Monday, January 31, 2022

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் 'அரண்' சஞ்சிகை வெளியீட்டு விழா..!


(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.ஐ.சம்சுதீன்)

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் 'அரண்' காலாண்டு சஞ்சிகையின் இரண்டாவது தொகுதி வெளியீட்டு விழா இன்று திங்கட்கிழமை (31) பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தெளபீக் கெளரவ அதிதியாகவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரும் அரண் சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான டொக்டர் எம்.பி.எம்.வாஜித், சஞ்சிகை பற்றிய அறிமுகவுரையையும் அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆஸாத் எம்.ஹனிபா ஆய்வுரையையும் நிகழ்த்தினர்.

சஞ்சிகையின் முதற் பிரதி தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் அவர் பொன்னாடை போர்த்தியும் கெளரவிக்கப்பட்டார்.

சஞ்சிகையின் இணை ஆசிரியர் பாஸித் முஹைதீன் ஏற்புரை மற்றும் நன்றியுரையை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் பணிமனையின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், பிரதேச வைத்திய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.















More Pictures: https://www.facebook.com/metromirrorsl/posts/385956270002785

Sunday, January 30, 2022

மலையக மாணவர்கள் மலையக சமூகத்தை மாற்றக்கூடிய வல்லமை உள்ளவர்களாக மாற வேண்டும்; அருட்கலாநிதி சந்ரு பெர்னாண்டோ..!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

மலையக மாணவர்கள் மலையக சமூகத்தை மாற்றக்கூடிய வல்லமை உள்ளவர்களாக மாற வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளரும் சர்வதேச இசைக் கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கைத் தூதுவருமான அதிவண/ பிதா அருட்கலாநிதி எஸ். சந்ரு பெர்னாண்டோ (J.P. Whole lsland)  தெரிவித்துள்ளார்

மலையக மாணவர்களின் கல்வி மேம்பாடு கருதி மாணவர்களின் பயன்பாட்டுக்காக போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்குகின்ற மாபெரும் வைபவம் ஹட்டன் ம.மா/ஹ/ குயில்வத்தை தமிழ் மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் (27) மாலை இடம்பெற்றவேளை அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கல்லூரி அதிபர் எம். வேல்முருகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் இந்த இடத்தில் பேசுவதற்குக் காரணம் உங்களைப் போன்று சிறந்த முறையில் கல்வி கற்றதனால்தான். ஆகவே, பலர் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் கல்வி மேம்பாட்டுக்காக பல உதவிகளைச் செய்து வருகின்றோம். அதனைப் பெற்று நீங்களும் இந்த சமூகத்திற்கு பயனுள்ள மனிதர்களாக வாழவேண்டும்.

இன்று கடுமையான பாதைகளைக் கடந்து வந்தவர்கள் தான் உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ளனர். மலையகத்தில் கலைப்பட்டதாரிகள் அதிகமாக உள்ளனர். அதனையிட்டு நாங்கள் சந்தோசமடையும் அதேவேளை, எதிர்காலத்தில் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அரசியல் பொருளாதாரத் துறைகளில் நாம் விருத்தி காணவேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பத்தின் ஊடாக தான் வர்த்தகத் துறையில் தேடி நுழைய வேண்டும். அப்போதுதான் தம்மை தாம் உயர்த்திக் கொள்ள முடியும். ஹட்டன் பகுதியில் பல பிரபல பாடசாலைகள் பொறியியலாளர்கள், மருத்துவர்கள் போன்ற துறைகளுக்கு மாணவர்களை அனுப்பி வைத்த போதிலும் முழு மலையகத்தைப் பொறுத்தமட்டில் அது போதுமானதாக இல்லை.

ஆகவே, நீங்கள் தங்களுக்கு செய்யும் உதவி, சிறந்த முறையில் கல்வியைப் பெற்று இந்த சமூகத்தை மாற்றக்கூடிய வல்லமை உள்ளவர்களாக மாற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்டத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பீ.வி.ஜீ மாணியங்கம, வேர்ல்ட் விஷன் ஸ்ரீலங்காவின் நுவரெலியா மாவட்ட செயற்றிட்ட முகாமையாளர் மனோஜ் ஜூட் தவராஜா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், ஹட்டன் ஹைலன்ஸ் தேசிய பாடசாலையின் ஆசிரியர்களான டீ. ஜஸ்டீன் செல்வகுமார், என்.முருகானந்தன் மற்றும் மத விவகாரங்களுக்கான செயலாளரின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் (FFSL.REFEREE) ஏ.டீ. முரளி, நோர்வூட் பிரதேசத்தின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.நிசாரியேஸ் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.







அக்கரைப்பற்றில் மாபெரும் புகைப்படத் திருவிழா இன்று ஆரம்பம்..!

(சியாத்.எம்.இஸ்மாயில்)

அக்கரைப்பற்றில் புகைப்படத் திரு விழா இன்று சனி மற்றும் நாளை ஞாயிறு ஆகிய தினங்களில்  காலை 8 .00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரை அக்கரைப்பற்று மாநகர சபையின்  ஹல்லாஜ் மண்டபத்தில்  நடைபெறவுள்ளது. 

Club Photo Ceylonica ஏற்பாட்டில் எமது பிராந்திய புகைப்பட கலைஞர்களின் திறமைகளை போட்டிகள் மற்றும் கண்காட்சிகள் வாயிலாக வெளிக்கொணர்ந்து அவர்களைப் பாராட்டி ஊக்குவிக்கின்ற செயற்பாடுகளை வருடாந்தம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இத்  திருவிழாவில் சர்வதேச புகைப்படப் போட்டிகள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாண புகைப்படக் கலைஞர்களிடையே வெற்றி பெற்ற புகைப்படக் கலைஞர்களின் படைப்புக்கள், அக்கரைப்பற்று வரலாற்றுடன் தொடர்புடைய பழைய புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு தினங்களும் புகைப்படத்துறை சம்பந்தமான பயிற்சிப்பட்டறைகளும் துறைசார் விற்பன்னர்களால் நடாத்தப்படவுள்ளது . 

புகைப்படக் கலைஞரும் விழா ஏற்பாட்டாளருமான அப்துல் ஹமீட் தாஹிர் தலைமையில் இன்று சனிக்கிழமை  (29)  நடைபெறவுள்ள புகைப்படத்திரு விழா நிகழ்வில், அக்கரைப்பற்று மாநகரசபை மேயர் அதாஉல்லா அகமட் சகி  பிரதம அதிதியாக கலந்துகொள்வதோடு, கௌரவ அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், சர்வதேச விருது வெற்றியாளர் ஹர்ஷ மதுரங்க ஜெயசேகர, அக்கரைப்பற்று பிரதேச செயலக கலாசார மேம்பாட்டு கலாசார உத்தியோகத்தர் ஐ.எல்.றிஸ்வான், மாவட்ட உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.ஏ.தீன் முகம்மட் , போட்டோஹப்பின் தலைமை பிரவீன், சமரக்கோன், எழுத்தாளர் உமாவரதராஜன், பட தாயாரிப்பாளரும் எமுத்தாளருமான ஹசீன் ஆதம் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.  

நாளை ஞாயிற்றுக்கிழமை (30) ஆம் திகதி  கழக தலைவரும் வைத்தியருமான ஆகில் அஹ்மட் ஷரிபுத்தீன் தலைமையில் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழா நிகழ்வில்,  பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாகவும்  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எஸ்.நவநீதன், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எஸ். முகம்மட் அன்சார், அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக், FNPIAS சர்வதேச விருது வெற்றியாளர் ஹர்ஷ மதுரங்க ஜெயசேகர,  போட்டோஹப்பின் தலைமை பிரவீன் சமரக்கோன் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறபிக்கவுள்ளனர். 

மேலும் இறுதி நாள்  நிகழ்வுகளில் போட்டி  நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கான  விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண கொவிட் நிலைமைகளினால் நடாத்த முடியாது போயிருந்த இக்கண்காட்சியானது இம்முறை வழமையை விட மிகவும் சிறப்பாக புகைப்பட ஆர்வர்களினதும் அனுசரணையாளர்களினதும் ஒத்துழைப்புக்களோடு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  

முற்றிலும் இலவசமாக நடைபெறும் இப்புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டு, கிழக்கு மாகாண புகைப்பட கலை ஆர்வலர்களுக்கு உந்து சக்தி அளிக்குமாறு ஏற்பாட்டாளர்கள்  திறந்த அழைப்பு விடுக்கின்றனர்.

Saturday, January 29, 2022

மாளிகைக்காட்டில் இலவச வைத்திய பரிசோதனை முகாம்..!


(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையும் மாளிகைக்காடு ஸம் ஸம் சனசமூக நிலையமும் இனைந்து ஒழுங்கு செய்திருந்த இலவச வைத்திய பரிசோதனை முகாம் இன்று (29) மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப் பள்ளி கலாச்சார மண்டப வளாகத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது வைத்தியாசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பரின் வழிகாட்டலில் இடம்பெற்ற வைத்திய பரிசோதனை முகாமில் இரத்த அழுத்தம், சீனி மற்றும் சிறுநீரக பரிசோதனைகள் உட்பட பல்வேறு நோய்களுடன் தொடர்புடைய பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு, அறிக்கைகள் வழங்கப்பட்டன.

பெருமளவிலான பொது மக்கள் இவ்வைத்திய முகாமுக்கு வருகைதந்து பயன் பெற்றுள்ளனர் எனவும் இப்பெறுமதி மிக்க சேவையை இலவசமாக வழங்கியமைக்காக சாய்ந்தமருது வைத்தியாசாலையின் மருத்துவக் குழாமினருக்கு பிரதேச மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் மாளிகைக்காடு சன சமூக நிலையத் தலைவர் எம்.எச்.நாஸர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மாளிகைக்காடு கிழக்கு கிராம சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.நஜீம் உள்ளிட்ட பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

தொற்றா நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் அண்மைக்காலமாக சாய்ந்தமருது வைத்தியசாலையினால் சாய்ந்தமருது பிரதேசத்தின் பல இடங்களிலும் இவ்வாறான வைத்திய பரிசோதனை சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




 

ஒமிக்ரோன் பிறழ்வினால் கிழக்கில் கொவிட் தாக்கம் அதிகரிப்பு; கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் றிபாஸ் தெரிவிப்பு..!


(அஸ்லம் எஸ்.மௌலானா)

ஒமிக்ரோன் பிறழ்வாக திரிபடைந்துள்ள கொரோனா வைரஸ் நாட்டில் மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ள சூழ்நிலையில் மக்கள் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாமல் அசமந்தப்போக்குடன் செயற்படுவதானது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.

ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில், கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று வீதமும் மரண வீதமும் சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

எமது நாட்டில் கொரோனா தொற்று வீரியமடைந்து நாடு முடக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், இதனை ஆற்றுப்படுத்துவதற்கு சில நாடுகளில் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டபோது எமக்கும் இந்த வாய்ப்புக் கிடைக்காதா என்று அங்கலாய்த்துக் கொண்டோம். பின்னர் தடுப்பூசி கிடைக்கப்பெற்று, அதனை மக்களுக்கு வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டபோது முதலாம், இரண்டாம் டோஸ் செலுத்தும் விடயத்தில் உலகத் தரத்தில் இலங்கை ஆறாவது இடத்தைப் பெற்று, போற்றத்தக்க பூமியாக எல்லோராலும் பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது மூன்றாவது தடுப்பூசியைப் பெறுகின்ற விடயத்தில் மக்கள் ஆர்வம் காட்டாமல், பின்னடிக்கின்ற நிலைமையைப் பார்க்க முடிகிறது. இது ஒமிக்ரோன் பரவளின் பாரதூரத்தை புரிந்து கொள்ளாத தன்மையைக் காட்டுகின்றது. குறிப்பாக எமது பிராந்தியத்தில் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் பெரும் அலட்சியம் காட்டப்படுகிறது.

28ஆம் திகதி வெள்ளிக்கிழமை தரவுகளை நோக்குகின்றபோது ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில், கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று வீதமும் மரண வீதமும் சடுதியாக அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகிறது. அன்றைய தினம் நாட்டில் 934 பேருக்கு கொரோனா தொற்றியுள்ள நிலையில் அவர்களுள் 300 பேர் கிழக்கு மாகாணத்தவர்களாவர். அவ்வாறே 27 மரணங்களில் 04 பேர் கிழக்கு மாகாணத்தவர் என்கிற தகவல் எமக்கு எச்சரிக்கையான செய்தியைச் சொல்கிறது.

தற்போது எமது பிராந்தியத்திலும் கொரோனா பரவல் மிகத் தீவிரமாக பரவி வருகின்றது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களை செவிமடுத்து, செயற்பட மக்கள் முன்வர வேண்டும். மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வம் செலுத்த வேண்டும்.

கொரோனா ஒழிந்து விட்டது என்று எவரும் நினைக்க வேண்டாம். முதலாம், இரண்டாம் அலையின்போது இருந்த அச்சம் இப்போது முற்றாக நீங்கி, எல்லாவற்றையும் மறந்து செயற்படுகிறோம். அடிப்படை சுகாதார நடைமுறைகளைக் கூட கடைப்பிடிக்க தவறி நிற்கின்றோம். இது பேராபத்தையே கொண்டு வந்து சேர்க்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

எமது நாட்டில் தடுப்பூசிக்காக இதுவரை 27 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்து வருகின்ற நடவடிக்கைகளுக்கு எல்லோரும் ஒத்துழைப்பதன் மூலமே கொரோனாவை எமது நாட்டில் இருந்து ஒழிக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த விடயங்கள் தொடர்பாக ஊடகத்துறையினர் கடந்த காலங்களைப் போன்று மக்களை இன்னும் விழிப்பூட்டி, வழிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்- என்றார்.

Thursday, January 27, 2022

சாய்ந்தமருதில் முதுமைப் பெண் கொலை; பணம், தங்க ஆபரணங்களும் கொள்ளை..!

(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.ஐ.சம்சுதீன், பாறூக் ஷிஹான்)

சாய்ந்தமருது பிரதேசத்தில் முதுமைப் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவர் வசமிருந்த தங்க ஆபரணங்களும் பணமும் கொள்ளையிடப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.

இப்பெண்ணின் சடலம் இன்று வியாழன் (27) காலை அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறது.

இச்சம்பவம் தொடர்பாக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுதீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸ் உயர் அதிகாரிகள் பலரும் வருகை தந்திருந்தனர்.

சாய்ந்தமருது-15 ஆம் பிரிவில் புதுப்பள்ளி வீதியிலுள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த நிலையிலேயே 81 வயதுடைய சுலைமான் செய்யது முஹாரி எனும் இப்பெண் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இவரிடமிருந்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிடுவதற்கு முற்பட்ட கொள்ளையர்களினால் இவர் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார் எனவும் இவரது தலையிலும் கழுத்துப் பகுதியிலும் காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்தில் பாரமான கம்பி ஒன்றும் மீட்கப்பட்டிருக்கிறது.

10 ஆண் பிள்ளைகளின் தாயாரான இப்பெண்ணின் கணவரும் 03 பிள்ளைகளும் சில வருடங்களுக்கு முன்னர் மரணனமடைந்துள்ளனர். தனது பிள்ளைகள் அனைவரும் திருமணம் செய்து கொண்டு வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்ற நிலையில், இவர் தனது வீட்டில் தனிமையாக வசித்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்று இரவு தனிமையில் தூங்கிக் கொண்டிருந்த வேளையிலேயே கொள்ளையர்கள் வீடு புகுந்துள்ளனர் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.



Tuesday, January 25, 2022

கல்முனை மாநகர சபையின் வியாபார அனுமதிப் பத்திரத்தை மார்ச் 31ஆம் திகதிக்குள் பெறப்பணிப்பு ..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் இயங்கி வருகின்ற வர்த்தக நிலையங்கள், கடைகள் மற்றும் வியாபார ஸ்தாபனங்களுக்கான நடப்பு ஆண்டுக்குரிய வியாபார அனுமதிப் பத்திரத்தை (Trade Licence) எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக பெற்றுக் கொள்ளுமாறு கல்முனை மாநகர சபை அறிவித்துள்ளது.

இக்காலப்பகுதிக்குள் வியாபார அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளாத வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகர சபை தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக கல்முனை மாநகர சபையினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

கல்முனை மாநகர சபையின் வருடாந்த வியாபார அனுமதிப் பத்திரம் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்குள் பெறப்பட வேண்டும். எனினும் வர்த்தகர்களின் நலன்கருதி இதற்கான கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை நீடிப்பட்டிருக்கிறது. இக்காலப் பகுதிக்குள் அனைத்து வர்த்தகர்களும் கண்டிப்பாக வியாபார அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என பணிக்கப்படுகின்றனர்.

இக்காலப்பகுதிக்குள் வியாபார அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளத் தவறும் வர்த்தக நிலையங்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்கள் மீது, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் வழக்குச் செலவு உட்பட 3000 ரூபா தண்டப்பணமும் அறவிடப்படும் என்று கல்முனை மாநகர சபை மேலும் அறிவித்துள்ளது.

கல்முனை நகரில் பஸ் தரிப்புக்கு தற்காலிக மாற்று ஏற்பாடு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை பஸ் நிலையத்திற்கு முன்பாக வடிகான் நிர்மாணம் மேற்கொள்ளப்படுவதால், வாகனப் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, இங்கு சேவையில் ஈடுபடுகின்ற பஸ்களை தற்காலிகமாக வேறு இடங்களில் தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி, இலங்கை போக்குவரத்து சபை (சி.ரி.பி.) மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து பணியக அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (25) மாலை மாநகர சபையில் இடம்பெற்ற அவசர கலந்துரையாடலில் இந்நடவடிக்கையை முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டிருக்கிறது.

இதன் பிரகாரம் பஸ் நிலையத்திற்கு முன்பாகவோ மாநகர சபை தொடக்கம் பொலிஸ் நிலைய நுழைவாயில் வரையான பகுதியிலோ எந்தவொரு வாகனமும் தரித்து நிற்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.

இதற்கு மாற்று ஏற்பாடாக, மட்டக்களப்பு - கல்முனை வீதியில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற சி.ரி.பி. பஸ்கள் யாவும் கல்முனை ரவுண்டபோர்ட் சந்தி வரை வந்து, பொலிஸ் வீதியூடாக இலங்கை வங்கி சந்தி வரை சென்று சி.ரி.பி. சாலை அமைந்துள்ள ஹிஜ்ரா வீதியோரமாக தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

அவ்வாறே, மட்டக்களப்பு - கல்முனை வீதியில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற தனியார் பஸ்கள் யாவும் ரவுண்டபோர்ட் சந்தி வரை வந்து, பொலிஸ் வீதியூடாக பொலிஸ் நிலையம் வரை சென்று, நற்பிட்டிமுனை நோக்கி செல்லும் வீதியில் பொலிஸ் நிலைய ஓரமாக தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

கல்முனை - அக்கரைப்பற்று மற்றும் கல்முனை - அம்பாறை வீதிகளில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற சி.ரி.பி. மற்றும் தனியார் பஸ்கள் யாவும் மக்கள் வங்கிக்கு முன்பாக ஆர்.கே.எம். பாடசாலை நோக்கி செல்லும் சந்தியில் இருந்து வீதியோரமாக தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை போன்ற தூர இடங்களுக்கான சேவைகளில் ஈடுபடுகின்ற பஸ்களும் மேற்படி ஒழுங்கு விதிகளின் பிரகாரம் உரிய இடங்களில் மாத்திரம் தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

சேவைக்கான நேரம் வரும் வரை காத்திருப்பிலுள்ள பஸ்கள் அனைத்தும் அமானா வங்கி அமைந்துள்ள ஐக்கிய சதுக்கத்திலும் சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியிலும் தரித்து நிற்க வேண்டும். இவை எக்காரணம் கொண்டும் வீதியோரங்களில் தரித்து நிற்க முடியாது.

கல்முனை பஸ் நிலைய வளாகத்தை புனரமைத்து, அழகுபடுத்தும் வேலைத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற வடிகான் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையும் வரை நாளை புதன்கிழமை (26) தொடக்கம் இந்த ஒழுங்கு முறையை அமுல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிர்மாணப் பணிகள் நிறைவுற்று, வழமை நிலைக்குத் திரும்பும் வரை பஸ் நடத்துனர்களும் பயணிகளும் வர்த்தகர்களும் அசௌகரியங்களை சகித்துக் கொண்டு, இவ்வறிவுறுத்தல்களின் பிரகாரம் செயற்படுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

சுமார் ஒரு வார காலத்தில் இந்த நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வேலைகளை இரவு பகலாக துரிதமாக முன்னெடுத்து முடிக்குமாறு மாநகர முதல்வர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Monday, January 24, 2022

மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா மதனியை பாராட்டி கௌரவிக்கும் விழாவும் நூல் வெளியீடும்

(அஸ்லம் எஸ்.மௌலானா) 

அரை நூற்றாண்டு காலமாக கல்விப் பணியாற்றி வருகின்ற அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும் சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியின் முதல்வருமான மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா (மதனி) அவர்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவமும் அவரது சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவும் எதிர்வரும் பெப்ரவரி 06ஆம் திகதி சாய்ந்தமருது லீ மெரிடியன் மணடபத்தில் இடம்பெறவுள்ளன.

மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா அவர்கள், தனது கடந்த ஐம்பது வருட கால கல்விப் பணியின்போது கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி உள்ளிட்ட சில பாடசாலைகளில் இஸ்லாம் மற்றும் அரபு பாட ஆசிரியராக, தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளராக, தொலைக்கல்வி போதனாசிரியராக, அரபுக் கல்லூரிகள் பலவற்றின் அதிபராக சேவையாற்றி, பன்னூறு உலமாக்கள் மற்றும் கல்விமான்கள் பட்டம் பெற பெரும் தொண்டாற்றியிருக்கிறார்.

இக்காலப் பகுதிகளில் அவரிடம் கல்வி கற்றுத் தேர்ந்த மாணவர் குழாம் ஒன்றே மேற்படி நிகழ்வுகளுக்கான ஒழுங்குகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிகழ்வின்போது 'மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா (மதனி) - கல்வி, சமூகப் பணிகளும் பயணங்களும்' எனும் நூல் வெளியீட்டு வைக்கப்படவுள்ளமை முக்கிய அம்சமாகும் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. 

இந்நிகழ்வில் உலமாக்கள், கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள், பள்ளிவாசல்கள், நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர் என மேலும் அறிவிக்கப்படுகிறது.

Saturday, January 22, 2022

அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு; 1997 - 2021 காலப்பகுதியில் சேவையாற்றியோருக்கு அநீதி; கிழக்கு கல்வி நிருவாக அதிகாரிகள் சங்கம் அரசுக்கு மகஜர்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்த்து வைப்பதற்காக பொது நிருவாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் 1997 ஆம் ஆண்டு முதல் 2021 டிசம்பர் வரையான காலப்பகுதியில் கடமையாற்றிய அதிபர், ஆசிரியர்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படவில்லை என இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த சுற்று நிருபம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர், கல்வி அமைச்சர் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் உள்ளிட்டோருக்கு அந்த சங்கம் மகஜர்களை அனுப்பி வைத்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளரும், ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.முகம்மட் முக்தார் தெரிவிக்கையில்;

1997ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்த பொது நிருவாக அமைச்சின் சுற்றறிக்கை ஒன்றினால் ஏற்பட்ட அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு வழங்கும் பொருட்டு, சுமார் 24 வருடங்களுக்குப் பின்னர் நிதி அமைச்சரின் பரிந்துரைக்கமைவாக தற்போது சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இச்சுற்றறிக்கை வெளியிடுகையில் 1997 முதல் 2021 டிசம்பர் வரையான 24 வருட காலப்பகுதியில் சேவையாற்றி ஓய்வுபெற்ற அல்லது பதவி உயர்வு பெற்ற அதிபர், ஆசிரியர்கள் புறக்கணிப்பு செய்யப்பட்டு, அவர்களுக்கு எவ்வித நிவாரண ஏற்பாடுகளுமின்றி இச்சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளமையானது பெரும் அநீதியாகும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபமானது அதிபர், ஆசிரியர்களுக்கு புதிதாக வழங்கப்படும் சம்பள உயர்ச்சிக்கானதல்ல. மாறாக 1997 ஆம் ஆண்டு அதிபர், ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான ஒரு நிவாரணம் 24 வருடங்களுக்கு பின்னர் வழங்கப்படுகிறது என்பதை கல்வியமைச்சு மற்றும் பொது நிருவாக அமைச்சு அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை என்பதுடன் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு காணுமாறு கோரிய கல்வி சார் தொழிற்சங்கங்களும் இதனை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டத் தவறி விட்டன.

பொதுவாகவே சம்பள உயர்வு தொடர்பான சுற்றறிக்கையை வெளியிடும்போது துறைசார் அமைச்சுக்கள் இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்தாமல் விடுவதும் பின்னர் போராட்டங்கள் இடம்பெறுவதும் இலங்கை அரச நிருவாகத்தில் வாடிக்கையானதொரு விடயமாகி விட்டது.

ஆகையினால் 1997 முதல் 2021 வரையான காலப்பகுதியில் அதிபர், ஆசிரியர்களாக அர்ப்பணிப்புடன் கடமையாற்றி, ஓய்வுபெற்றவர்களுக்கும் சட்டப்படி உரித்தான சம்பள அதிகரிப்பு கிடைக்கும் வகையில் குறித்த சுற்று நிருபத்தை திருத்தம் செய்து வெளியிடுமாறு அந்த மகஜர் மூலம் வலியுறுத்தியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Wednesday, January 19, 2022

கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளராக ஐ.எல்.எம்.றிபாஸ் கடமையேற்பு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.ஐ.சம்சுதீன்)

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் இன்று புதன்கிழமை (19) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 03 வருடங்களாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றி வந்த வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி வந்த நிலையிலேயே வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

கடமையேற்பு நிகழ்வில் இடமாறிச் செல்லும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.எம்.வாஜித், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர் உட்பட வைத்திய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வைத்திய அதிகாரிங்கள் மற்றும் உத்தியோகத்தர்களினால் வரவேற்கப்பட்ட புதிய பணிப்பாளர் டொக்டர் றிபாஸ் அவர்கள், அனைவரது வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தார்.

இன, மத, பிரதேச வேறுபாடின்றி பிராந்திய சுகாதாரத்துறையை முன்னேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் கடமையாற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த புதிய பணிப்பாளர் டொக்டர் றிபாஸ், அதற்காக அனைவரதும் ஒத்துழைப்பை எதிரிபார்ப்பதாகவும் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.

காத்தான்குடியை சேர்ந்த வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்கள் கொழும்பு கண் தேசிய வைத்தியசாலை உட்பட பல்வேறு வைத்தியசாலைகளில் கடமையாற்றியிருப்பதுடன் வைத்திய நிர்வாகத்துறையில் சிறந்த தேர்ச்சியும் ஆளுமையும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.





metromirrorweb@gmail.com

Thursday, January 13, 2022

அதிபர் நியமனத்திற்கான விண்ணப்பம் மொழி அடிப்படையில் கோரல்; நீதிமன்ற நடவடிக்கையின் எதிரொலி என்கிறது கிழக்கு கல்வி நிருவாக அதிகாரிகள் சங்கம்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

இலங்கை அதிபர் சேவை நியமனத்திற்கு விண்ணப்பம் கோரும்போது கடந்த காலங்களில் மொழி உள்ளிட்ட சில விதிமுறைகள் மீறப்பட்டதை ஆட்சேபித்து நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதன் எதிரொலியாகவே இம்முறை மொழி வாரியாக விண்ணப்பம் கோரப்பட்டிருக்கிறது என இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக இம்முறை தமிழ் மொழி பேசுவோருக்கென பிரத்தியேகமாக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதன்படி நாடளாவிய ரீதியில் தமிழ் மொழி மூலம் 1525 பேர் கட்டமைக்கப்பட்ட நேர்முக பரீட்சையின் மூலம் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

வட மாகாணத்தில் இருந்து 230 பேரும், கிழக்கு மாகாணத்தில் இருந்து 623 பேரும் ஏனைய மாகாணங்களில் இருந்து சுமார் 700 பேரும் தமிழ் மொழி மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த அதிபர் சேவை பிரமாணக் குறிப்பை பின்பற்றி இம்முறை தமிழ் மொழி மூலம், சிங்கள மொழி மூலம் என தனித்தனியாக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற நியமனத்தில் இவ்விதிமுறை மீறப்பட்டமை தொடர்பாக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகள் நடைபெற்று வருவதன் எதிரொலியாகவே இம்முறை மொழி வாரியாக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Wednesday, January 12, 2022

அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மார்ச் மாதத்திலேயே சாத்தியம்..?

(அஸ்லம் எஸ்.மௌலானா)

2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஆசிரியர், அதிபர்களுக்கான சம்பள உயர்வு மார்ச் மாதத்திலேயே சாத்தியமாகலாம் என இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண செயலாளர் ஏ.எல்.முகம்மது முக்தார் தெரிவித்தார்.

இது பற்றி அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

ஆசிரியர், அதிபர்களின் தொடர்ச்சியான போராட்டங்களையடுத்து நிதி அமைச்சரினால் வரவு-செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பு இம்மாதம் வழங்கப்படும் என நிச்சயமாக கூற முடியாது.

ஏனெனில் அதனை வழங்குவதற்கான ஏற்பாடுகள் பல படிமுறைகளில் முன்னெடுக்கப்பட வேண்டும். அவை இன்னும் நிறைவுக்கு வந்ததாக அறியக் கிடைக்கவில்லை.

குறிப்பாக அறிவிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பை அமைச்சரவை அங்கீகரித்த பின்னர் சம்பள ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டு, அதன் அங்கீகாரம் பெறப்பட்ட பின்னர் திறைசேரிக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேண்டும். அதன் பின்னர் திறைசேரியினால் அங்கீகாரம் வழங்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு மற்றும் கட்டு நிதி என்பன வழங்கப்பட வேண்டும்.

இதன் பின்னர் கல்வி அமைச்சு அது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்ற ஆகக் குறைந்தது இரண்டு மாதங்கள் வரை செல்லக்கூடும். இதன் பின்னர் வலயக் கல்வி அலுவலகங்களினால் சுயவிபரக்கோவை அடிப்படையில் சம்பள மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

இதன் பிரகாரம் ஆசிரியர், அதிபர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் மார்ச் மாதத்திலேயே கிடைக்கும் சாத்தியம் உள்ளது. அப்போது ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்கான பாக்கியும் சேர்த்து வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பொருளியல் துறையில் கலாநிதி பட்டம் பெற்ற ஏ.எல்.எம்.அஸ்லம் பாராட்டி கௌரவிப்பு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

பேராதனை பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் கலாநிதி பட்டத்தை பெற்றுக் கொண்ட சம்மாந்துறை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அஸ்லம், அப்பிரதேச செயலகத்தினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலக பிரதம கணக்காளர். எஸ்.எல்.ஆதம்பாவா உட்பட அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அஸ்லம், பிரதம கணக்காளர் உள்ளிட்ட அதிகாரிகளினால் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் பொருளியல் துறையில் முதல் நிலையில் சித்தியடைந்திருந்த இவர் இலங்கை திட்டமிடல் சேவையில் சித்தியடைந்து, பல பிரதேச செயலகங்களில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றி, தற்போது சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பணியாற்றி வருகின்றார்.

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவரான இவர், சாய்ந்தமருதை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் மர்ஹூம் அஹ்மட் லெப்பை தம்பதியரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.