Monday, February 28, 2022

பொத்துவில், திருக்கோவில் வைத்தியசாலைகளுக்கு புதிய அம்பியூலன்ஸ் கையளிப்பு..!


(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.ஐ.சம்சுதீன்)

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பொத்துவில் மற்றும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைகளுக்கு புதிய அம்பியூலன்ஸ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றைக் கையளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (28) பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வளாகத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ரி.எஸ்.ஆர்.ரி..ஆர்.ரஜாப் மற்றும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.பி.மசூத் ஆகியோரிடம் குறித்த அம்பியூலன்ஸ்களின் திறப்பு மற்றும் ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.

கல்முனைப் பிராந்தியத்திலுள்ள பல வைத்தியசாலைகளுக்கும் அம்பியூலன்ஸ் தேவையாக இருக்கின்ற போதிலும், சுமார் 04 வருடங்களுக்குப் பின்னர் சுகாதார அமைச்சினால் எமது பிராந்தியத்திற்கு கிடைக்கப்பெற்ற இந்த இரண்டு புதிய அம்பியூலன்ஸ்களும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஆலோசனையின் பேரில் அவசர, அவசியத் தேவை, நீண்ட தூர சேவை என்பவற்றை முன்னுரிமையாகக் கொண்டே இவ்விரு வைத்தியசாலைகளும் தெரிவு செய்யப்பட்டு, வழங்கி வைக்கப்பட்டுள்ளன என்று பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மேலும் இரண்டு புதிய அம்பியூலன்ஸ்களை வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் வாகனப் பிரிவு உறுதியளித்திருப்பதாகவும் அவை கிடைக்கப் பெற்றதும் இன்னும் இரண்டு வைத்தியசாலைகளுக்கு அவற்றை வழங்கி வைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இந்நிகழ்வில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.எம்.வாஜித், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர் உட்பட வைத்திய அதிகாரிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.





Sunday, February 27, 2022

ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் சாய்ந்தமருது ஸபா பள்ளிவாசலுக்கு ஜனாஸா குளிப்பாட்டும் கட்டில், எல்.ஈ.டி. மின் விளக்குகள் கையளிப்பு..!



(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ் ஸபா பள்ளிவாசலுக்கு ஜனாஸாக்களை குளிப்பாட்டும் கட்டில் மற்றும் ஒரு தொகுதி கோப்ரா எல்.ஈ.டி. மின் விளக்குகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பவுண்டேஷன் ஸ்தாபகத் தலைவரும் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளையேற்று குறுகிய காலத்திற்குள் இவற்றை வழங்குவதற்கான நடவடிக்கையை அவர் மேற்கொண்டிருந்தார்.

நேற்று இப்பள்ளிவாசலுக்கு அவர் நேரடியாக விஜயம் செய்து பள்ளி நிர்வாகிகளிடம் இவற்றைக் கையளித்தார். இந்நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் அல்ஹாஜ் அப்துல் அஜீஸ் உள்ளிட்ட நிர்வாகிகளும் பவுண்டேஷன் பிரதிநிதிகளும் மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ரஹ்மத் மன்சூரின் இவ்வாறான மனித நேயமிக்க உயரிய சேவைகளுக்காக குறித்த பள்ளிவாசல்களின் நிர்வாகிகளினால் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தமது பவுண்டேஷனின் இவ்வாறான சமூக சேவை வேலைத் திட்டங்களுக்கு அனுசரணை வழங்கி வருகின்ற வை.டபிள்யூ.எம்.ஏ. (YWMA) அமைப்புக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்வதாக ரஹ்மத் மன்சூர் அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.

அதேவேளை, மிக விரைவில் இப்பள்ளிவாசலுக்கு ஜனாஸாக்களை சுமந்து கொண்டு செல்லும் சந்தூக் ஒன்றை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, சம்மாந்துறை, நிந்தவூர், ஒலுவில், சாளம்பைக்கேணி, மத்திய முகாம் போன்ற பிரதேசங்களுக்கும் ஜனாஸா நலன்புரிக்காக இவ்வாறான உதவிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவை தவிர இந்த அமைப்பினால் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் குடிநீர் வசதிகள் உட்பட பல்வேறு மனித நேய சமூகப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.









சிறந்த முகாமைத்துவ, வியாபாரத்துக்கான கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார் யஹியாகான்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

யஹியாகான் குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளருமான ஏ.சி.யஹியாகான் சிறந்த முகாமைத்துவம் மற்றும் வியாபாரத்துக்கான கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

Globel Peace University ஏற்பாட்டில் வெள்ளவத்தை சபயர் ஹோட்டலில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வைபவத்தின்போதே அவர் இவ்வாறு கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் கலாநிதி எஸ்.சந்திரசேகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கௌரவ கலாநிதி பட்டச் சான்றிதழை வழங்கி வைத்தார்.

இதன்போது ஏ.சி.யஹியாகான் உட்பட 15 முக்கிய பிரமுகர்களை, அவர்களது துறைசார்ந்த சேவைக்காக Globel Peace University கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் உயர் கல்விக்கான விசேட புலமைப்பரிசில்; Leader Ashraff Education Foundation, COMTECH இணைந்து ஏற்பாடு

பாகிஸ்தானில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான The University of Lahore எனும் பல்கலைக்கழகத்தில் இலங்கை மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர்வதற்காக Leader Ashraff Education Foundation, COMTECH நிறுவனத்துடன் இணைந்து பாகிஸ்தான் - இலங்கை உயர் கல்வித் திட்டத்தின் கீழ் விசேட புலமைப் பரிசில் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் பிரகாரம் மேற்படி பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளிலும் உயர் கல்வியை தொடர்வதற்கான புலமைப் பரிசில்களை வழங்குவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

மேலதிக விபரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அறிவித்தலில் அறிந்து கொள்ள முடியும்.

Saturday, February 26, 2022

மருதூர் பிரிமியர் லீக் சீசன்-2 சுற்றுத்தொடர்; பிரதம அதிதியாக பங்கேற்றார் ரஹ்மத் மன்சூர்


சாய்ந்தமருது கிரிக்கட் சங்கத்தினால் நடாத்தப்படும் மருதூர் பிரிமியர் லீக்  சீசன்-2 சுற்றுத் தொடர் நேற்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் அணியும் சம்மாந்துறை விளையாட்டு கழகமும் மோதிக் கொண்டன. 

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயரும் கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.







Friday, February 25, 2022

கிழக்கில் 45 பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள்; அரசியல் தலையீட்டினால் நிரப்பப்படாமல் இழுத்தடிப்பு என்கிறது கிழக்கு கல்வி அதிகாரிகளின் சங்கம்..!

(சாய்ந்தமருது நிருபர்)

கிழக்கு மாகாணத்திலுள்ள 45 பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் நிலவி வருவதாகவும் அரசியல் தலையீடு காரணமாக இவை நிரப்பப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுவதாகவும் இலங்கை கல்வி நிருவாக அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சங்கத்தின் ஏ.எல்.முகம்மட் முக்தார் நேற்று (28) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரித்திருப்பதாவது;

கிழக்கு மாகாணத்தில் தரம் இரண்டு பாடசாலைகளில் நிலவி வருகின்ற அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கோரப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் நேர்முகப் பரீட்சைகளை நடாத்தி, உடனடியாக நியமனங்களை வழங்குமாறு எமது சங்கம் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரை கோரியுள்ளது.

அதிபர் பதவி வெற்றிடமாகியுள்ள 45 தரம் இரண்டு பாடசாலைகளுக்கும் விண்ணப்பம் கோரப்பட்டு, ஒரு வருடமாகியும் இதுவரை நேர்முக பரீட்சை நடாத்தப்படாது காலம் கடத்தப்பட்டு வருகிறது.

இப்பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமனம் செய்யும் அதிகாரம் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்குரியதாகும். அதன் அடிப்படையிலேயே விண்ணப்பம் கோரப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் திருமலை, மூதூர், திருமலை வடக்கு, கிண்ணியா ஆகிய கல்வி வலயங்களில் 17 பாடசாலைகளிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டு, கல்குடா, பட்டிருப்பு, மட்டு மேற்கு, மட்டு மத்தி ஆகிய வலயங்களில் 16 பாடசாலைகளிலும் கல்முனை கல்வி மாவட்டத்தில் கல்முனை, சம்மாந்துறை, திருக்கோவில் ஆகிய கல்வி வலயங்களில் 08 பாடசாலைகளிலும் அம்பாறை வலயத்தில் 04 பாடசாலைகளிலும் அதிபர் பதவிக்கான வெற்றிடங்கள் நிலவுகிறன.

பல தடவைகள் நேர்முகபரீட்சை நடாத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள், அரசியல் ரீதியான அழுத்தங்களை பிரயோகித்து நிறுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

எனவே, அரசியல் அழுத்தங்களுக்கு அப்பால் பாடசாலைகளின் சுயாதீனத்தை பாதுகாக்க மாகாண கல்விப் பணிப்பாளர் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்று குறிப்பிட்டார்.

Wednesday, February 16, 2022

ஐக்கிய மக்கள் சக்தி கிழக்கில் தனித்தே போட்டியிடும்; செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார உறுதி..!

(இனாம் எஸ்.மௌலானா)

எதிர்வரும் காலங்களில் எந்தவொரு தேர்தலாயினும் ஐக்கிய மக்கள் சக்தி கிழக்கு மாகாணத்தில் தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்களுடனான விசேட கலந்துரையாடல் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (15) கல்முனை பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கல்முனைத் தொகுதி அமைப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.அப்துர் ரஸ்ஸாக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொழில் சங்கத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முஜீபுர் ரஹ்மான், கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான இம்ரான் மஹ்றூப், பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான புத்திக பத்திரன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரதாச கலப்பதி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இங்கு செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார மேலும் தெரிவிக்கையில்;

இனிவரும் காலங்களில் ஐக்கிய தேசிய கட்சி விட்ட தவறுகளை ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் செய்யமாட்டாது. நாட்டிலுள்ள 160 தொகுதிகளுக்கும் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அந்தந்த தொகுதி அமைப்பாளர்களே பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள். கட்சி சம்மந்தப்பட்ட எந்த வேலைத் திட்டமாயினும் அமைப்பாளர் ஊடாகவே முன்னெடுக்கப்படும்.

கிழக்கு மாகாணத்தில் சில கட்சிகள் எம்முடன் இணைந்து எமது வேட்பாளர் பட்டியலில் போட்டியிட்டு, எமது ஆதரவாளர்களினதும் வாக்குகளைப் பெற்று, வெற்றி பெற்ற பின்னர் அவர்கள் அரசாங்கத்தில் இணைந்து விடுகின்றனர். இதனால் பாராளுமன்றத்தில் எமது கட்சியின் பலம் மலினப்படுத்தப்படுகிறது. மாற்றுக்கட்சியினருக்கு வாய்ப்பளிப்பதால் எமது கட்சி ஆதரவாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது பற்றி இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இனிவரும் எந்தவொரு தேர்தலிலும் இவ்வாறான தவறுகள் நடக்க இடமளிக்க மாட்டோம் என்று உறுதியளிக்கிறேன். இது விடயத்தில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மிகவும் உறுதியாக இருக்கிறார். ஆகையினால் எமது கட்சியின் பிரமுகர்களும் ஆதரவாளர்களும் நம்பிக்கையுடன் இக்காட்சியில் பயணிக்க முடியும்.

இந்த அரசாங்கத்தின் மீது இரண்டு வருடங்களுக்குள் மக்கள் பாரியளவில் அதிருப்தியடைந்துள்ளார்கள். விலைவாசி உயர்ந்து மக்கள் துன்பத்தில் இருக்கின்றார்கள். ஒரு பக்கம் விலைவாசி உயர்வு மறுபக்கம் பால்மா, சிமெந்து, கேஸ், மண்ணேய் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுபாடு நிலவுகிறது. மக்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள், விவசாயிகள் என்றுமில்லாதவாறு மிகுந்த கஷ்டத்தில் இருக்கின்றார்கள்.

ஆகையினால் மக்கள் நிம்மதி, சந்தோசத்துடன் வாழ வேண்டுமாயின் இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். எதிர்வரும் தேர்தலில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன்.

கல்முனை தொகுதியில் எமது அமைப்பாளர் சட்டத்தரணி அப்துல் றஸாக் ஊடாகவே சகல அபிவிருத்திகளும் நடைபெறும், அதுமட்டுமல்ல எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி இங்கு தனித்து போட்டியிடும்போது கல்முனை தொகுதிக்கான வேட்பாளராக அவரே நியமிக்கப்படுவார்- என்றும் ரஞ்ஜித் மத்தும பண்டார உறுதியளித்தார்.




பிரதி திட்டமிடல் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார் சப்ரி முக்தார்..!

(சர்ஜுன் லாபீர்)

அம்பாறை, உஹன பிரதேச செயலகத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றும் எம்.எம்.முஹம்மட் சப்ரி, பொது நிர்வாக அமைச்சினால் பிரதி திட்டமிடல் பணிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளரது கடிதத்திற்கமைய 2021.12.29 ம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் இப்பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு இலங்கை திட்டமிடல் சேவையில் இணைந்து கொண்ட இவர் கோமரன்கடவெல, மஹாஓயா ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.

சாய்ந்தமருதுவை பிறப்பிடமாகவும் கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் இலங்கை கல்வி நிர்வாக அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கத்தின் செயலாளரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.எம்.முக்தார் அவர்களின் புதல்வராவார்.

கல்முனை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவரான இவர், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை பூர்த்தி செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீடு தேடிச் சென்று உதவும் யஹியாகான் பவுண்டேஷன்..!

யஹியாகான் பவுண்டேஷன் சமூக சேவை அமைப்பினால் வசதி குறைந்த குடும்பத்தினருக்கு உதவும் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் ஓர் அங்கமாக சாய்ந்தமருது ஒராபிபாஷா வீதியில் வசிக்கும் குடும்பமொன்றுக்கு அமைப்பின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொருளாளருமான ஏ.சி.யஹியாகான் நேற்று முன்தினம் வீடு தேடிச் சென்று நிதியுதவி வழங்கி வைத்துள்ளார்.

குறித்த வீட்டில் நீண்ட காலத் தேவையாக இருந்து வருகின்ற மின்சார தேவையை நிவர்த்தி செய்வதற்கே இந்நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் யஹியாகான் பவுண்டேஷன் செயலாளர் ஏ.சி.எம்.றியாழ், பிரதித் தலைவர் எம்.சியாம் மற்றும் இணைச் செயலாளர் எம்.ஏ.எம்.றஸ்பாஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Tuesday, February 15, 2022

அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு; பாதிக்கப்பட்டோருக்கு நீதி கோரி உயர் நீதிமன்றில் வழக்கு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

1997 ஆம் ஆண்டு முதல் 2021 வரை ஓய்வுபெற்ற அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக இலங்கை கல்வி நிருவாக அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கச் செயலாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஏ.எல்.முகம்மட் முக்தார் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

1997 ஆம் ஆண்டு வெளியான பி.சி.பெரேரா சம்பள அறிக்கையின் மூலம் இழைக்கப்பட்ட சம்பள உயர்வு அநீதிக்கு நிவாரணமாக ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர் வேலை நிறுத்தங்கள் காரணமாக 2022 ஜனவரி முதல் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இச்சம்பள உயர்வு வழங்குவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டபோது 1997 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 வரையான காலத்தில் கடமையாற்றிய அதிபர், ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. இது அவர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் பாரிய அநீதியாகும். ஏனெனில் 1997 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடமையில் இருந்த அனைத்து அதிபர், ஆசிரியர்களும் இச்சம்பள முரண்பாட்டால் பாதிக்கப்பட்டனர். ஆகையினால் அவர்களுக்கும் இச்சமபள உயர்வு உரிமையானதாகும்.

அதிபர், ஆசிரியர்களுக்கு 2022 ஜனவரி முதல் அமுலாகியுள்ள சம்பள மாற்றமானது உண்மையில் சமபல உயர்வல்ல. மாறாக 1997 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சம்பள முரண்பாட்டினால் உருவான வாதிப்புக்கான தீர்வாகும்.

ஆனால் 31.12.2021 வரை கடமையில் இருந்த ஆசிரியருக்கு இவ்வதிகரிப்பு மறுக்கப்பட்டு, மறுநாள் 01.01.2022 அன்று கடமையில் இருப்போருக்கு அதிகரிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பும் ஓய்வூதியமும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை அரசாங்கம் எவ்வாறு நியாயப்படுத்தும்?

ஆகையினால் இத்தீர்வில் உள்ளடக்கப்படாத அதிபர், ஆசிரியர்களுக்கு நீதி கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் வழக்கிற்கு தமது சங்கம் பூரண ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

Monday, February 14, 2022

தஃவா இஸ்லாமிய்யா கலாபீடத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா..!

-யூ.கே.காலித்தீன்-

சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய்யா கலாபீடத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா அல்ஹிலால் வித்தியாலத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வானது கலாபீடத்தின் பிரதி தவிசாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான ஐ.எல்.அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மேஸிலங்கா நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் அஷ்ஷேய்க் என்.ஹசன் சியாத் (நளிமி) கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களையும் நினைவுச் சின்னங்களையும் வழங்கி வைத்தார்.

கௌரவ அதிதிகளாக சாய்ந்தமருது மாளிகைக்காடு ஐம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் எம்.எம்.சலீம், தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் முன்னாள் தவிசாளர் அஷ்ஷேய்க் யூ.எல்.எம்.காசிம்,  சாய்ந்தமருது முகையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் ஏ.ஹிபத்துல் கரீம் ஆகியோர் கலந்து கொண்டதோடு பிரித்தானியாவிலிருந்து சூம் தொழிநுட்பத்தினூடாக நிகழ்நிலை உரை நிகழ்த்திய தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் தவிசாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான அஷ்ஷேய்க் என்.எம். அப்துல் முஜிப் (நளிமி) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

புதிய பாடத்திட்டத்தின் பிரகாரம்  குறுகிய காலத்தில் முழுக்குர்ஆனையும்  மனனம் செய்து 15 தௌராக்களை முழுமையாக பூரணப்படுத்திய அல்ஹாபில்களான முஹம்மது வசீர் முஹம்மது அஹ்சன் மற்றும் ஜலாலுத்தீன் அப்துல்லாஹ் செய்யினி ஆகியோருக்கு சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

அத்தோடு அல் குர்ஆன் மனன பாடங்கள் விருது, பாடசாலை மட்ட பரிட்சைகளில் சிறந்த பெறுபேறு பெற்றவர்களுக்கான விருது, சிறந்த வரவை பெற்றவர்களுக்கான விருது, மாணவத் தலைவர்களுக்கான விருது, முன்மாதிரி மாணவர் விருது என பல்துறையிலும் திறமையை வெளிக்காட்டிய 43 மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும், சான்றிதழ்களும் பதக்கங்களும் அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

மேற்படி நிகழ்வில் உலமாக்கள், சாய்ந்தமருது முகையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் செயலாளர்,  பொருளாளர்,  தஃவா இஸ்லாமிய்யா கலா பீடத்தின் ஆளுனர் சபை உறுப்பினர்கள், விரிவுரையாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என ஊர் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.




More Pictures: 

https://www.facebook.com/photo?fbid=394526675812411&set=pcb.394527095812369

தமிழ் பேசும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்கள அதிகாரிகள் பிரதம செயலாளர்களாக நியமனம்; தென்கிழக்கு கல்விப் பேரவை பலத்த கண்டனம்..!

தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் பிரதம செயலாளர்களாக தமிழ் மொழி புரியாத சிங்கள அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருப்பதானது அரசாங்கத்தின் இனவாதப் போக்கை வலுப்படுத்துவதாக அமைந்திருக்கிறது என தென்கிழக்கு கல்விப் பேரவை கவலையும் கண்டனமும் வெளியிட்டுள்ளது.

இது குறித்து பேரவையின் தவிசாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஏ.எல்.எம்.முக்தார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இலங்கை நிருவாக சேவை விசேட தர அதிகாரிகள் சேவை மூப்பு பட்டியலில் தமிழ் பேசும் அதிகாரிகள் கடமையில் உள்ள நிலையில் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் பிரதம செயலாளர்களாக சிங்கள அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருகின்றனர்.

இம்மாகாணங்களின் பிரதம செயலாளராக கடமையாற்ற தமிழ் பேசுவோர் எவரும் தகுதியில்லை என்பது போல் ஜனாதிபதியின் தீர்மானங்கள் அமைந்துள்ளன. எந்தளவுக்கென்றால் ஏற்கனவே வழங்கப்பட்ட மீள் ஒப்பந்த நியமனம் முடிவுறுத்தப்பட்ட இலங்கை நிருவாக சேவை அதிகாரி துஷித வனிகசிங்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் கிழக்கு மாகாணத்திற்கு பிரதம செயலாளராக ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொது நிருவாக அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இலங்கை நிருவாக சேவை விசேட தர அதிகாரிகள் சேவை மூப்பு பட்டியலில் தமிழ் பேசும் அதிகாரிகள் பலர் கடமையில் உள்ள நிலையிலேயே இந்த அநியாயம் மேற்கொள்ளப்பட்டிருப்பதானது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

அண்மைக்காலமாக எமது நாட்டு ஜனாதிபதி, தான் சிங்கள மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர் என்பதை வலியுறுத்தி வருகின்ற நிலையில், தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தமிழ் மொழி அறவே புரியாத சிங்கள அதிகாரிகளை அவர் பிரதம செயலாளர்களாக நியமித்துள்ளார்.

நடைமுறையில் உள்ள இலங்கை அரசியலமைப்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மாகாணங்கள் எனவும் இந்த மாகாணங்களின் அரச கரும மொழியாக தமிழ் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இவ்விரு மாகாணங்களிலும் நீதிமன்ற மொழி கூட தமிழ் மொழியாக இருத்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் மத்திய அரசாங்கம், அரசியலமைப்பை முற்றாக புறந்தள்ளி, தமிழ் மொழி பேசும் மக்களை நிந்திக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில், கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் பிரதம செயலாளர் பதவி 2012 ஆம் ஆண்டு முதல் பறிபோன நிலையில், வடக்கு மாகாணத்திலும் தமிழ் பேசும் பிரதம செயலாளர் பதவி 2021 ஆம் ஆண்டு முதல் இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது.

இது குறித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநித்துவப்படுத்தும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் எவரும் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

அண்மையில் இந்தியாவில் மிசோரம் மாநிலத்திற்கு மிசோரம் மொழி தெரியாத ஒரு அதிகாரி பிரதம செயலாளராக நியமனம் செய்யப்பட்டபோது அங்கு ஏற்பட்ட எதிர்ப்பலைகளை அடுத்து மிசோரம் மொழி தெரிந்தவர் பிரதம செயலாளராக நியமனம் செய்யப்பட்டமையை எமது தமிழ் பேசும் அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்- எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்கப்பட்டிருக்கிறது. (அஸ்லம்)

Saturday, February 12, 2022

ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் சாளம்பைக்கேணி, மத்திய முகாம் பிரதேசங்களுக்கு ஜனாஸா கட்டில், சந்தூக் வழங்கி வைப்பு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தின் சாளம்பைக்கேணி மற்றும் மத்திய முகாம் பிரதேசங்களுக்கு ஜனாஸாக்களை குளிப்பாட்டும் கட்டில்கள் மற்றும் ஜனாஸாக்களை சுமந்து கொண்டு செல்லும் சந்தூக் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவரும் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளையேற்று குறுகிய காலத்திற்குள் இவற்றை வழங்குவதற்கான நடவடிக்கையை அவர் மேற்கொண்டிருந்தார்.

இதன் பிரகாரம் சாளம்பைக்கேணி 6ஆம் கொளனி பிலால் ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு ஜனாஸா குளிப்பாட்டும் கட்டில் மற்றும் சந்தூக் என்பனவும் மத்திய முகாம்-3 முஹம்மதிய்யா ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு ஜனாஸா குளிப்பாட்டும் கட்டில் ஒன்றும் அவற்றின் நிருவாகிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் சனிக்கிழமை (12) இடம்பெற்ற கையளிப்பு நிகழ்வுகளில் ரஹ்மத் மன்சூர் அவர்களுடன் பிரமுகர்கள் பலரும் பவுண்டேஷன் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது அவரது மனித நேயமிக்க உயரிய சேவைகளுக்காக குறித்த பள்ளிவாசல்களின் நிர்வாகிகளினால் நன்றி தெரிவிக்கப்பட்டு, துஆப் பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.

தமது பவுண்டேஷனின் இவ்வாறான சமூக சேவை வேலைத் திட்டங்களுக்கு அனுசரணை வழங்கி வருகின்ற வை.டபிள்யூ.எம்.ஏ. (YWMA) அமைப்புக்கு இதன்போது நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்ட ரஹ்மத் மன்சூர் அவர்கள், இதற்கு முன்னதாக கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, சம்மாந்துறை, நிந்தவூர் மற்றும் ஒலுவில் போன்ற பிரதேசங்களுக்கும் இவ்வாறு ஜனாஸா நலன்புரிக்கான உதவிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.