Tuesday, April 30, 2024

தொழிலாளர் விடுமுறைக்காக நாளை மூடப்படுகிறது கல்முனை மாநகர சந்தை.!

-அஸ்லம் எஸ். மெளலானா-

உலகளாவிய ரீதியில் தொழிலாளர்களுக்கான விடுமுறை தினமாக அனுஷ்டிக்கப்படுகின்ற மே தினமான நாளை (01) புதன்கிழமை கல்முனை மாநகர பொதுச் சந்தையை முழுமையாக மூடுவதற்கு இப்பொதுச் சந்தை வர்த்தக சங்கம் தீர்மானித்திருப்பதாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல். கபீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் முக்கிய பொருளாதார மையமாகத் திகழ்கின்ற கல்முனை மாநகர பொதுச் சந்தையின் வரலாற்றில் தொழிலாளர் சுதந்திர தினத்தை மையப்படுத்தி சந்தையை முழுமையாக மூடி தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்கப்படுவது இதுவே முதன்முறையான சந்தர்ப்பமாகும்.

கடந்த காலங்களில் இந்த சந்தையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மே தினத்தன்று விடுமுறை வழங்கப்படாமல் இருந்து வந்தமை அவர்கள் மத்தியில் மிகவும் கவலையை ஏற்படுத்தியிருந்தது. இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு இம்முறை அவர்களது உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இச்சந்தையை முழுமையாக மூடி, அனைத்து வியாபார நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கு சந்தை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.

ஆகையினால் இச்சந்தையின் முதுகெலும்பாகத் திகழ்கின்ற தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிப்பதற்காக கல்முனை மாநகர பொதுச் சந்தையில் தொழில் புரியும் முதலாளிமார்கள் இத்தினத்தன்று தமது வர்த்தக தளங்களை திறக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறு சந்தை வர்த்தக சங்கம் வலியுறுத்துக் கேட்டுக் கொள்கிறது- என்று அவர் மேலும் தெரிவித்தார்.



Monday, April 29, 2024

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலைக்கு முஷாரப் எம்.பி 02 மில்லியன் ஒதுக்கீடு.!

-ஏயெஸ் மெளலானா-

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையின் கூட்ட மண்டப நிர்மாண வேலைத் திட்டத்திற்காக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள், தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியில் இருந்து முதற்கட்டமாக இரண்டு மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.

பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு விடுத்த வேண்டுகோளை ஏற்று அண்மையில் பாடசாலைக்கு கள விஜயமொன்றை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பாடசாலையின் நீண்ட காலத் தேவையை நிறைவேற்றும் பொருட்டு அவர் இந்நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதற்காக பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் மற்றும் அவரது இணைப்புச் செயலாளரும் பாடசாலையின் பழைய மாணவருமான ஏ.எம். அஷாம் மெளலவி ஆகியோருக்கு இப்பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் சார்பாக அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த நிதி ஒதுக்கீட்டிற்கான வேலைகளை விரைவாக ஆரம்பித்து, நிறைவு செய்வதற்கு பல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற சாய்ந்தமருது பிரதேச  செயலாளர், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கும் அவர் விசேட நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.




Monday, April 8, 2024

அம்பாறை மாவட்ட உலமா சபையின் சர்வ சமய நல்லிணக்க இப்தார்.!







-அஸ்லம் எஸ்.மெளலானா-

அம்பாறை மாவட்ட ஜம்மியதுல் உலமா சபை ஒழுங்கு செய்திருந்த சர்வ சமயங்கள் ஊடாக சமூகங்களிடையே நல்லிணக்கத்திற்கான விசேட இப்தார் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (08) சாய்ந்தமருது சீபிரீஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட உலமா சபையின் தலைவர் மெளலவி ஐ.எல்.எம். ஹாஷிம் அவர்கள் தலைமையிலும் செயலாளர் மெளலவி ஏ.எல். நாஸிர் கனி அவர்களின் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் மருதமுனை தாருல் ஹுதா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபரான கலாநிதி எம்.எல். முபாறக் மெளலவி அவர்கள் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவை நிகழ்த்தினார்.

அத்துடன் பெரிய நீலாவணை மகா விஷ்ணு கோவில் குருக்கள் சிவசிறி மத்மலோஜன் இந்து சமய சொற்பொழிவையும் கல்முனை மெதடிஸ்த திருச்சபை முகாமைக்குரு அருட்திரு ரவி முருகப் பிள்ளை கிறிஸ்தவ சமய சொற்பொழிவையும் நிகழ்த்தினர்.

இவர்களது உரைகளின்போது அனைத்து சமயங்களும் சமூக ஒற்றுமை, சகவாழ்வு, நல்லிணக்கம், மனித நேயம் என்பவற்றையே வலியுறுத்துகின்றன எனவும் இவ்வாறான சமய, கலாசார நிகழ்வுகள் ஊடாக சமூகங்களிடையே பரஸ்பரம் புரிந்துணர்வு, ஒற்றுமை கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மருதமுனை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவரும் தேசிய கல்வியியல் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளருமான மெளலவி எப்.எம்.ஏ. அன்சார் மெளலானா நழீமி அவர்கள் நன்றியுரையை நிகழ்த்தினார்.

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் உலமாக்களுடன் மூவினங்களையும் சேர்ந்த கல்வியியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், சமயப் பிரமுகர்கள்
என பலரும் பங்கேற்றிருந்தனர்.



















Saturday, April 6, 2024

சம்மாந்துறையில் ரஹ்மத் பவுண்டேசனால் றமழான் அன்பளிப்பு.!

-அஸ்லம் எஸ். மெளலானா-

புனித றமழான் மாதத்தினை முன்னிட்டு கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் அமைப்பானது அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் நோன்பு திறக்கும் இப்தார் ஏற்பாடுகளையும் மனிதாபிமான உதவிகளையும் முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எம்.நிலுபா மற்றும் எஸ்.நளீம் ஆகியோர் மூலம் சம்மாந்துறையின் சில கிராமங்களில் அடையாளப்படுத்தப்பட்ட பயனாளிகளுக்கு சனிக்கிழமை (06) இந்த அமைப்பினால் பேரீச்சம்பழப் பொதிகள் வழங்கி வைப்பட்டுள்ளன.

பவுண்டேசன் ஸ்தாபகரும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவற்றை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களுடன் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை மத்திய குழுச் செயலாளரும் திடீர் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தருமான  ஏ.எஸ்.எம். அஸாருதீன் உட்பட நலன் விரும்பிகள், பயானாளிகள், பவுண்டேசன் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.














Thursday, April 4, 2024

முஷாரப் எம்.பி.யின் தலையீட்டினால் கிழக்கு மாகாண பாடசாலைகளின் கல்வி சாரா ஊழியர்களின் இடமாற்றம் இரத்து.!

கிழக்கு மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் கல்வி சாரா ஊழியர்களின் வருடாந்த இடமாற்றம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரபின் வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளின் ஆளணி விடயம் தொடர்பில் பொறுப்புடமையைக் கொண்டிராத கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் தலையீடு மற்றும் முறையான பதிலீடுகள் எதுவுமின்றி இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரை திங்கட்கிழமை (01) நேரடியாக சந்தித்து தெளிவுபடுத்திய பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்பட்ட இவ்விடமாற்றத்தை இரத்து செய்யுமாறு வலியுறுத்தியிருந்தார்.

இதையடுத்து கல்வி அமைச்சு விடுத்த அறிவுறுத்தலின் பேரில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் மேற்படி இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த இடமாற்ற உத்தரவு குறித்து கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.சி. திசாநாயக்க கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

-செயிட் ஆஷிப்

Monday, April 1, 2024

சாய்ந்தமருதில் மூன்றாவது நாளாக சுகாதாரத்துறை அதிரடி; நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிப்பு !


-நூருல் ஹுதா உமர்-

புனித நோன்பு காலங்களில் சுகாதாரமற்ற சிற்றுண்டிகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர் இன்று (01) மூன்றாவது தடவையாகவும் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றில் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டார். 

கடந்த காலங்களில் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றை பார்வையிட்ட அவர் உரிமையாளர்களுக்கும், உணவு தயாரிப்பவர்களுக்கும் சுகாதார நடைமுறைகளை பேணி உணவுகளை தயாரிக்குமாறும் உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி பேணுமாறும் ஆலோசனை வழங்கியதுடன் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார். 

அதனை ஒட்டியதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெரின், பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.அஸ்லம் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் சகிதம் சாய்ந்தமருது பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும், வினியோகம் செய்யும் உணவு நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் மீது திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்களில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகளும், வெயிலில் வைக்கப்பட்ட மற்றும் வடிகான்கள் மீது வைக்கப்பட்ட உணவுகள் கைப்பற்றப்பட்டது.

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, முறையான களஞ்சிய வசதி இல்லாத மற்றும் பழுதடைந்த உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. அதே போன்று சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க தேவையான மேலதிக ஒழுங்குகளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேற்கொண்டுள்ளது.











https://youtube.com/@MetroMirrorTV?si=o0FULFEpoAeChYQf

https://metromirrorlk.blogspot.com/?m=1

♦️www.metromirror-lk

♦️metromirrorweb@gmail.com

♦️WhatsApp 0779599929