Monday, January 16, 2023

கல்முனை மாநகர சபை ஐ.தே.க. முதன்மை வேட்பாளராக களமிறங்குகிறார் ஏ.எம்.ஜெமீல்..!

-முஹம்மட் கலீல்-

முன்னாள் கிழக்கு மாகாண சபையின் குழுத் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.

அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட இவர், அக்கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளராகவும் கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்பாளராகவும் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டிருக்கிறார். அத்துடன் கட்சியின் புத்திஜீவிகள் அமைப்பான United Professional Forum எனும் ஐக்கிய தொழில்வாண்மை பேரவையின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு கல்முனை மாநகர சபைத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு,  உறுப்பினராக தெரிவாகியிருந்த ஏ.எம்.ஜெமீல், 2008 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டி, இரு தடவைகள் மாகாண சபை உறுப்பினராகவும் 2012 முதல் 2015ஆம் ஆண்டு வரை மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவராகவும் பதவி வகித்திருந்தார்.

இக்காலப்பகுதியில் அக்கட்சியின் உயர் பீட உறுப்பினராக, இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளராக, சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளராக என்று பல்வேறு பொறுப்புகளை வசித்திருந்தார்.

2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்ட இவர், அக்கட்சி சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் வேட்பாளராக இடம்பெற்றிருந்தார்

அதனைத் தொடர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராகவும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தவிசாளராகவும் பதவிகளை வகித்திருந்தார்.

தற்போது ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து, கல்முனை மாநகர சபைக்கு அக்கட்சி சார்பில் பலமான அணியொன்றுடன் முதன்மை வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜெமீல், கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ், முஸ்லிம் பெரும்பான்மை உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஐ.தே.க. சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்.

Thursday, January 12, 2023

கட்சி மீதான பற்றுறுதியும் தலைமைத்துவ விசுவாசமும் மாவட்ட செயலாளர் வரை உயர்த்தியுள்ளது; சமால்தீனுக்கு மு.கா. தவிசாளர் அப்துல் மஜீட் வாழ்த்து..!

(கல்முனை செய்தியாளர்)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நீண்ட கால போராளியும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.சி.சமால்தீன் அவர்கள், அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டதையிட்டு தனது வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் உரித்தாக்குகிறேன் என்று அக்கட்சியின் தவிசாளரும் முன்னாள் வடக்கு- கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்துல் மஜீட் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

2023ம் ஆண்டுக்கான கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு செவ்வாயன்று (10.01.2023) மருதமுனையில் இடம்பெற்றது. இதன்போது கட்சியின் தேசிய தலைவராகவும் மாவட்ட செயற்குழுவின் தலைவருமாக விளங்குகின்ற ரவூப் ஹக்கீம் அவர்களினால் கட்சியின் மாவட்ட செயலாளர் நியமனம் அறிவிக்கப்பட்டது.

தனது பாடசாலைக் காலத்தில் இருந்தே கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட எனது அன்புக்குரிய சமால்தீன் அவர்கள் இன்று வரை கட்சியின் வளர்ச்சியில் தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தி வரும் ஒருவராவார்.

2006ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலத்தில் கட்சியை சிலர் நீதிமன்றங்களுக்கு கொண்டு சென்றபோது, கட்சி நெருக்கடி நிலையை சந்தித்தது, அவ்வேளையில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் அரசியல் அபிலாசைகளுக்கும் அப்பால் தலைமைத்துவத்தின் மீது கொண்ட அதீத விசுவாசமும் கட்சி மீது கொண்ட பற்றுறுதியும் அவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

இன்னும் இன்னும் கட்சிப் பதவிகளில் அவர் உயர்ந்து செல்ல வேண்டும் என்ற ஆசீர்வாதம் எப்போதும் என் இதயத்தில் உண்டு- என்று தவிசாளர் அப்துல் மஜீட் குறிப்பிட்டுள்ளார்.

Monday, January 9, 2023

கிழக்கு மாகாண ஜம்இய்யதுல் உலமா சபைக்கு ஜனாதிபதி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்புகிறோம்; அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா அறிக்கை..!


-எம்.எம்.அஸ்லம்-

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவி வகித்தபோது 2002ஆம் ஆண்டு இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அவர் தலைமையில் அரசு- புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த வேளையில், முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கப்பட மாட்டாது என்று கிழக்கு மாகாண ஜம்இய்யதுல் உலமாவுக்கு அவர் வழங்கியிருந்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்புகிறோம் என்று அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைப்பின் சார்பில் அதன் தலைவர் மெளலவி எஸ்.எச்.ஆதம்பாவா (MA), மௌலவி ஏ.எல்.நாசிர் கனி (MA) ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

கடந்த 11.10.2002ஆம் திகதியன்று கிழக்கு மாகாண ஜம்இய்யதுல் உலமாப் பிரதிநிதிகள் அதன் தலைவர் மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா அவர்கள் தலைமையில் பாராளுமன்றத்திலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்தித்து இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகப் பேசியபோது, இனப்பிரச்சினைக்கு
தீர்வு காணப்படும்போது முஸ்லிம்களுக்கு எவ்வித அநீதியும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாதென உறுதியளித்திருந்த அதேவேளை, அரசியல தீர்வு தொடர்பாக தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் தீர்வுத் திட்டங்களின் ஆவணத்தில் முஸ்லிம்களுக்குரிய தீர்வுத் திட்டமும்
உள்ளடக்கப்படுமென்றும் தெரிவித்திருந்தார். அந்த வாக்குறுதியை உரிய நேரத்தில் அவர் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கின்றோம்.

கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களில் இரண்டு மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நிலையில், இம்மாகாணம் வேறு எந்த மாகாணத்தோடும் இணைக்கப்படுவதை முஸ்லிம்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற விடயத்தை ஜனாதிபதிக்கு
சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இனப்பிரச்சினைக்கான தீர்வை ஏற்றுக் கொள்ளும் நாம், ஒரு சமூகத்தின்
பிரச்சினையைத் தீர்க்கப்போய் அதனால் மற்றொரு சமூகத்துக்கு பிரச்சினை ஏற்பட இடமளிக்கக் கூடாது என்ற விடயத்தையும் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம் என்று அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா மேலும் தெரிவித்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு நாளை கூடுகிறது..!

கல்முனை செய்தியாளர்

உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு நாளை செவ்வாய்க்கிழமை (10) கூடவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக மாவட்ட செயற்குழுவின் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.சி.சமால்தீன் அறிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு உள்ளூராட்சி சபையிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பாகவும் தேர்தலுக்கான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதில் கட்சியின் செயலாளர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மற்றும் தவிசாளர் ஏ.எல்.அப்துல் மஜீத் உட்பட கட்சியின் உயர்மட்ட முக்கியஸ்தர்களும் மக்கள் பிரதிநிதிகளும் பிரதேச அமைப்பாளர்களுக்கு கலந்து கொள்ளவிருகின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸின் மாவட்ட செயற்குழுவுவை புனரமைப்பு செய்யும் பொருட்டு, ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ள அங்கத்தவர்களுக்கு இக்கூட்டத்தில் பங்குபற்றுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Tuesday, January 3, 2023

தனியார் பல்கலைக்கழகத்திற்கு நிகராக கல்முனையில் உதயமாகிறது CMT Campus..!


கிழக்கு மாகாணத்தில் கடந்த 20 வருட காலமாக உயர்கல்வித் துறைக்கு பாரிய பங்களிப்பு செய்து வருகின்ற Comtech எனும் College of Management and Technology (CMT Campus) மலேசியாவின் முன்னணி பல்கலைக்கழகம் ஒன்றுடன் கூட்டிணைக்கப்பட்டு, தனியார் பல்கலைக்கழகத்திற்கு நிகராக கல்முனை மாநகரில் நாளை புதன்கிழமை (04) திறந்து வைக்கப்படவுள்ளது.

மலேசிய நாட்டின் மலாக்கா மாநிலத்தின் ஆளுநரும் மலேசியாவின் இரு முக்கிய பல்கலைக்கழகங்களின் வேந்தரும் மலாய் இஸ்லாமிய சர்வதேச செயலகத்தின் (DMDI) ஸ்தாபகத் தலைவருமான கலாநிதி துன் முஹமட் அலி ருஸ்தாம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இதனை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.

CMT Campus.தவிசாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் குழுத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்களின் விஷேட அழைப்பின் பேரிலேயே ஆளுநர் கலாநிதி துன் முஹமட் அலி ருஸ்தாம் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார்.

மலேசியாவின் முக்கிய அரசியல் தலைவரான கலாநிதி துன் முஹமட் அலி ருஸ்தாம் அவர்கள் ஆளுநர் பதவிக்கு முன்னதாக மலாக்கா மாநிலத்தின் முதலமைச்சராக மூன்று தடவைகள் பதவி வகித்திருக்கிறார்.

அத்துடன் மலேசியாவின் UNIMEL மற்றும் UTeM ஆகிய பல்கலைக் கழகங்களின் வேந்தராகவும் தற்போது பதவி வகிக்கிறார்.

இவற்றுள் UNIMEL பல்கலைக் கழகத்துடனேயே CMT Campus கூட்டிணைப்பு (Affiliated) செய்யப்பட்டுள்ளது.

பல தசாப்த காலமாக மலேசியாவின் அரசியல், கல்வி, வர்த்தகம் மற்றும் சமூகத் தளங்களில் முக்கிய புள்ளியாகத் திகழ்கின்ற ஆளுநர் துன் முஹமட் அலி ருஸ்தாம் அவர்களுடன் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மிகவும் நெருக்கமான நட்பினைக் கொண்டிருக்கின்ற கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்கள், இவரது அனுசரணையுடன் இலங்கையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு மலேசியாவில் உயர் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக கிழக்கு மாகாணத்தில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டுமென்ற தனது நீண்ட கால தூரநோக்கு சிந்தனையை சாத்தியப்படுத்திக் கொள்வதற்கான அடித்தளமாகவே ஏ.எம்.ஜெமீல் அவர்களினால் மலேசிய UNIMEL பல்கலைக்கழகத்துடன் கூட்டிணைப்பு செய்யப்பட்ட CMT Campus கல்முனையில் திறக்கப்படுகிறது.

மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் மூலமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை உருவாக்குவதில் முன்னின்று உழைத்த கலாநிதி ஏ.எம்.ஜெமீல், கிழக்கு மாகாணத்தில் முதலாவது தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவும் முயற்சியில் முனைப்புக்காட்டி வருகிறார்.

ஒரு சில புள்ளிகளால் பல்கலைக்கழக வாய்ப்பை இழக்கின்ற மாணவர்களையும் உயர் கல்விக்கும் தொழில்துறைகளுக்கும் முறையான வழிகாட்டல்களின்றி தடுமாறுகின்ற இளையோர்களையும் தனியார் பல்கலைக்கழகம் ஊடாக பட்டதாரிகளாக்கி, தொழில் தகைமையுள்ளோராக உயர் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற நீண்ட கால இலக்கு, இறைவன் உதவியுடன் தனது குருவான மலாக்கா ஆளுநர் துன் முஹமட் அலி ருஸ்தாம் அவர்கள் ஊடாக நிறைவேறும் என்று அவர் திடமாக நம்புகிறார்.

எமது நாட்டில் பல நிறுவனங்கள், வெளிநாட்டுப் பல்கலைக்கழக கற்கைகள் என்ற போர்வையில் போலியான பட்டங்களை வழங்கி, மாணவர்களை ஏமாற்றும் படலம் தொடர்கின்ற சூழ்நிலையில், உண்மையான பல்கலைக்கழகங்களுடன் கூட்டிணைப்பு செய்யப்பட்டிருக்கின்ற CMT Campus ஊடாக தொழில் தகைமையுடன் கூடிய அர்த்தமுள்ள பட்டப்படிப்புகளுக்கு மாணவர்களை தயார் செய்து, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொழிற்சந்தைக்கு முகம்கொடுக்கவல்ல பட்டதாரிகளை உருவாக்கும் பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தயாராகியிருக்கிறோம் என்று அவர் ஆணித்தரமாகக் கூறுகின்றார்.

கடந்த காலங்களில் மலேசிய, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களுக்கு நூற்றுக்கணக்கான மாணவர்களை பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகளுக்காக வெற்றிகரமாக அனுப்பிய வரலாறு கொம்டெக் (CMT Campus) இற்கு உண்டு.

தென்கிழக்கு பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கு ஆயிரக்கணக்கான மாணவர்களை தயார்படுத்துவதில் பாரிய பங்களிப்பு செய்துள்ள கொம்டெக் (CMT Campus), ஜி.சி.ஈ.சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சைகளுக்குத் தோற்றிய மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் போன்ற பாட நெறிகளை போதிப்பதிலும் முக்கிய பங்காற்றியிருக்கிறது.

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக வெளிநாட்டுப் பல்கலைக் கழகத்துடன் கூட்டிணைக்கப்பு செய்யப்பட்ட (Affiliated) தனியார் பல்கலைக்கழகமொன்றை  நிறுவுவதற்கான வாய்ப்பு CMT Campus இற்கு கிடைத்திருக்கிறது.

CMT Campus இன் பிரதான நிர்வாக அலுவலகமே கல்முனையில் நாளை திறக்கப்படுகின்றது. இதன் கல்வி வளாகங்களுக்கான கட்டிடத் தொகுதிகளை அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன - என்றும் அதன் தவிசாளர் ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டார்.

✍️எம்.எம்.அஸ்லம்

Monday, January 2, 2023

மலாய் இஸ்லாமிய சர்வதேச செயலகத்தின் இணைப்பாளராக ஏ.எம்.ஜெமீல் நியமனம்..!

மலேசியாவின் மலாக்கா மாநில ஆளுநர் துன் முஹமட் அலி ருஸ்தாம் அவர்கள் தலைமையிலான மலாய் இஸ்லாமிய சர்வதேச செயலகத்தின் இலங்கைக்கான இணைப்பாளராக முன்னாள் கிழக்கு மாகாண சபையின் குழுத் தலைவரும் College of Management and Technology (CMT Campus) தவிசாளருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மலாக்கா ஆளுநரின் பங்குபற்றலுடன் இன்று திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின்போதே அவரால் இந்நியமனம் வழங்கி வகைப்பட்டுள்ளது.

அதேவேளை, கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்களின் அழைப்பின் பேரில் மலாக்கா மாநில ஆளுநர் துன் முஹமட் அலி ருஸ்தாம் அவர்கள், நாளை மறுதினம் புதன்கிழமை (04) கல்முனைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.