Tuesday, June 21, 2022

கல்முனை மாநகர சபையினால் திண்மக்கழிவகற்றல், வடிகான் பராமரிப்பு வினைத்திறனுடன் முன்னெடுப்பு; ஆணையாளர் எம்.சி.அன்சார் தெரிவிப்பு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை மற்றும் வடிகான் பராமரிப்பு தொடர்பாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்த கருத்துகளில் எவ்வித உண்மையுமில்லை. எரிபொருள் தட்டுப்பாடு, நிதிப்பற்றாக்குறை என்பவற்றுக்கு மத்தியிலும் இச்சேவைகளை முன்னெடுப்பதில் கல்முனை மாநகர சபையானது மிகவும் வினைத்திறனுடன் செயற்படுகிறது என்று கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது, திண்மக்கழிவகற்றல் மற்றும் வடிகான் பராமரிப்பு சேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் இதன்போது கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர், கல்முனை மாநகர சபையை தொடர்புபடுத்தி விமர்சன ரீதியாக சில கருத்துகளை முன்வைத்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

திண்மக்கழிவகற்றல் சேவையும் வடிகான் பராமரிப்பும் எமது மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற மிக முக்கிய பணிகளாகும். வாகனங்கள் மற்றும் ஆளணி பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும் குப்பை கொட்டுவதற்கான இடங்கள் எமது பகுதிகளில் இல்லாத நிலையிலும் நிதிப்பற்றாக்குறைக்கு மத்தியிலும் இச்சேவைகள் முடியமானவரை வினைத்திறனுடன் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக எம்மைக் கடந்து சென்ற கொரோனா பெருந்தொற்று அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியிலும் தற்போது நாடு எதிர்நோக்கியிருக்கின்ற பாரிய பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் இதர பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மிகுந்த அர்ப்பணிப்போடு இச்சேவைகள் திருப்திகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை பொறுப்புடன் உறுதிப்படுத்துகிறேன்.

ஏனைய அரச நிறுவனங்கள் போன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கு அரசாங்க நிதியொதுக்கீடுகள் கிடைக்கப் பெறுவதில்லை. சொந்த வருமானத்திலேயே உள்ளுராட்சி மன்றங்கள் சேவையாற்ற வேண்டும். அந்த வகையில் எமது மாநகர சபையும் தனது சொந்த வருமானத்திலேயே நிர்வாக விடயங்களையும் சேவைகளையும் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.

ஆனால், கடந்த கொரோனா அசாதாரண சூழ்நிலையிலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலும் மாநகர சபைக்கான வருமானங்களில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்ற அதேவேளை எரிபொருட்களின் விலை வெகுவாக உயர்ந்திருப்பதோடு இதர செலவுகளும் அதிகரித்துள்ள சூழ்நிலையிலேயே அனைத்து சேவைகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீதியிலும் திண்மக்கழிவகற்றல் சேவையை முன்னெடுக்கவோ, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீதியிலுமுள்ள வடிகான்களை துப்பரவு செய்வதோ எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்தினாலும் இயலுமான காரியமல்ல. எமது மாநகர சபையை பொறுத்தளவில் அந்தளவு வளங்கள் கிடையாது. இருக்கின்ற வளங்களைக் கொண்டு முடியுமானவரை வினைத்திறனுடன் அவற்றை செய்து வருகிறோம்.

ஒவ்வொரு வீதியிலும் ஒரு வாரத்திற்கு இரு தடவையோ குறைந்த பட்சம் ஒரு தடவையோ திண்மக்கழிவகற்றல் சேவை முன்னெடுக்கப்படுகிறது. அதுபோன்றே மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து பிரதேசங்களிலும் உள்ள வடிகான்களும் சுழற்சி முறையில் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றன.

திண்மக்கழிவகற்றல் சேவையும் வடிகான்கள் துப்பரவு பணிகளும் இவ்வாறு கிரமமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், பொது மக்களில் சிலரது ஒத்துழைப்பின்மையும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளுமே சுற்றுச்சூழல் மாசுபட காரணமாக அமைந்திருப்பதை எல்லோரும் அறிவோம். இவர்கள் நீர்நிலைகளிலும் தெருக்களிலும் பொது இடங்களிலும் தொடர்ச்சியாக குப்பைகளை வீசுவதையும் வடிகான்களினுள் கழிவு நீர் மற்றும் குப்பைகளை செலுத்துவதையும் எவரும் அறியாமல் இல்லை.

உண்மை நிலைவரம் இவ்வாறிருக்க, சுகாதாரத்துறையில் பொறுப்புவாய்ந்த பதவியில் இருக்கின்ற அதிகாரிகள், மாநகர சபை மீது மாத்திரம் விரல் நீட்டி, பொறுப்பற்ற விதத்தில் குற்றஞ்சாட்ட முற்படுவதானது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

மேலும், குறித்த கலந்துரையாடலுக்கு கல்முனை மாநகர சபையின் முதல்வர், ஆணையாளர் அல்லது அவர்களது சார்பில் எவரும் சமூகமளிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் தவறாகும்.

இன்று செவ்வாய்க்கிழமை மு.ப. 10.30 மணிக்கு இடம்பெற்ற இக்கலந்துரையாடலுக்கான அழைப்புக் கடிதம் இன்று மு.ப. 9.30 மணிக்கே எமக்கு கிடைக்கப் பெற்றிருந்தும் கூட, இது சுகாதாரத்துறை சார்ந்த கலந்துரையாடல் என்பதால் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பரை, இக்கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு எழுத்து மூலம் அறிவுறுத்தியிருந்தேன். அதன் பிரகாரமே மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தி அவர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தார் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்- என்று மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சாய்ந்தமருது அல்ஹிலால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு..!

(எம்.எஸ்.எம்.சாஹிர்)

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட வசதி குறைந்த மாணவர்களுக்கு சப்பாத்து, புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் யூ.எல்.நசார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை கல்வி மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம்.சாஹிர், கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச்.எம்.பௌஸ், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ.மலிக், பொறியியலாளர் எம்.சீ.கமால் நிஸாத், டாக்டர் நஸ்ரின் ஸாஜிதா நிஸாத், பிரதி அதிபர் எம்.எச்.நுஸ்ரத் பேகம், பகுதித் தலைவர் எஸ்.முஸம்மில் உட்பட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

சதகா புலடின் வெல்பெயார் பௌண்டேஷன் அனுசரணையில் சுமார் மூன்று லட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் 51 மாணவர்களுக்கு இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டன.

இவற்றை பெற்றுக் கொடுப்பதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்த பொறியியலாளர் எம்.சீ.கமால் நிஸாத், அவரது துணைவியார் டாக்டர் நஸ்ரின் ஸாஜிதா நிஸாத் மற்றும் நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.எல்.எம்.இல்யாஸ் ஆகியோருக்கு அதிபர் யூ.எல்.நஸார் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.


www.metromirror.lk
metromirrorweb@gmail.com
Whatsapp 0779599929

Friday, June 10, 2022

சாய்ந்தமருது, கல்முனையில் வீசும் தூர்நாற்றம்; வழக்கு விசாரணை ஜூலை 18ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு..!


(கல்முனை நிருபர்)

சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசங்களில் வீசும் தூர்நாற்றம் தொடர்பாக கல்முனை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

குறித்த தூர்நாற்றம் எங்கிருந்து வருகிறது என்பதை இதுவரை துல்லியமாக கண்டறிந்து, அதனை இல்லாமல் செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, கல்முனை மாநகர சபையின் சுகாதார நிலையியற் குழுவின் தவிசாளரான சட்டத்தரணி றோஷன் அக்தாரினால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கு கடந்த 6ஆம் திகதி கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டு, அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த சுற்றாடல் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட எட்டுப் பேரில் முதலாம் பிரதிவாதி தவிர்ந்த ஏனைய 07 பிரதிவாதிகளும் நீதிமன்றுக்கு சமூகமளித்திருந்தனர்.

பிரதிவாதிகள் சார்பிலான ஆட்சேபனைகள், வாதப்பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதவான் குறித்த வழக்கை தொடந்து நடத்த தீர்மானித்த்தார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபை சார்பில் ஆஜரான சட்டத்தரணி, குறித்த துர்நாற்றம் சாய்ந்தமருது கரைவாகு பகுதியில் இயங்கி வருகின்ற விலங்கறுமனையிலிருந்து வருவதாகவும் விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டதை தொடந்து, இதுவரை ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கான காரணங்களைக் கோரிய நீதிமன்று சம்மந்தப்பட்ட தரப்பினரை எச்சரித்தது. 

சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் மேலதிக துப்புரவு பணிக்காகவும் ஏனைய நடவடிக்கைகளுக்காவும் கால அவகாசம் தேவைப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை சார்பான சட்டத்தரணி மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோர் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, நீதிமன்று கால அவகாசம் வழங்கி, அறிக்கை சமர்ப்பிக்கவும் மேலதிக விசாரணைக்காவும் வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 18ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணிகளான எம்.எஸ்.ரஸாக், பிரேம் நவாத், சுகாஷ் பிர்தௌஸ், ஜாவீட் ஜெமீல் மற்றும் முஹம்மட் ரிப்கான் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகளான சாரிக் காரியப்பர், அன்சார் மௌலானா, ஆரிகா காரியப்பர் மற்றும் ஏ.எல்.எம்.றிபாஸ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

Thursday, June 9, 2022

புனரமைப்பு செய்யப்பட்ட ஆலங்குளம் வைத்தியசாலை மீண்டும் திறப்பு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.ஐ.சம்சுதீன்)

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள ஆலங்குளம் ஆரம்ப வைத்தியசாலை இன்று வியாழக்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவிலுள்ள இவ்வைத்தியசாலை 1994ஆம் ஆண்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டதாகும். கடந்த சில வருடங்களாக புனரமைப்பின்றி காணப்பட்ட இவ்வைத்தியசாலையின் கட்டிடம் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை எடுத்துக் கொண்ட அயராத முயற்சி காரணமாக சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் அனைத்து மீள் நிர்மாணம் செய்யப்பட்டு, மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இப்பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2000 குடும்பத்தினர் பயனடைவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.எம்.முபாரிஸ் தலைமையில் இடம்பெற்ற இதன் திறப்பு விழாவில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வைத்தியசாலையின் சேவைகளை ஆரம்பித்து வைத்தார்.

அத்துடன் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் எம்.ஐ.எம்.தொளபீக், திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.எம்.வாஜித், திட்டமிடல் வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சி.எம்.மாஹிர், மாகாண சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் வி.ரி.சர்மா, பொறியியலாளர் எம்.எம்.எம்.ஹக்கீம் உள்ளிட்டோரும் அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.

இதன்போது இவ்வைத்தியசாலையினால் முன்னெடுக்கப்பட வேண்டிய மருத்துவ சேவைகள், அதற்காக ஏற்படுத்தப்பட வேண்டிய மேலதிக வசதிகள், தேவையான மருத்துவ உபகரணங்களை தருவித்தல் மற்றும் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

Wednesday, June 8, 2022

குவைத் நிதியில் குடுவில் பகுதியில் வீட்டுத்திட்டம்; பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூரிடம் உறுதியளித்தார் தூதுவர்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

அம்பாறை மாவட்டத்திலுள்ள மிகவும் பின்தங்கிய குடியேற்றக் கிராமமான குடுவில் பகுதியில் குவைத் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 40 வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு அந்நாட்டுத் தூதுவர் ஹலாஃப் பு தாய்ர், கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் உறுதியளித்துள்ளார்.

அத்துடன் கல்முனைப் பிராந்தியத்தின் முன்னேற்றத்திற்கு உதவுவதற்கும் குவைத் தூதுவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள குவைத் தூதரகத்தில் புதன்கிழமை (08) இடம்பெற்ற சந்திப்பின்போது பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் விடுத்த வேண்டுகோளையேற்றே தூதுவர் மேற்படி விடயங்களுக்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

இச்சந்திப்பின்போது நாட்டில் நிலவும் சமகாலப் பிரச்சினைகள் மற்றும் கல்முனைப் பிரதேசத்திலுள்ள தேவைப்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்த பிரதி முதல்வர், தனது பிராந்தியத்துக்கு உதவிகளை மேற்கொள்ளுமாறு தூதுவரிடம் கேட்டுக்கொண்டார். தன்னால் இயலுமான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக தூதுவர் இதன்போது உறுதியளித்தார்.

முன்னாள் அமைச்சரும் குவைத், பஹ்ரைன் நாடுகளின் முன்னாள் தூதுவருமான தனது தந்தை ஏ.ஆர்.மன்சூர் பெயரில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 900 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஞாபகார்த்த மண்டபம், கல்முனை முஹையத்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் உள்ளிட்ட பல அபிவிருத்திப் பணிகளுக்கு குவைத் அரசாங்கம் நிதியுதவி வழங்கியதை நினைவுகூர்ந்து, பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் இதன்போது நன்றி பாராட்டினார்.

இதன்போது, தனது நினைவுப் பேழையில் வைத்திருந்த ஏ.ஆர். மன்சூருடனான புகைப்படத்தை காண்பித்து இருவருக்குமிடையிலான தொடர்புகளை சிலாகித்துப் பேசிய தூதுவர், அப்போதைய நெகிழ்ச்சியான தருணங்களையும் இதன்போது பகிர்ந்து கொண்டார்.

அத்துடன் காலஞ்சென்ற முன்னாள் தூதுவரான அப்துல்லாஹ் நஸீர், ஞாபகார்த்தமாக நினைவேட்டில் ரஹ்மத் மன்சூர் தனது குறிப்புகளை பதிவு செய்தார். இச்சந்திப்பில் குவைத் தூதரகத்தின் சமூக, நலன்புரி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் முஹம்மட் பிர்தெளஸும் கலந்து கொண்டார்.







www.metromirror-lk
metromirrorweb@gmail.com
Whatsapp 0779599929