Friday, March 21, 2025

சுப்பர் முஸ்லிம் குழுவினர் அல்குர்ஆன் மற்றும் முகம்மது நபி காட்டிய வழியில் நடப்பதில்லை.!

 

🛑சுப்பர் முஸ்லிம் குழுவினர் அல்குர்ஆன் மற்றும் முகம்மது நபி காட்டிய வழியில் நடப்பதில்லை.!

🛑சுப்பர் முஸ்லிம் குழுவினர் நாட்டை சீரழிக்க இடமளிக்க முடியாது.!

🛑முளையிலேயே கிள்ளி எறிய பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.!

🛑புலிகள் மற்றும் சஹ்ரான் சம்பவங்கள் இனியும் வேண்டாம்.!

👉அக்கரைப்பற்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் தந்தநாராயண தெரிவிப்பு.

(மெட்ரோ மிரர் அம்பாறை செய்தியாளர்)

சுப்பர் முஸ்லிம் குழுவினர் நாட்டைச் சீரழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. அவர்களை முளையிலேயே கிள்ளி எறிய பொது மக்களின் ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்று அக்கரைப்பற்று பொலிஸ் பிராந்தியத்திற்கான புதிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தந்தநாராயண தெரிவித்தார்.

காரைதீவுப் பொலீஸ் பிரதேசத்திற்கான மக்கள் பாதுகாப்பு உபதேசக் குழுவின் கூட்டம் நேற்று காரைதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.எஸ். ஜகத் தலைமையில் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தந்தநாராயண மேலும் தெரிவிக்கையில்;

சமுகத்தில் அவ்வப்போது எழும் சட்டவிரோத குற்றச் செயல்களை தடுக்க பொலிசார், பொது மக்கள் நல்லுறுவு அவசியம். அதற்கு இவ்வாறான உபதேசக்குழுக்கள் மேலும் வலுச்சேர்க்கும் என்பது எனது நம்பிக்கை.

சூப்பர் முஸ்லிம் குழுவினர் நபிகள் நாயகம் அல்லது குர்ஆன் காட்டிய வழியில் ஒருபோதும் நடப்பதில்லை. டொக்டர் ஒருவர் தலைமையிலான ஒரு குழுவினர் இளைஞர் குழுவை திரட்டி இந்த சமூக விரோத செயற்பாட்டை முன்னெடுப்பதாக எங்களுக்கு தெரிய வந்திருக்கிறது.

புலிகள் மற்றும் சஹ்ரான்  சம்பவங்கள் உங்களுக்கு தெரியும்.  அதற்கெல்லாம் இனி இடம் அளிக்க முடியாது.

நாட்டிலே நாங்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் நிம்மதியாக பாதுகாப்பாக வாழ வேண்டும்.

எனவே உங்கள் பிரதேசத்தில் வாழும் இளம் சமுதாயத்தினரை நாங்கள் சட்டவிரோத செயற்பாடுகளில் இருந்து பாதுகாக்க வேண்டும் . பிரதேசத்தில் ஏதாவது குற்றச்செயல்கள் அல்லது பிழையான செயல்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக போலீஸ் பொறுப்பு அதிகாரிக்கு அல்லது எனக்கு அல்லது தகவல் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.

போதைப்பொருள் பாவனை, பெண் துஸ்பிரயோகம் மற்றும் கடத்தல் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு பொதுமக்களின் உதவி கட்டாயம் தேவை.

அனைத்து சட்ட விரோத செயற்பாடுகளையும் போதைப் பொருள் கடத்தலையும் முற்றாக தடை செய்ய வேண்டும்- என்றார்.



Sunday, February 23, 2025

நிசாம் காரியப்பர் எம்.பியினால் அபிவிருத்தி முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு.!

-அஸ்லம் எஸ். மெளலானா-

கல்முனைத் தொகுதியில் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமுமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

இதன் ஓர் அங்கமாக அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தன்னால் முன்மொழியப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட சில அவசர வேலைத் திட்டங்களுக்கான நகல் வரைபுகளை அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்திக அபேவிக்ரமவிடம் அவர் சமர்ப்பித்துள்ளார்.

இவற்றுள் வாகன நெரிசல் மிக்க சாய்ந்தமருது நகரில் வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக அங்கு வாகனத் தரிப்பிடம் ஒன்றை அமைப்பதற்கும்

கல்முனை மாநகரில் வெஸ்லி உயர்தர பாடசாலைக்கு முன்பாக போக்குவரத்து சமிக்ஞை கட்டமைப்பை அமைப்பதற்குமான முன்மொழிவுத் திட்டங்களையும் நிசாம் காரியப்பர் எம்.பி சமர்ப்பித்துள்ளார்.

அத்துடன் கல்முனை மாநகர மற்றும் மாளிகைக்காடு கடல் பகுதிகளில் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு இடையூறாக காணப்படுகின்ற கற்கள் மற்றும் கழிவுகளை அகற்றல்,

கல்முனை மேல் நீதிமன்றத்தில் அமைந்துள்ள சட்டத்தரணிகளுக்கான நூலகத்தை டிஜிட்டல் மயப்படுத்தல்,

கல்முனை மாநகரில் உள்ளூர் மற்றும் சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்களை மேம்படுத்துவதற்காக தற்காலிக விற்பனை கூடங்களை அமைத்தல் போன்ற முன்மொழிவுகளையும்  அம்பாறை மாவட்ட செயலாளரிடம் அவர் சமர்ப்பித்திருக்கிறார்.

Sunday, February 2, 2025

ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் 05 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.!




-அஸ்லம் எஸ்.மெளலானா-

காலம்சென்ற சிரேஷ்ட ஒலிபரப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் 05 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றது.

இலங்கை ஒலிபரப்பாளர் ஒன்றியத்தின் ஆதரவுடன் ஏ.ஆர்.எம். அட்வர்டைசிங் அனுசரணையில் ஒலிபரப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் யூ.எல். யாக்கூப் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா பிரதம அதிதியாகவும் முன்னாள் அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா கெளரவ அத்தியாகவும் கலந்து கொண்டனர்.

அத்துடன் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளர் ஜே. லியாக்கத் அலி, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஸிக், மன்னார் பொது வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் அஸாத் எம். ஹனீபா, அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹீர், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எம்.ஏ. ரஸாக், பிறை எப்.எம். பிரதிப் பணிப்பாளர் பஷீர் அப்துல் கையூம், அதிபர் யூ.எல். நஸார், சிரேஷ்ட ஒலிபரப்பாளர்களான சட்டத்தரணி ஏ.எம். தாஜ், ஏ.சி. றாஹில், என்.றபீக் மற்றும் கவிஞர் எம்.எம்.எம். பாஸில் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டு உரையாற்றினர்.

இதன்போது ஊடக, கல்வி மற்றும் அரசியல் துறைகளில் மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் வகிபாகம், அர்ப்பணிப்புடனான உன்னத சேவைகள் பற்றியும் அவரது ஆளுமைகள் மற்றும் சிறப்புகள் குறித்தும் அதிதிகள் நினைவுகூர்ந்தனர்.

நிகழ்வின் ஓர் அங்கமாக மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் சகோதரரான சிரேஷ்ட ஒலிபரப்பாளர் ஏ.ஆர்.எம்.நௌபீல் அவர்களை பணிப்பாளராகக் கொண்ட றிஸாலத் இணைய தொலைக்காட்சியின் விஸ்தரிப்பை மையப்படுத்தி அதன் ஆலோசனை சபையினருக்கான அடையாள அட்டையும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள், கல்வியியலாளர்கள் மற்றும் மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் உறவினர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

















Thursday, January 23, 2025

சாய்ந்தமருது அல்ஹிலால் வரலாற்று சாதனை; 49 மாணவர்கள் புலமைச் சித்தி.!


-அஸ்லம் எஸ்.மெளலானா-

இம்முறை (2024) தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் 49 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சிறப்புச் சித்தியடைந்துள்ளனர்.

அதேவேளை பரீட்சைக்குத் தோற்றிய 231 மாணவர்களில் 168 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதுடன் 219 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

இப்பெறு பேறுகளின் பிரகாரம் இப்பாடசாலை சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் தொடர்ந்தும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளதுடன் கல்முனை கல்வி வலயத்திலும் முன்னணியில் திகழ்கிறது.

இதன் மூலம் இப்பாடசாலை வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியிருக்கிறது.

இச்சாதனை பெறுபேற்றினை அடைவதற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்த பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார் அவர்களுக்கும் பிரதி மற்றும் உதவி அதிபர்களுடன் மாணவர்களுக்கு போதித்து நெறிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகம் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவரும் அதிபர் உள்ளிட்ட பாடசாலை நிர்வாகத்தினரால் இன்று வெள்ளிக்கிழமை (23) வாழ்த்தி வரவேற்கப்பட்டு, பாராட்டப்பட்டுள்ளனர்.




Tuesday, January 21, 2025

அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளராக அஸீம் கடமையேற்பு.!


-அஸ்லம் எஸ்.மெளலானா-

அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளராக (ACLG) நியமிக்கப்பட்டுள்ள இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான ஏ.எஸ்.எம்.அஸீம் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (21) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்போது அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்களினால் இவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ. ரி.எம். றாபி. அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளராக கடமையாற்றி வந்த கமல் நெத்மினி ஜனாதிபதி செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்தே கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளராக கடமையாற்றி வருகின்ற ஏ.எஸ்.எம்.அஸீம், அப்பதவிக்கு மேலதிகமாக கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளரினால் அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

திறந்த போட்டிப் பரீட்சை மூலம் 2019ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட ஏ.எஸ்.எம்.அஸீம், 2020 மார்ச் மாதம் தொடக்கம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக கடமையாற்றியுள்ளதுடன் 2022 ஜனவரி மாதம் தொடக்கம் கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளராக கடமையாற்றி வருகின்றார்.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான இவர், அஹமட் சிராஜுதீன் மற்றும் ஜஹ்புல் அறபியா தம்பதியரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.


Saturday, January 18, 2025

அப்துல்லாஹ் ஹஸரத்தின் மரணம் முழு நாட்டிற்குமே பேரிழப்பாகும்; சமாதானத்துக்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் பிரதித் தலைவர் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவிப்பு.!

(அஸ்லம் எஸ்.மெளலானா)

கல்வி, சமயம், சமூகம், சமாதானம் போன்ற பல்வேறு துறைகளில் தனது ஆளுமையைப் பதித்த புத்தளம் காசிமிய்யா அறபுக் கல்லூரி அதிபரும் புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவருமான அஷ்ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மரணமானது முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்ல முழு நாட்டிற்குமே பேரிழப்பாகும் என்று சமாதானத்துக்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் பிரதித் தலைவரும் சாய்ந்தமருது தைபா மகளிர் அறபுக் கல்லூரி அதிபருமான மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா (மதனி) தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இனங்களுக்கிடையிலான சமாதானப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த அவர் பல்வேறு நிறுவனங்களுடன் சேர்ந்து இப்பணியில் ஈடுபட்டார்.

வடக்கிலே யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த 2007 டிசம்பரில் யாருமே யாழ்ப்பாணம் செல்லத் துணியாத காலத்தில் நாங்கள் இருவரும் அங்கு நடைபெற்ற சர்வதேச சமாதான மகாநாட்டுக்குச் சென்றிருந்தோம். ஜப்பானின் முன்னாள் வெளி விவகார அமைச்சர் யசூசி அகாசி கலந்து கொண்ட அம்மகாநாட்டில் சமாதானத்துக்கான எமது பங்களிப்புக்களை வழங்கினோம்.

அதேபோல் 2008 ஆம் ஆண்டு திருமலையில் நடைபெற்ற சர்வதேச மகாநாட்டிலும் உலகத் தலைவர்கள் பலருடன் சேர்ந்து கலந்து கொண்டதுடன் ஜனாதிபதியாகவிருந்த மஹிந்த ராஜபக்;ஷவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நானும் அப்துல்லாஹ் ஹஸரத், சுப்யான் மௌலவி, நியாஸ் மௌலவி போன்றோரும் கலந்து கொண்டிருந்தோம்.

இவ்வாறு அவரது பணிகளும் பயணங்களும் அதிகமானவை. அப்துல்லாஹ் ஹஸரத் சமாதானப் பேரவையுடன் இணைந்து பல்வேறு சமாதானப் பணிகளில் ஈடுபட்டார். பிற சமூகத்துடன் நல்லபிப்பிராயத்தை வளர்த்தார்.

எமது பிரதேசத்தில் சுனாமிப் பேரலை ஏற்படுத்திய அழிவின்போது பல்வேறு உதவிகளில் ஈடுபட்டார்.

மதீனாப் பல்கலைக்கழகத்தில் நாம் ஒன்றாகப் பயின்றோம். உலமா சபையின் பணிகளில் ஒன்றிணைந்து செயலாற்றினோம். அறபுக் கல்லூரிகளில் அதிபர் பதவிகள் வகித்தோம்.

கடந்த மாதம் அவரது வீடு வருவதாக நான் கூறியபோது இது போன்ற மகிழ்ச்சிகரமான செய்தி எனக்கில்லை என்று அவர் கூறியது அவரின் விருந்தோம்பலின் சிறப்பை எடுத்துக்காட்டியது. அவர் வீட்டில் நாம் உணவருந்தியபோது அவருக்கு இயலாத நிலையிலும் பக்கத்தில் வந்து நின்றார். மூன்று மாதங்களுக்கு முன் குடும்பத்தோடு எமது தைபா அறபுக் கல்லூரிக்கு வந்துபோனார்.

நாட்டு நடப்புக்களை வாராந்தம் என்னோடு கலந்துரையாடும் நல்ல நண்பரை இழந்து விட்டேன். பணிவும் பண்பும் நிறைந்த அவர் இவ்வளவு விரைவாக எம்மை விட்டுப் பிரிவார் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.

அல்லாஹ்வின் நாட்டம் எதுவோ அதுவே நடந்தேறும். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது குற்றங் குறைகளை மன்னித்து உயரிய சுவனத்தில் அவரைக் குடியிருக்கச் செய்வானாக!

அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்துக்கு ஆறுதலையும் பொறுமையையும் அளிப்பானாக!

Wednesday, January 8, 2025

அக்கரைப்பற்று மாநகர சபை களப்பணியாளர்களுக்கு எலிக்காய்ச்சல் தொடர்பான விழிப்பூட்டல்.!

நாடளாவிய ரீதியில் பரவி வருகின்ற எலிக்காய்ச்சல் தொடர்பாக அக்கரைப்பற்று மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்கள் உள்ளிட்ட களப்பணியாளர்களை தெளிவூட்டுவதற்காக அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விழிப்புணர்வு நிகழ்வு இன்று புதன்கிழமை (08) அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் தலைமையில் அக்கரைப்பற்று நீர்ப்பூங்காவில் நடைபெற்றது.

இதன்போது எலிக்காய்ச்சல் பரவும் வழிமுறைகள் மற்றும் அதற்கான சூழல்கள் பற்றியும் எலிக்காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார ஒழுங்கு முறைகள் தொடர்பாகவும் விபரிக்கப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டன.

அத்துடன் சுகாதாரத் தொழிலாளர்கள் உள்ளிட்ட களப்பணியாளர்களுக்கு எலிக்காய்ச்சலுக்கான தடுப்பு மாத்திரையும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம். முனவ்வர்,  அக்கரைப்பற்று மாநகர சபையின் கால்நடை வைத்திய அதிகாரி சமீனா ஹம்தூன், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம். பெளமி, வேலைகள் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் எம்.சலீத் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேறறிருந்தனர்.





Saturday, January 4, 2025

தென்கிழக்கு பல்கலைக்கு நிரந்தர உபவேந்தர் நியமனம் எப்போது.?

-முகம்மட் முக்தார்-

இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்திற்கான புதிய உப-வேந்தர் இதுவரை நியமிக்கப்படாதுள்ளதாக இலங்கை தென்கிழக்கு கல்விப் பேரவையின் தவிசாளர்
எம்.எம்.எல் அகமட் ஜனாதிபதி அனுரகுமாரவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இப்பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக கடமையாற்றியவரின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்த போதிலும் அக்காலப்பகுதி ஜனாதிபதி தேர்தல் காலமாக இருந்தமை காரணமாக உபவேந்தர் நியமனம் இடம்பெறவில்லை.

இதனால் பல்கலைக்கழக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல பதில் உப வேந்தராக அப்பல்கலைக்கழக சிரேஸ்ட பேராசிரியர் ஒருவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நியமனம் செய்யப்பட்டார்.

தற்போது ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் என யாவும் நடைபெற்று முடிந்து விட்டமையால் நிரந்தர உப- வேந்தரை இப்பல்கலைக் கழகத்திற்கு நியமனம் செய்ய வேண்டிய பொறுப்பு ஜனாதிபதியிடமுள்ளது.

பல்கலைக்கழக கவுன்சினால் பல்கலைக்கழக உப-வேந்தராக நியமிக்கப்பட வேண்டிய மூவரது பெயர்களை பல்கலைக்கழக ஆணைக்குழுவுக்கு கடந்த வருடம் ஜுன் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது.

இவர்களில் தகுதியுள்ள ஒருவரது பெயர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு என்பவற்றால் ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. ஆயினும் முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்நியமனம் தொடர்பாக அக்கறை காட்டவில்லை.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் நிரந்தர உப-வேந்தர் நியமனம்
இடம்பெற வேண்டியது அத்தியாவசியமானது என தென்கிழக்கு கல்விப் பேரவை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Sunday, December 29, 2024

சாய்ந்தமருது - மாளிகைக்காடு உலமா சபையினால் கெளரவிக்கப்பட்ட ஆதம்பாவா எம்.பி.!


-சாய்ந்தமருது செய்தியாளர்-

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா அவர்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சாய்ந்தமருது, மாளிகைக்காடு கிளையினால் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வு நேற்று சனிக்கிழமை (28) இரவு ஜம்மியத்துல் உலமாவின் சாய்ந்தமருது காரியாலயத்தில் அதன் தலைவர் மெளலவி எம்.எஸ்.எம். சலீம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது ஊர் நலன் சார்ந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டதுடன் அரசியல் தொடர்பில் மார்க்க ரீதியான  தெளிவுகளும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்யத்துல் உலமாவின் சாய்ந்தமருது, மாளிகைக்காடு கிளையின் நிர்வாகிகள் மற்றும் உலமாக்களும் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.