Friday, October 27, 2023

கல்முனை மாநகர வர்த்தகர்களுக்கு நுகர்வோர் அதிகார சபையின் விழிப்புணர்வுக் கருத்தரங்கு.!

-ஏ.எஸ்.மெளலானா-

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட செயலகம் கல்முனை மாநகர சபையுடன் இணைந்து இம்மாநகர ஆள்புல எல்லைக்குட்பட்ட வர்த்தகர்களுக்கு ஒழுங்கு செய்திருந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று வெள்ளிக்கிழமை (27) மாநகர சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட  நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரி முஹம்மட் ஸாஜீத் ஸமான் பிரதான வளவாளராக கலந்து கொண்டு, வியாபார செயற்பாடுகளின் போது வர்த்தகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட, ஒழுங்குகள் மற்றும் விதிமுறைகள் குறித்து தெளிவுபடுத்தினார்.

இதன்போது வர்த்தகர்களினால் எழுப்பப்பட்ட வினாக்கள் மற்றும் சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கர்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், நுகர்வோர் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகளான ஏ.ஏ.ஏ. ஸர்பான், ஏ.பீ.எம். றிப்சாத் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.












Wednesday, October 25, 2023

கல்முனை மாநகர பட்ஜெட்டுக்கு கல்முனையன்ஸ் போரத்தினால் முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு.!

-ஏ.எஸ்.மெளலானா-

கல்முனை மாநகர சபையின் 2024ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கு கல்முனையன்ஸ் போரம் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது.

அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் முபாரிஸ் எம்.ஹனிபா தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை (25) பிற்பகல், மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்களிடம் இதனைக் கையளித்துள்ளனர்.

இந்நிகழ்வில் மாநகர பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸியும் பங்கேற்றிருந்தார்.

இதன்போது குறித்த முன்மொழிவுகளை மாநகர சபையின் பட்ஜெட்டில் உள்வாங்கி, நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி ஆணையாளரிடம் வலியுறுத்தப்பட்டது.

கல்முனை மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு பொது மக்கள் மற்றும் பொது அமைப்புகளிடம் முன்மொழிவுகளை கோரியமைக்காக கல்முனையன்ஸ் போரம் செயற்பாட்டாளர்களினால் இதன்போது ஆணையாளருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களிடையே செயற்றிறன் மதிப்பீட்டில் கல்முனை மாநகர சபை முதலாம் படிநிலைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும் அதற்காக ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு கல்முனை மக்கள் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.


Tuesday, October 24, 2023

கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களிடையே செயற்றிறன் மதிப்பீட்டில் கல்முனை மாநகர சபை முன்னிலையில்..!

-சாய்ந்தமருது செய்தியாளர்-

கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையிலான செயற்றிறன் மதிப்பீட்டில் கல்முனை மாநகர சபை முதலாம் படிநிலைக்கு உள்வாங்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையே செயற்றிறன் மதிப்பீட்டை மேற்கொண்டு, அதற்கமைவாக இம்மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் மற்றும் ஏனைய வளங்களை LDSP திட்டத்தின் ஊடாக வழங்குகின்ற செயற்பாடு வருடா வருடம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் கடந்த காலங்களில் 02ஆம், 03ஆம் படி நிலைகளில் இருந்து வந்த கல்முனை மாநகர சபையானது இவ்வருட ஆரம்பம் முதல் மாநகர ஆணையாளர் தலைமையில் தொடர்ந்தேச்சியாக செயற்படுத்தி வந்த நிர்வாக சீர்படுத்தல்கள், சீரான ஆளணி முகாமைத்துவம், திட்டமிட்ட அடிப்படையிலான உட்கட்டமைப்பு விருத்திகள், நவீனமயப்படுத்தப்பட்ட முகப்பு அலுவலக வசதிகள் என்பவற்றோடு மாநகர சபையின் உத்தியோகத்தர் மற்றும் ஊழியர் குழாத்தின் அயராத முயற்சிகளின் பயனாக இவ்வருட செயற்றிறன் மதிப்பீட்டில் பாரிய வளர்ச்சி வீதத்தினை வெளிப்படுத்தியதன் அடிப்படையிலேயே முதலாம் படி நிலைக்கு உள்வாங்கப்பட்டிருக்கிறது.

இதன் பிரகாரம் முதலாம் படி நிலைக்கு தெரிவாகியுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான விசேட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் வளங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை கல்முனை மாநகர சபையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Monday, October 16, 2023

கல்முனை நகரை பூச்சாடிகளால் அழகுபடுத்தும் திட்டம் ஆரம்பம்.!

-சாய்ந்தமருது செய்தியாளர்-

கல்முனை நகரை அழகுபடுத்தும் (City Beautification) திட்டத்தின் ஓர் அங்கமாக நகரின் முக்கிய பகுதிகளில் பூச்சாடிகள் வைக்கும் வேலைத் திட்டம் இன்று திங்கட்கிழமை (16) மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி, வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன், தொழில் நுட்ப உத்தியோகத்தர்களான எம்.அமீர், வி.சுகுமார், எம்.ஏ.நிஸார், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.நௌசாத் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒத்துழைப்புடன் மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் இவ்வேலைத்தின் பிரகாரம் முதற்கட்டமாக கல்முனை மக்கள் வங்கி சந்தி முதல் தரவைக் கோவில் சந்தி வரையான இருபக்க போக்குவரத்து பாதையின் நடுப்பகுதி நெடுகிலும் பூச்சாடிகளை வைத்து அழகுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.









Tuesday, October 3, 2023

ஒலுவில் கடலில் நீராடுவதை தவிர்ப்போம்; உலமா சபை வேண்டுகோள்.!

-அஸ்லம் எஸ்.மெளலானா-

ஒலுவில் பிராந்திய கடலில் நீராடுவதை தவிர்ந்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபையின் ஒலுவில் கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனை வலியுறுத்தி அதன் தலைவர் மௌலவி ஏ.எல். பைஸல், செயலாளர் மெளலவி எம்.எல். பைசால் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பிரதேசத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம், வெளிச்ச வீடு, ஒலுவில் துறைமுகம் போன்றவை அமைந்திருப்பதால் பல பகுதிகளில் இருந்தும் அனேகமானவர்கள் இவற்றைப் பார்வையிட வருகை தருகின்றனர்.

குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள், க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகள் எழுதிய பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள் மற்றும் சகபாடிகள் என பலர் வருகைதந்து இம்முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிடுவதுடன் கடலில் நீராடுவதிலும் ஈடுபடுகின்றனர்.

ஆனால் தென்கிழக்குப் பிராந்திய கடற்பரப்பில் ஒலுவில் சற்று ஆழம் கூடிய கடற்பரப்பாக காணப்படுகிறது. இதனை பெரும்பாலானோர் அறிந்திருப்பதில்லை.

இந்நிலையில் கடலில் பரீட்சயம் இல்லாத இளையோர்கள் பல சந்தர்ப்பங்களில் இக்கடலில் மூழ்கி மரணத்தை தழுவுகின்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன.

மரணத்தை எழுதி வைத்தவன் அல்லாஹ். எந்த இடத்தில் மரணத்தை அல்லாஹ் நாடி இருக்கின்றானோ அங்கே அவரை கொண்டு சேர்ப்பான். இருப்பினும் மனிதன் தற்பாதுகாப்பாக நடந்து கொள்வதன் மூலமாக மேற்படி இடர்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியுமாக இருக்கும்.

இப்பிரதேச கடற்கரையை அண்மித்து வசிப்பவர்களை விட தூர பிரதேசங்களிலிருந்து வருவோரே இக்கடலில் மூழ்கி அதிகம் மரணித்துள்ளனர். அதிலும்  வெளியூர்களைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்களின் உயிர்களை இக்கடல் காவு கொண்டுள்ளது.

கடந்த திங்களன்று (02) அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் பிரத்தியேக வகுப்பு முடிவடைந்த பின்னர் சக மாணவர்களுடன் இக்கடலில் நீராடச் சென்று மரணத்தை தழுவி ஜனாசாவாக மீட்கப்பட்டுள்ளார்.

இது போன்ற மனதை உருக்கும் பல சம்பவங்கள் இங்கு தொடர்ச்சியாக இடம்பெறுவது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இவ்வாறான அனர்த்தங்களில் இருந்து எமது இளைய சமூகத்தை பாதுகாப்பது அவசியமாகும்.

ஆகையினால் குறைந்த பட்சம் நீச்சல் திறமை இல்லாதவர்கள் ஒலுவில் பிராந்திய கடலில் நீராடுவதை தவிர்ந்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபையின் ஒலுவில் கிளை பொது மக்களை வினயமாக வேண்டிக்கொள்கிறது- என்று ஒலுவில் உலமா சபை வலியுறுத்தியுள்ளது.





சாய்ந்தமருதில் கடலரிப்பை தடுக்கும் வேலைத்திட்டம் - ஹரீஸ், அதாஉல்லா ஆகியோரின் பங்கேற்புடன் ஆரம்பம்.!

-நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது பிரதேச கடலரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வாரம் (19/09/2023) அன்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சாய்ந்தமருது கடலரிப்பு தடுப்பு நடவடிக்கைக்கான ஆரம்ப கட்ட வேலைகள் இன்று செவ்வாய்க்கிழமை (03/10/2023) ஆரம்பம் செய்து வைக்கப்பட்டது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம். ஆசிக் அவர்களின் நேறிப்படுத்தலில் கரையோரம் பேணல் திணைக்கள மாகாண பொறியியலாளர் எம். துளசிதாசனின் அழைப்பின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா, சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் கலந்து கொண்டு வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

55 மில்லியன் மதிப்பீடு செய்யப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் வேலைகளை தொடங்கி வைத்த இந்நிகழ்வில் சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக கிராம நிலதாரி ஏ.எம்.ஏ. நளீர், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ. நிஷார்தீன், சாய்ந்தமருது பிரதேச செயலக கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகள், சாய்ந்தமருது பிரதேச முக்கியஸ்தர்கள், மீனவ சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.