Sunday, December 29, 2024

சாய்ந்தமருது - மாளிகைக்காடு உலமா சபையினால் கெளரவிக்கப்பட்ட ஆதம்பாவா எம்.பி.!


-சாய்ந்தமருது செய்தியாளர்-

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா அவர்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சாய்ந்தமருது, மாளிகைக்காடு கிளையினால் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வு நேற்று சனிக்கிழமை (28) இரவு ஜம்மியத்துல் உலமாவின் சாய்ந்தமருது காரியாலயத்தில் அதன் தலைவர் மெளலவி எம்.எஸ்.எம். சலீம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது ஊர் நலன் சார்ந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டதுடன் அரசியல் தொடர்பில் மார்க்க ரீதியான  தெளிவுகளும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்யத்துல் உலமாவின் சாய்ந்தமருது, மாளிகைக்காடு கிளையின் நிர்வாகிகள் மற்றும் உலமாக்களும் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.















Friday, December 27, 2024

கல்முனை மாநகர ஆணையாளராக றாபி நியமனம்.!

(சாய்ந்தமருது செய்தியாளர்)

கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக ஏ. ரி. எம். றாபி அவர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர அவர்களினால் இன்று வெள்ளிக்கிழமை (27) நியமிக்கப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று மாநகர ஆணையாளராக கடமையாற்றி வந்த நிலையில் இவருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியை சேர்ந்த இவர் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளராகவும் பல பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றி வருகின்ற என்.எம். நௌபீஸ் அவர்கள், அக்கரைப்பற்று மாநகர ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை முன்னர் கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றி, கிழக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளரா பதவியுயர்வு பெற்றுச் சென்ற ஏ.எல்.எம். அஸ்மி அவர்கள் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2025.01.01 தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனங்கள் வழங்கபட்டுள்ளன.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக ஏ.எல்.எம். அஸ்மி நியமனம்.!

இலங்கை நிருவாக சேவையின் மூத்த SLAS I அதிகாரியான ஏ.எல்.எம். அஸ்மி அவர்கள் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக ஆளுநரால் இன்று (27) நியமிக்கப்பட்டுள்ளார்.

அஸ்மியின் சேவைத் தரம், தகுதி மற்றும் உள்ளூராட்சி நிர்வாகத்தில் ஒரு தசாப்த அனுபவம் என்பவற்றின் அடிப்படையிலும் உள்ளூராட்சி நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு வழங்கிவந்த தலைமைத்துவ வழிகாட்டுதல்கள், நிர்வாக மற்றும் முகாமைத்துவ செயற்பாட்டு திறமைகள் என்பவற்றை கருத்திற்கொண்டும் இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

10 வருடங்கள் உள்ளூராட்சி மன்ற அனுபவத்தில் திளைத்து கிழக்கு மாகாணத்தில் ஒரு சிறந்த உள்ளூராட்சி மன்றமாக அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் கல்முனை மாநகர சபை என்பவற்றை  மிளிரச்செய்வதற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றினார்.

பொத்துவில், அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர், அக்கரைப்பற்று மாநகராட்சி ஆணையாளர், கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளரும், பதிவாளரும், கல்முனை மாநகராட்சி ஆணையாளர், மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (ஆளணி மற்றும் பயிற்சி) கடமையாற்றினார்.

ஏ.எல்.எம். அஸ்மி ஒரு சிறந்த நிருவாகி, இலங்கை நிருவாக சேவையில் 20 வருடங்கள் கடந்து பயனிக்கும் இவர் அரச கடமையினை சட்ட விதிமுறைகளை பேணி தான் எடுத்த உறுதி மற்றும் சத்திய உரை என்பவற்றுக்கு ஏற்ப நேர்மையாக  செய்துவரும் ஒருவராவார்.

-எஸ். ஜாபீர்

Friday, December 20, 2024

சாய்ந்தமருது தாமரைக்குளம் புதுப்பொலிவு பெறுகிறது.!


(சாய்ந்தமருது செய்தியாளர்)

சாய்ந்தமருது தாமரைக் குளத்தில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி, அதனை சுத்தம் செய்யும் வேலைத் திட்டம் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா அவர்களின் அவசர வேண்டுகோளின் பேரில் கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது வைத்தியசாலை, மல்ஹர் சம்ஸ் பாடசாலை மற்றும் பொது நூலகம் என்பவற்றுக்கு பின்னால் அமைந்துள்ள இக்குளமானது இப்பிரதேசத்தின் வெள்ள நீரை உள்வாங்கி - வாய்க்கால் ஊடாக கரைவாகு பிரதான குளத்திற்கு அனுப்புகின்ற ஒரு முக்கிய நீர் நிலையாக காணப்படுகிறது.

எனினும் சல்பீனியாக்கள் மற்றும் குப்பை கூழங்களினால் இதன் இயற்கைத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக காணப்படுவதால் வெள்ள அனர்த்தத்திற்கு முகம் கொடுக்கும் வகையில் இதனை அவசரமாக சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அதிகாரிகள் சகிதம் அவர் நேற்று அங்கு கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை நேரடியாக அவதானித்து, இப்பிரச்சினையை உடனடியாக கல்முனை மாநகர ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.

இதையடுத்து இக்குளத்தில் தேக்கமடைந்திருந்த சல்பீனியாக்கள் மற்றும் திண்மக் கழிவுகளை அகற்றும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர சபையினால் - கனரக இயந்திரங்களின் உதவியுடன் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.








Advertisement 



Sunday, December 15, 2024

மயோன் சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் அஷ்ரப் வைத்தியசாலையில் இடம்பெற்ற இரத்ததான முகாம்.!


(சாய்ந்தமருது செய்தியாளர்)

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிலவும் குருதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு மயோன் சமூக சேவைகள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இரத்ததான முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 முதல் மாலை 4.00 மணி வரை வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

அமைப்பின் தலைவர் றிஸ்லி முஸ்தபா அவர்களின் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இரத்ததான நிகழ்வில் அமைப்பின் உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

தற்போது நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் குறிப்பாக எமது அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை உட்பட அம்பாறை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் குருதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு இதனை ஏற்பாடு செய்திருந்ததாக மயோன் சமூக சேவைகள் அமைப்பின் தலைவரான றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.

அத்துடன் வீண்விரயங்களை தவிர்த்து, முன்மாதிரியாக நேரடியாக வைத்தியசாலையிலேயே இரத்ததான நிகழ்வினை ஏற்பாடு செய்வதற்கு உதவிய வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் நிகழ்வில் பங்குபற்றி இரத்த தானம் செய்தவர்களுக்கும் ஏற்பாடுகளை முன்னின்று நடாத்திய
உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.










Saturday, December 14, 2024

மயோன் சமூக சேவை அமைப்பு றிஷாட் பதியூதீனுடன் சந்திப்பு.!


(சாய்ந்தமருது செய்தியாளர்)

அம்பாறை மாவட்டத்தை தளமாகக் கொண்டு இயங்கும் மயோன் சமூக சேவை அமைப்பின் பிரதிநிதிகள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியதீனை நேற்று வெள்ளிக்கிழமை (13) மாலை வெள்ளவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமைப்பின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான றிஸ்லி முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அம்பாறை மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது அமைப்பின் கடந்த கால செயற்பாடுகள், எதிர்கால திட்டங்கள் குறித்து அமைப்பின் பொதுச் செயலாளர் சுகையில் ஜமால்தீன் விபரித்தார். அத்துடன் இளைஞர்களின் நலன் கருதி கட்சியினால் முன்னெடுக்க வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளை றிஸ்லி முஸ்தபா சமர்ப்பித்தார்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு தன்னால் முடியுமான பங்களிப்புகளை வழங்குவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் உறுதியளித்துள்ளார்.

இச்சந்திப்பில் மயோன் சமூக சேவை அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.