகும்.

சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையை வைத்து சாய்ந்தமருது மக்களின் வாக்குகள் மூலம் பாராளுமன்றத்துக்கு தெரிவான அதாவுல்லாவால், இனி அவ்வாறானதொரு சபையை பெற்றுத்தர முடியாது என்பது ஊர்ஜிதமாகி விட்டது. 

அவ்வாறு இருக்கும்போது கால ஓட்டத்தில் நடைமுறைக்கு வரும் என்று அவர் கூறியிருப்பது வெறும் வெற்றுக் கதை மட்டுமன்றி பொய் பிரச்சாரமும் கூட என்பது தெளிவாகிறது.

தே.கா தலைவர் அதாவுல்லா, இனி எந்த இடத்திலும் சாய்ந்தமருது நகர சபை விடயமாக பேசத் தேவையில்லை. பேச வேண்டிய இடத்தில் பேசாமல், ஊடகங்களில் மட்டும் பேசி சாய்ந்தமருது மக்களையும் அவர்களின் நகர சபை கோரிக்கையையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவது இனியும் ஏற்புடையதாக இருக்காது. அது அவரது அரசியலுக்கு ஆரோக்கியமானதுமல்ல.

எனவே, இன்னும் இன்னும் சாய்ந்தமருது மக்களை ஏமாற்றி அரசியல் நடத்த முனையாமல், சாய்ந்தமருது நகர சபை விடயத்தில் இருந்து அதாவுல்லா முழுமையாக ஒதுங்கிக் கொள்ள வேண்டும்..

அல்லது தனது வெற்றிக்கு பங்களிப்பு செய்த சாய்ந்தமருது மக்களின் சுமார் 9000 வாக்குகளுக்காவது, அதற்கு பரிகாரமாக தனது மிகுதி இரண்டரை வருட கால எம்பி பதவியை சாய்ந்தமருதுக்கு வழங்கி நன்றி செலுத்த முன்வர வேண்டும்.

சாய்ந்தமருது மக்கள் அதாவுல்லா  மீது நம்பிக்கை இழந்து விட்டனர் என்பதை அந்த ஊரைச் சேர்ந்தவன் என்பதில் என்னால் உறுதியாக கூற முடியும். எமது மக்கள் தமது நகர சபை விடயத்தில் அதாவுல்லாவை இனியும் நம்பத் தயாரில்லை. அவரது பசப்பு வார்த்தைகளுக்கு அவர்கள் இனியும் ஏமாற மாட்டார்கள் என்பது திண்ணம்.

அதேபோல், சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகமும் இனியும் பள்ளிவாசல் என்ற போர்வையில் மக்களை ஏமாற்ற முனையாது, பள்ளிவாசல் பரிபாலன வேலைகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றும் யஹியாகான் குறிப்பிட்டுள்ளார்.

Monday, March 28, 2022

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் நிதி உதவி..!


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைமைத்துவத்தின் முதல் வேலைத் திட்டமாக பொலன்னறுவை கிரிதல பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 56 வருடங்களுக்கு மேல் ஊடகத்துறையில் பணியாற்றி வரும் மூத்த ஊடகவியலாளர் எம்.எல்.ஏ.ரஷீத் கையில் ஏற்பட்டுள்ள உபாதைக்கான சத்திர சிகிச்சைக்காக ஒரு தொகை பணம் கையளிக்கப்பட்டது. 

இந்த பணத்தை போரத்தின் பொதுச் செயலாளர் எம்.ஜே.பிஸ்ரின் முஹம்மத் அவரது இல்லம் சென்று கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

கல்வியில் திறமையை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்களின் பிள்ளைகள் பாராட்டி கௌரவிப்பு..!


-யூ.கே.காலித்தீன்-

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மாதாந்த ஒன்றுகூடலும் போரத்தின் ஊடகவியலாளரின் பிள்ளைகள் பல்வேறு துறைகளில் சிறப்பு சித்தி பெற்றமைக்காக அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்றும் பொத்துவில் வுலு வேயா விடுதி ஒன்றில் போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அல்ஹாஜ் எம்.ஏ.பகுர்டீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சமய அனுஷ்டானத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், அண்மையில் காலமான ஒன்றியத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர் அமரர் இ.நடராஜன் அவர்களுக்காக இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.

போராத்தின் உறுப்பினர்களான கே.எல்.அமீர் அவர்களின் புதல்வி அமீர் பாத்திமா இனபா இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டமைக்கும் எம்.எஸ்.மலீக் அவர்களின் புதல்வர் அப்துர் றஹ்மான் மற்றும் மற்றுமொரு உறுப்பினர் எம்.எச்.கலீபாவின் புதல்வி எம்.கே.ஜுமானா ஹசீன் ஆகியோர் 2020 ஆண்டு நடைபெற்ற க.பொ.த சா/தரப் பரீட்சையில் 9ஏ சித்திகளை பெற்றமைக்கும் ஞாபக சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு, போராத்தின் உறுப்பினர் பீ.முஹாஜிரீன் அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் பாடலாக்கத்திற்கான சிறப்பு பரிசில் பெற்றமைக்காக பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி கே.எல்.நக்பர் சிறப்புரையையும், இப்போராத்திற்கு எதிர்காலத்தில் தன்னால் முடியுமான சகல விதமான உதவிகளையும் செய்வதாக தெரிவித்ததுடன், கெளரவிக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் கல்வி செலவுகளுக்காக ஆரம்ப கட்ட நிதியுதவியையும் வழங்குவதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் உறுப்பினர்களின் நலன் கருதியும் தற்போது நாட்டில் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு எதிர்காலத்தில் இப் பேரவையானது சமூக செயற்பாடுகளிலும் உதவி புரிய வேண்டுமென்றும் முடிவுகளும் எட்டப்பட்டு அதற்காக பூர்வாங்க செயற்பாடுகளும் முன்மொழியப்பட்டது.



Sunday, March 27, 2022

ஆசிரியர் எம்.எம்.எம்.உவைஸ் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா..!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

விஞ்ஞான பாட ஆசிரியர் எம்.எம்.எம். உவைஸ் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா நாளை திங்கட்கிழமை (28) சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும்.

பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எம். நிசார் தலைமையில் நடைபெறும் இந்நூல் வெளியீட்டு விழாவில், சாய்ந்தமருது கோட்டக்கல்விப்பணிப்பாளர் என்.எம்.ஏ.மலிக் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் அதிபர் எம்.ஐ.சம்சுதீன், சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். அதிபர் எம்.ஐ. இல்லியாஸ், கல்முனை அல்-ஸுஹறா அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜீதிய்யா, லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் பிரதி அதிபர் எஸ்.எம்.சுஜான் ஆகியோர் இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொள்வதோடு,  சேவைக்கான ஆசிரிய ஆலோசகர் (விஞ்ஞானம்) எம்.எஸ். சஹ்துல் அமீன் விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கிறார்.


Saturday, March 26, 2022

ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் கிரீன் பீல்ட் பள்ளிவாசல் மீள்நிர்மாணப் பணி ஆரம்பம்..!


(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை கிரீன் பீல்ட்  வீட்டுத் திட்டத்தில் அமைந்துள்ள முகைதீன் பள்ளிவாசலை வை.டபிள்யூ.எம்.ஏ. நிறுவனத்தின் அனுசரணையுடன் மீள்நிர்மாணம் செய்வதற்கு கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென முதற்கட்டமாக 10 இலட்சம் ரூபாவை குறித்த நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இம்மீள்நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

ரஹ்மத் பவுண்டேஷன் தலைவரும் கல்முனை மாநகர சபை பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வை.டபிள்யூ.எம்.ஏ. நிறுவனத்தின் சார்பில் துவான் நஜீம் காசிம், ஹுசைன் காசிம், கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, கல்முனை முஹைதீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அசீஸ், கிரீன் பீல்ட் முஹைதீன் பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் டி.ஏ.மஜீத், செயலாளர் எம்.எச்.ஏ.கரீம், பொருளாளர் ஏ.எம்.றியாஸ் உட்பட உலமாக்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது முதற்கட்ட நிதி 10 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலை, பள்ளிவாசல் நிருவாகத்தினரிடம் கையளிக்கப்பட்டதுடன் விசேட துஆப் பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2004ஆம் இடம்பெற்ற சுனாமி பேரனர்த்தம் காரணமாக உயிர், உடமைகள், வீடு, வாசல்களை இழந்து நிர்க்கதியான சுமார் 450 குடும்பங்களுக்கென உருவாக்கப்பட்ட கிரீன் பீல்ட்  வீட்டுத் திட்டத்தில் தொழுகைக்காக சிறியளவில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இப்பள்ளிவாசல் கடந்த சில காலங்களாக இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை புனரமைப்பு செய்வதற்கு உதவுமாறு ரஹ்மத் மன்சூரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளையேற்று, அவர் இதற்கான முயற்சிகளை துரிதமாக மேற்கொண்டிருந்தார்.

இதன் பிரகாரம் இப்பள்ளிவாசலை மீள்நிர்மாணம் செய்வதற்கு அனுசரணை வழங்க முன்வந்த வை.டபிள்யூ.எம்.ஏ. நிறுவனம் மற்றும் அதன் தலைவி வவாஷா தாஹா உள்ளிட்ட நிர்வாகத்தினருக்கு இதன்போது அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டார்.















Monday, March 21, 2022

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நடப்பாண்டுக்கான முதல் செயற்குழு கூட்டமும் நிர்வாகிகள் தெரிவும்..!


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நடப்பாண்டுக்கான (2022-2023) புதிய செயற்குழுவின் முதல் கூட்டம் கொழும்பில் (20) ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.

போரத்தின் புதிய தலைவி புர்கான் பீ இப்திகாரின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.

இத்தெரிவில், உப தலைவர்களாக எம்.ஏ.எம் நிலாம், கலைவாதி கலீல், உப செயலாளர்களாக சாதிக் ஷிஹான், ஜாவித் முனவ்வர், உதவி பொருளாளராக ஜே.எம்.நாளிர், தேசிய அமைப்பாளராக மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா, ஊடக இணைப்பாளராக எம்.எஸ்.எம். ஸாகிர்,  சஞ்சிகை ஆசிரியர்களாக ஷாமிலா செரீப், ஷம்ஸ் பாஹிம், பயிற்சிப்பிரிவு பிரதானியாக சமீஹா சபீர், இணையத்தள ஆசிரியராக டீ.ஜீ.எம்.எஸ்.எம் ராபி, ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டதோடு, கலாநிதி எம்.சி.ரஸ்மின், எம்.பி.எம்.பைறூஸ், எஸ்.அஸ்கர்கான், எம்.சி.றசூல்டீன், நிலார் எம்.காஸிம் ஆகியோர் ஆலோசகர்களாகவும், யூ.எம்.நஜீம், ரஷீட்.எம்.இம்தியாஸ், ஏ.எம்.வைஸ் ஆகியோர் சட்ட ஆலோசகர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

இச்செயற்குழு கூட்டத்தின் போது தலைவிக்கு உள்ள அதிகாரத்தில் தாஹா முஸம்மில், ஷம்ஸ் பாஹிம் ஆகியோர் செயற்குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டதோடு, இவ்வருடத்துக்கான பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

அத்தோடு, பேராளர் மாநாட்டின் போது அதிகளவான உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் தலைவர் என்.எம் அமீன் செயற்குழுவில் இணைக்கப்பட்டார் 

இந்த வருடத்தின் முதல் இரண்டு வேலைத்திட்டங்களாக 56 வருடங்களுக்கு மேல் ஊடகத்துறையில் பணியாற்றி வரும்  பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த சுகவீனமுற்றுள்ள மூத்த முஸ்லிம் ஊடகவியலாளர் ஏ.எம். ரஷீதுக்கு பண உதவி வழங்குதல், 25 மாவட்டங்களையும் சேர்ந்த புதிய ஐம்பது ஊடகவியலாளர்களுக்கான ஆறு மாதகால தொடர் பயிற்சி வழங்குதல் என்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் போரத்தின் புதிய செயலாளர் எம்.ஜே.பிஸ்ரின் முஹம்மத் தெரிவித்தார்.

கடந்த 12 ஆம் திகதி கொழும்பில் இடம் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பேராளர் மாநாட்டின் போது புதிய தலைவியாக சிரேஷ்ட ஒலிபரப்பாளர் புர்கான் பீ இப்திகார், பொதுச் செயலாளராக சர்வதேச விருது வென்ற ஊடகவியலாளர் எம்.ஜே. பிஸ்ரின் முஹம்மத், பொருளாளராக ரொயிட்டர்ஸ் செய்தியாளர் சிஹார் அனீஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக சாதிக் ஷிஹான், ஜெம்சித் அசீஸ், எம்.ஏ.எம் நிலாம், கலைவாதி கலீல், ஜாவித் முனவ்வர், எஸ்.எம்.எம். முஸ்தபா, நுஸ்கி முக்தார், எம்.எப். ரிபாஸ், ஷாமிலா செரீப், சமீஹா சபீர், எம்.எஸ்.எம் ஸாகிர், டீ.ஜீ.எம்.எஸ்.எம் ராபி, எம்.எம். ஜெஸ்மின், ஜே.எம். நாளிர், சீ.எம். சுபைர் ஆகிய 18 பேர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் சம்மந்துறை கைகாட்டி வாய்க்காலுக்கு மேம்பாலம்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சம்மந்துறை புளக் ஜே- வெஸ்ட் வண்டு வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல், அன்வர் இஸ்மாயில் வித்தியாலயம் மற்றும் மையவாடி என்பவற்றை ஊடறுத்துச் செல்லும் கைகாட்டி பிரதான வாய்க்காலுக்கு மேம்பாலம் அமைக்கும் வேலைத்திட்டம் கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பின் மஷூரா குழுத் தலைவர் ஹாபிழ் எம்.இர்பான் தலைமையில் நேற்று இடம்பெற்ற அடிக்கல் நடும் நிகழ்வில் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் ஏ.காதர், நீர்ப்பாசன தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.யாகூப் உட்பட பலாஹ் பள்ளிவாசல் நிர்வாகத்தினர், சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த மேம்பாலம் அமைக்கப்படுவதன் மூலம் பாடசாலை, பள்ளிவாசல் மற்றும் மையவாடி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் மாணவர்கள் உட்பட பொது மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் எனவும் இதற்காக துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட ரஹ்மத் மன்சூருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டதுடன் விசேட துஆப் பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.  

இத்திட்டத்திற்கு வை.டபிள்யூ.எம்.ஏ. நிறுவனம் முழுமையான அனுசரணை வழங்கி வருவதாகவும் குறுகிய காலத்தினுள் மேம்பால நிர்மாண வேலைகள் பூர்த்தி செய்யப்படும் எனவும் ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகத் தலைவர் ரஹ்மத் மன்சூர் இதன்போது தெரிவித்தார்.

இந்த நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் பொது மக்களுக்குத் தேவையான பல்வேறு மனித நேய சமூகப் பணிகள் தமது அமைப்பின் ஊடாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Wednesday, March 16, 2022

கலாநிதி வி.ஜனகனுக்கு 'சாதனைத் தமிழன்' விருது; இந்தியாவில் பாராட்டி கௌரவிப்பு..!


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

உலகத் தமிழர் வம்சாவளி அமைப்பின் 8ஆவது ஆண்டு சர்வதேச மாநாட்டு நிகழ்வில் 2021 ஆம் ஆண்டுக்கான 'சாதனைத் தமிழன்' விருதினை  கலாநிதி வி ஜனகன், தமிழ்நாடு அமைச்சர் கே.ரி. மஸ்தானிடமிருந்து பெற்றுக் கொண்டார். 

பாரளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இந்தியாவின் VIT பல்கலைக்கழகத்தின் தலைவர் கலாநிதி ஜீ.விஸ்வநாதனின் முன்னிலையில் இந்த கௌரவ விருது வழங்கப்பட்டது. 

உலகத் தமிழர் வம்சாவளி அமைப்பானது ஆண்டு தோறும் உலகம் முழுவதும் பரந்துவாழும் தமிழர்களை ஒன்றிணைத்து சர்வதேச மாநாடுகளை நடாத்தி, திறமையான தமிழர்களை அடையாளப்படுத்துவதும், அவர்களுக்கான விருதுகளையும் வழங்கி வருகின்றது. அந்தவகையில் 2021 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மாநாடு சென்னையில் சர்வதேச வர்த்தக மண்டபத்தில் (11) இடம்பெற்றது. 

இந்த மாநாட்டில் உலகத்தில் பல பாகங்களில் இருந்து தமிழ் தலைவர்களும் தமிழ் வர்த்தக பிரமுகர்களும் மற்றும் கல்வியாளர்களும் பங்குபற்றியிருந்தனர். 

இந்நிகழ்வில், இலங்கையில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடத்துறை சார்ந்த பிரதானிகளும் பங்குபற்றியிருந்தனர். 

கலாநிதி வி. ஜனகனின் பெயரினை 'சாதனைத் தமிழன்' விருதிற்கு உலகத் தமிழர் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வக்குமார் பரிந்துரை செய்திருந்தார். இந்நிகழ்வில், இலங்கை உட்பட உகத்தில் பல நாடுகளில் இருந்து வந்திருந்த தமிழர்கள் பல்வேறு துறைகளில் விருதுகளைப் பெற்றனர் என்பது இங்கு சிறப்பான விடயமாகும். இந்நிகழ்வில், பல்வேறு கலை நிகழ்வுகளும் ஒன்றுகூடல்களும் இடம்பெற்றன. 

இச்செயற்பாட்டை கடந்த 8 ஆண்டுகளாக உலகில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களை அடையாளப்படுத்தி, அவர்களின் திறமைகளை பறைசாற்றும் வகையில் விருதுகளையும் கௌரவங்களையும் இந்த அமைப்பு வழங்கி வருகின்றது. மேலும், இச்செயற்பாடு இனிவரும் ஆண்டுகளில் தொடரும் எனவும அமைப்பின் தலைவர் செல்வக்குமார் குறிப்பிட்டார்.

நெருக்கடிக்கு நான் காரணமல்ல; எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினாலேயே இக்கட்டான நிலைமை ஏற்பட்டது..!


கொவிட் தொற்றினால் அதிகரித்த கப்பல் கட்டணங்கள், பொருட்களின் விலை அதிகரித்தல் மற்றும் சில பொருட்களின் தட்டுப்பாடு ஆகிய அனைத்தும் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு இன்று (16) ஆற்றிய விசேட உரையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

அதில் அவர் மேலும் தெரிவித்தாவது, 

இன்று ஒரு சவாலான நேரத்தில் நான் உங்களிடம் உரையாற்றுகிறேன். உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன். 

எரிவாயு தட்டுப்பாடு அதே போன்று, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின் வெட்டு போன்ற பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன். கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்கள் அனுபவித்த பல இன்னல்கள் குறித்தும் நான் நன்றாக உணர்ந்துள்ளேன். 

அதற்காக எங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் நாம் செய்தாலும், எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இந்த நிலைமை தொடரும் என்பதை நான் அறிவேன்.

நான் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பேற்கிறேன். பொதுமக்கள் அனுபவிக்கும் ஒரு சில சிக்கலான வாழ்க்கை முறைகளுக்கு தீர்வு காண இன்று நான் கடுமையான முடிவுகளை எடுக்க உறுதிபூண்டுள்ளேன். 

அதற்கு உதவ தேசிய பொருளாதார சபையையும், அதற்கு ஒத்துழைப்பு வழங்க ஒரு ஆலோசனைக் குழுவையும் நியமித்தேன். இதன் மூலம், நான் எடுக்கும் முடிவுகள் செயற்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுப்பேன். 

எனவே, மக்களுக்காக நான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் நம்பிக்கை வைக்குமாறு நான் உங்களை முதலில் கேட்டுக்கொள்கிறேன்.

நான் மக்களின் சிரமங்களை நன்கு அறிந்த ஒருவர். நாங்கள் எதிர்கொண்ட கொடூரமான பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் முன்னணியில் இருந்த படைவீரர் மற்றும் யுத்தத்தில் சிக்கிய அப்பாவி பொது மக்கள் எதிர்கொண்ட அனைத்து சிரமங்களையும் நன்கு புரிந்து கொண்டு அவற்றை முறையாக நிர்வகிக்க என்னால் முடிந்தது.

இன்றைய இக்கட்டான நிலைமை, நம் நாடு மட்டும் முகங்கொடுக்கும் ஒரு விடயமல்ல. முழு உலகமும் ஏதோ ஒரு வகையில் ஒரு சிக்கலான சூழ்நிலையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. 

கொவிட் நோய்த் தொற்றினால் அதிகரித்த கப்பல் கட்டணங்கள், பொருட்களின் விலை அதிகரித்தல் மற்றும் சில பொருட்களின் தட்டுப்பாடு ஆகிய அனைத்தும் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. ஆனாலும் நாம் மக்களின் பக்கம் நின்று  நிவாரண நடைமுறைகளைப் பின்பற்றுகிறோம்.

இந்த நெருக்கடி ஒரு போதும் என்னால் உருவாக்கப்பட்டதொன்று அல்ல. அன்று இந்த நெருக்கடியை உருவாக்குவதற்கு காரணமானவர்கள் இன்று மக்கள் முன்னிலையில் அரசாங்கத்தை விமர்சித்து வரும் நிலையில், இந்த நெருக்கடியை விரைவில் தீர்த்து மக்களுக்கு நிவாரணம் வழங்கவே நான் முயற்சிக்கிறேன்.

இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், ஒரு நாட்டின் அரசியல்வாதிகளினதும் புத்திஜீவிகளினதும் பொறுப்பு ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்கு கூட்டாக தீர்வு காண்பதேயாகும். 

இன்றைய பிரச்சினைகளுக்கு மூலகாரணம் நமது அந்நிய செலாவணி நெருக்கடி ஆகும்.

ரூபாய் நெகிழ்வுடன் இயங்குவதற்கு இடமளிக்கப்பட முன்னர் இருந்த நிலைமையின் பிரகாரம், இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்கள் ஆகும். 

கடந்த இரண்டு மாத கால தரவுகளின்படி, இந்த ஆண்டு 22 பில்லியன் டொலர்கள் இறக்குமதி செலவை நாம் ஏற்க வேண்டியுள்ளது. அதன்படி, 10 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகப் பற்றாக்குறை உருவாகும்.

அண்மைக்கால தரவுகளின்படி, இந்த ஆண்டு சுற்றுலாத்துறையிலிருந்தும் அதேபோன்று தகவல் தொழிநுட்பம் போன்ற சேவை ஏற்றுமதியில் இருந்தும் சுமார் 03 பில்லியன் டொலர்கள் கிடைக்கக்கூடியதோடு, வெளிநாட்டு தொழிலாளர்களின் பரிமாற்றம் மூலம்  02 பில்லியன் டொலர்கள் கிடைக்கும். அதன்படி, வர்த்தகப் பற்றாக்குறை 05 பில்லியன் டொலர்களாக இருக்கும்.

இதற்கிடையில், இந்த ஆண்டு 6.9 பில்லியன் டொலர் கடன் தவணைகள் மற்றும் இறையாண்மை பத்திரங்களுக்கு செலுத்தப்பட வேண்டும். அப்போது 11.9 பில்லியன் டொலர் பற்றாக்குறை ஏற்படும்.

ஏனைய கடன் உதவிகள் மற்றும் முதலீடுகளாக 2.5 பில்லியன் டொலர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வகையில் அந்நியச் செலாவணியில் மொத்தம் 9.4 பில்லியன் டொலர் பற்றாக்குறை காணப்படுகின்றது.

ஆனால் ரூபாய் நெகிழ்வின் பின்னர் ஏற்றுமதி வருமானம் 13 பில்லியன் டொலர்கள் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இறக்குமதி செலவை 22 பில்லியன் டொலரில் இருந்து 20 பில்லியன் டொலர்கள் வரை குறைத்துக் கொள்ளவும் முடியும். 

அப்படியானால், வர்த்தக பற்றாக்குறையை 07 பில்லியன் டொலர்கள் வரை குறைக்க முடியும். அதைத்தான் நாம் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.

அதேபோன்று, சேவை ஏற்றுமதியின் மூலம் 04 பில்லியன் டொலர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களின் பரிமாற்றம் மூலம் 05 பில்லியன் டொலர்களையும் எதிர்பார்க்கலாம். அதன்படி, நமது வர்த்தக பற்றாக்குறை 2.4 பில்லியன் டொலர்கள் ஆகும்.

இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், நமது அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும் நாம் செயற்பட வேண்டும்.

இதற்காக, சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் எங்களது கடன் தவணையை திருப்பிச் செலுத்துவது குறித்து நாம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம். 

இதனை எமது நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் புதிய பொறிமுறையின் மூலம்  செயற்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி வருகின்றது. சர்வதேச நாணய நிதியத்துடனான நேற்றைய கலந்துரையாடலும் இந்த நோக்கத்துடனேயே இடம்பெற்றது.

அந்த கலந்துரையாடல் மூலம் நாம் எதிர்பார்ப்பது, ஒரு வருடத்துக்கு நாங்கள் செலுத்த வேண்டிய கடன் தவணைகள், இறையாண்மை பத்திரங்கள் ஆகியவற்றைச் செலுத்துவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதாகும். 

சர்வதேச நாணய நிதியத்துடனான எனது கலந்துரையாடலுக்குப் பிறகு, அனுகூலங்கள், பிரதிகூலங்களை ஆய்வுசெய்து அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு நான் முடிவு செய்தேன்.

கடந்த காலத்தில் நான் எடுத்த சில முடிவுகளால் இறக்குமதிச் செலவை பெருமளவு கட்டுப்படுத்த முடிந்தது. இந்த பிரச்சினையை முன்கூட்டியே கண்டுகொண்டதால் இரண்டு ஆண்டுகளுக்கு முன், வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம். 

மேலும், உள்நாட்டில் நமது தேவைகளை பூர்த்தி செய்யும் கைத்தொழில்களை ஊக்குவித்தோம். அதேபோன்று, பல அத்தியாவசியமற்ற உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு, அந்த பயிர்களை நம் நாட்டில் பயிரிடுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். அவற்றின் வெற்றிகரமான முடிவுகளை இப்போது காண்கிறோம்.

இறக்குமதிச் செலவைக் கட்டுப்படுத்துவதில் நாம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான பிரச்சினை, உலகச் சந்தையில் எண்ணெய் விலைகள் வேகமாக அதிகரிப்பதாகும். சராசரியாக, நமது இறக்குமதிச் செலவில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படுகிறது. 

கடந்த சில மாதங்களில் மட்டும் உலக சந்தையில் எரிபொருளின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது. 

இதனால்தான் நம் நாட்டிலும் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. நம் நாட்டில் வாகனங்களுக்கு மட்டுமின்றி மின்சார உற்பத்திக்கும் எரிபொருள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

அதனால்தான், முடிந்தவரை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களைப் பயன்படுத்த நான் தொடர்ந்தும் கலந்துரையாடி குறித்த நிறுவனங்களை ஊக்கப்படுத்தினேன்.

எனவே எரிபொருள் மற்றும் மின்சாரப் பாவனையை இயன்றவரை கட்டுப்படுத்துவதன் மூலம் மக்களும் இந்த நேரத்தில் நாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும். 

இந்தக் கடினமான நேரத்தில் அந்தப் பொறுப்பை நீங்கள் புரிந்துகொண்டு செயற்படுத்துவீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

கொவிட் தொற்றுநோய் காரணமாக வீழ்ச்சியடைந்த சுற்றுலா கைத்தொழில் மீண்டும் எழுச்சிபெற்று வருகின்றது. கடந்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. 

அதேபோன்று, தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் துரிதப்படுத்துவதால், இத்துறைகள் மூலம் நாட்டுக்கு வரும் வருமானம் அதிகரித்து வருகிறது.

நாம் வரலாற்றில் பலமுறை வீழ்ந்து, எழுந்த தேசம் ஆகும். அந்நிய படையெடுப்பு, பெரும் பஞ்சம், இயற்கை அனர்த்தங்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் போன்றவற்றை நாம் எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டுள்ளோம்.

கடந்த கொரோனா நோய்த் தொற்றை நாம் எதிர்கொண்ட விதம் சர்வதேச அமைப்புகளால் கூட பாராட்டப்பட்டது.

தீர்வுகளை நடைமுறைப்படுத்தும்போது சில காலம் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே, நீங்கள் அனைவரும் தைரியத்தை இழக்காமல் இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஒரு தேசமாக ஒன்றிணையுமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் என்னிடம் பாதுகாப்பு, ஒழுக்கம், நவீனமயமான அபிவிருத்தி அடைந்த நாடு, குழந்தைகளுக்கு சிறந்த கல்வி ஆகியவற்றையே கேட்டீர்கள். 

எனது பதவிக்காலத்தில் ஏறக்குறைய இரண்டரை வருடங்கள் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் தொற்று நோயிலிருந்து பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டது. ஆரோக்கியமான தாய் நாட்டில் எனது எதிர்கால பதவிக்காலத்தை அந்த அடிப்படை இலக்குகளுக்காக அர்ப்பணிப்பேன்.

அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் அரச ஊழியர்களிடமும் நான் கேட்டுக் கொள்வது, எமது பிள்ளைகளுக்கு சிறந்த நாட்டை வழங்குவதற்காக, எம்மிடம் எதிர்பார்த்த இலக்குகளை அடைந்துகொள்ள நாம் ஒரு குழுவாக இலட்சியத்துடனும் தியாகத்துடனும் செயற்படுவதையே ஆகும். 

உங்கள் அழைப்பின் பேரிலேயே நான் அரசியலுக்கு வந்தேன். நீங்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையை பாதிக்கும் வகையில் செயற்படாது, அர்ப்பணிப்புடன் பாதுகாப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Monday, March 14, 2022

மூடு விழா காணவிருந்த கல்முனை அஸ்-ஸுஹராவில் வரலாற்று சாதனை..!

(சர்ஜுன் லாபீர்)

கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தின் வரலாற்றிலேயே இம்முறை 6 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று பாடசாலைக்கு பெருமை ஈட்டிக் கொடுத்ததோடு, வரலாற்று சாதனையையும் படைத்துள்ளனர்.

இதுவரை காலமும் இப்பாடசாலையில் 4 மாணவர்கள் மட்டுமே பாடசாலை வரலாற்றில் அதிகூடிய சித்தியடைந்த மாணவர்களாக காணப்பட்டனர்.

இப்பாடசாலைக்கு மாணவர்களின் புதிய அனுமதியின்மை குறைபாடு,க ற்றல் செயற்பாடுகளில் மாணவர்களின் ஆர்வமின்மை போன்ற பல காரணங்களினால் மூடுவிழா காண இருந்த இப்பாடசாலை கடந்த 2020ம் ஆண்டு புதிய அதிபராக கடமையேற்ற எம்.எஸ்.எச்.ஆர் மஜிதியாவின் ஆளுமையினாளும், திறமையினாலும் பாடசாலை ஆசிரியர்களின் அயராத உழைப்பினாலும், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்களின் ஒத்துழைப்புக்களினாலும் குறுகிய காலத்திற்குள் 6 மாணவர்களை புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தி பெற வைத்து வெற்றபெற வைத்தமை பாராட்டத்தக்க வரலாற்று நிகழ்வாகும்.

கல்முனை முஸ்லிம் கல்விக் கோட்டத்தில் முன்னணி ஆரம்பக் கல்வி பாடசாலையாக திகழும் இப்பாடசாலையின் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர் மஜிதியாவின் வழிகாட்டலினாலும், பெற்றோர் ,ஆசிரியர் மாணவர்களின் அயராத முயற்சியினாலும் பெறப்பட்டுள்ள இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்த அனைவருக்கும் பாடசாலை சமூகத்தினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் இப்பாடசாலையில் பெளதீக வள தேவைகள் அதிகமாக காணப்படுவதனால் பாடசாலை அபிவிருத்தி குழுவினர் கடும் கஸ்டங்களுக்கு மத்தியில் தனவந்தர்கள் மற்றும் பெற்றோர்களை கொண்டு இரண்டாம் மாடி கட்டிடத்தில் 04 வகுப்பறைகளைக் கட்டி முடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

எனவே, அதற்கான ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் ஊர் நலன் விரும்பிகள் முன்வந்து தந்துதவுமாறு பாடசாலை சமூகம் வேண்டுகோள் விடுக்கின்றது.

Tuesday, March 8, 2022

பஸில் ராஜபக்சவின் தேசிய அரசு கோட்பாடு சிறுபான்மையினருக்கு நம்பிக்கையான எதிர்காலத்தை தோற்றுவிக்கும்; கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி விழாவில் மு.கா. எம்.பி. ஹரீஸ் வரவேற்பு..!


(அஸ்லம் எஸ்.மௌலானா)

அரசு மீது சுமத்தப்பட்டிருக்கின்ற இனவாத சாயத்தை இல்லாமல் செய்வதற்காக சகல சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளை உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் பஸில் ராஜபக்ச முன்வைத்திருக்கும் கோட்பாடானது சிறுபான்மையினருக்கு நம்பிக்கையான எதிர்காலத்தை தோற்றுவிக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இன்று செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற தேசிய பாடசாலை பிரகடன நிகழ்வு மற்றும் சர்வதேச மகளிர் தின வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கல்லூரி அதிபர் யூ.எல்.ஏ.அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஹரீஸ் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்;

இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய பல விடயங்கள் கடந்த ஒரு சில வாரங்களாக இடம்பெற்று வருகின்றன. ஏனென்றால் இந்த நாட்டின் அரச கட்டமைப்பு என்பது இன்று ரஷ்ய, உக்ரைன் போர் காரணமாக விரும்பியோ விரும்பாமலோ புதிய சிந்தனைக்குள் காலடி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதன் விளைவு எங்களுடைய சிறுபான்மை சமூகங்கள் சம்மந்தப்பட்ட விடயங்கள் ஆட்சியாளர்களின் பார்வைக்குள் கிரமமாக வந்து கொண்டிருக்கின்றன, அதன் அடிப்படையில்தான் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச அவர்கள் புதிய கோட்பாடு ஒன்றை முன்வைத்திருக்கிறார்.

சகல சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளை உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற அழைப்பை அவர் விடுத்திருக்கின்றார்.

இதன் மூலம் அரசு மீது சுமத்தப்பட்டிருக்கின்ற இனவாத சாயத்தை முற்றாக இல்லாமல் செய்ய வேண்டும் என்ற ஒரு கருத்திட்டத்தை அமைச்சர் பஸில் ராஜபக்ச முன்வைத்திருக்கிறார்.

இந்த விடயம் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையிலேயே கொரோனாவால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அவரவர் சொந்த பிரதேசங்களில் உள்ள மையவாடிகளில் அடக்கம் செய்யலாம் என்கிற அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது.

உண்மையில் எமது நாடு இப்போது எதிர்நோக்கியிருக்கின்ற பொருளாதார நெருக்கடி தீர்க்க்கப்பட வேண்டுமானால் இந்த நாடு அனைத்து சமாக்கத்தினரும் நிம்மதியாக வாழக்கூடிய ஒரு நாடாகவும் இனவாதமற்ற அரசாங்கமாகவும் மாற்றப்பட வேண்டும் என்கிற யதார்த்தம் உணரப்பட்டிருக்கிறது.

இவ்வாறான மாற்றம் ஏற்படுத்தப்படுகின்றபோதே இந்தியா, ஆசியா, ஐரோப்பிய மற்றும் அரபு நாடுகளின் உதவிகளைப் பெற்று, பொருளாதார பின்னடைவுகளை சீர்செய்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற பார்வையை ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் உள்ளிட்ட அரச உயர் மட்டம் இன்று உணர்ந்திருக்கிறது.

முஸ்லிம் சமூகம் ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட பல மோசமான, பூதாகரமான விடயங்களுக்கு முகம்கொடுத்தபோது பலரும் அஞ்சிய வேளையில், எந்த அரசாங்கமானாலும் பரவாயில்லை எமது சமூகப் பிரச்சினைகளை அவர்களுடன் பேசித் தீர்க்கலாம் என்ற நம்பிக்கையுடன் சமூகத்தின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் மிகவும் தைரியமாக நாங்கள் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்த நிலையிலேயே சிறுபான்மைச் சமூகங்கள் தொடர்பிலான அரசின் நிலைப்பாட்டில் அடுக்கடுக்காக மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த மாற்றத்தின் ஊடாக அரசுக்கு எமது சமூகத்தின் மீதான நல்லெண்ண பார்வை ஏற்படும் என்பதுடன் சமூகம் எதிர்நோக்கியிருக்கின்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கலாம். அவ்வாறே எமது பிராந்திய அபிவிருத்திகளுக்கும் அரசு சாதகமான வாய்ப்புகளை ஏற்படுத்தித்தரும் என நம்பிக்கை கொள்ள முடியும்- என்றார்.

இதன்போது இந்தோனேசிய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் முதலிடம் பெற்று, தக்கப் பதக்கம் வென்ற கல்லூரி மாணவி ஷைரீன் இனாம் மௌலானா மற்றும் தேசிய மீலாதுன் நபி தின பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி எம்.ஐ.மரீஹா ஆலியா ஆகியோர் அதிதிகளினால் நினைவுச் சின்னம், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் வெளியீடுகளுக்கான ஆணையாளர் நாயகமும் தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளருமான இஸட்.தாஜுதீன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திசாநாயக்க, மாகாணக் கல்விப் பணிப்பாளர் என்.புள்ளநாயகம், கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டிருந்ததுடன் கல்வி அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.