Monday, November 29, 2021

ரஹ்மத் மன்சூரின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது மைதானத்திற்கு மின்னொளி..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பொலிவேரியன் ஐக்கிய பொது விளையாட்டு மைதானத்திற்கு ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவரும் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூரின் ஏற்பாட்டில் கோப்ரா எல்.ஈ.டி. மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வேலைத்திட்டம் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இம்மைதானத்தில் பாவனையில் இருந்த மின்விளக்குகள் பழுதடைந்து, இருள் சூழ்ந்து காணப்பட்டிருந்த நிலையில் சாய்ந்தமருது கிரிக்கட் சபையின் கோரிக்கையின் பேரில் ரஹ்மத் மன்சூர் அவர்கள் குறுகிய காலத்தில் இம்மைதானத்திற்கு மின்னொளியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

தமது கோரிக்கையை துரிதமாக நிறைவேற்றித்தந்த பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் அவர்களுக்கும் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்த ரஹ்மத் பவுண்டேசன் செயலாளர் சம்சுல் முனா அவர்களுக்கும் சாய்ந்தமருது கிரிக்கட் சபை நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளது.




Sunday, November 28, 2021

ரஹ்மத் பவுண்டேசனினால் விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை யூத் விளையாட்டுக் கழகத்திற்கு ரஹ்மத் பவுண்டேசனினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வரும் பவுண்டேஷன் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, கழக நிர்வாகிகளிடம் அவற்றை கையளித்தார்.

அத்துடன் ரஹ்மத் மன்சூர் அவர்களின் பிரத்தியேக செயலாளர் எம்.சப்றாஸ் உட்பட ரஹ்மத் பவுண்டேசன் முக்கியஸ்தர்களும் விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.

Friday, November 26, 2021

"எஸ்.பொன்னுத்துரை- முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும்" நூல் அறிமுக விழா நாளை சாய்ந்தமருதில்..


(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பிரதேச முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.பீர் முஹம்மத் எழுதிய "எஸ்.பொன்னுத்துரை- முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும்" என்ற நூலின் அறிமுக விழா  நாளை சனிக்கிழமை (27) முற்பகல் 9.30 மணியளவில் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் பிரதம அதிதியாகவும் அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம்.ரிம்ஸான் விசேட அதிதியாகவும் கலந்து கொள்ளவிருக்கிறனர்.

ஓய்வுபெற்ற அதிபர்களான ஏ.எச்.ஏ.பஷீர், எம்.எம்.றஹீம், பேஜஸ் புத்தக இல்லத்தின் பணிப்பாளர் சிராஜ் மஷ்ஹூர், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக அதிகாரி எம்.எஸ்.எம்.நளீர் ஆகியோர் கருத்துரை நிகழ்த்தவுள்ளதுடன் பிரபல தொழிலதிபர் இக்ராஹ் யூ.சத்தார் நூலின் முதற் பிரதியை பெற்றுக்கொள்ளவுள்ளார்.

Sunday, November 21, 2021

'நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளும் சவால்களும்' நூல் வெளியீட்டு விழா..!

(யூ.கே.காலித்தீன்)

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.அஸ்லம் சஜா எழுதிய 'நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளும் சவால்களும்' எனும் நூலின் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை (20) மாலை சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் ஏற்பாட்டில் எஸ்.சி.ஜி. நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் 

எம்.ஐ.எம்.சதாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், அம்பாரை மாவட்ட மேலதிக செயலாளர் வீ.ஜெகதீசன், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகளுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவருமான கலாநிதி ஏ.எல்.ஏ.அஸீஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு உரையாற்றினர்.

பேஜஸ் பதிப்பகத்தின் பணிப்பாளரும் பன்னூல் ஆசிரியருமான சிறாஜ் மஸ்ஹூர் நூல் அறிமுக உரையையும் நூலாசிரியர் கலாநிதி அஸ்லம் சஜா ஏற்புரையையும் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.நௌசாத், இலங்கை பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது உலமா சபைத் தலைவர் எஸ்.எம்.சலீம் மௌலவி உட்பட சாய்ந்தமருது, கல்முனைக்குடி ஜும்ஆப் பள்ளிவாசல்களின் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் செயற்பாட்டாளர்கள் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நூலானது திட்டமிடல், கொள்கை வகுத்தல், அபிவிருத்திச் செயன்முறை, அமுலாக்கம், மதிப்பிடல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளதாக நிகழ்வில் உரையாற்றிய அதிதிகள் தமதுரைகளில் சுட்டிக்காட்டி, நூலாசிரியருக்கு பாராட்டைத் தெரிவித்துக் கொண்டனர்.









Saturday, November 20, 2021

ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தாருக்கு கௌரவிப்பு விழா..!


(அஸ்லம் எஸ்.மௌலானா) 

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வுபெற்ற ஏ.எல்.எம்.முக்தார் அவர்களின் சேவைகளை பாராட்டி கௌரவிக்கும் வைபவம் நேற்று முன்தினம் (22) வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வலயக் கல்வி அலுவலக நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கணக்காளர், பொறியியலாளர் மற்றும் உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் அவர்களின் சுமார் 35 வருட கால கல்வித்துறைக்கான உன்னத சேவைகள் பற்றி அதிகாரிகள் பலரும் பாராட்டிப் பேசியதுடன் நினைவுச் சின்னம், வாழ்த்துப்பா மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி, பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தனர்.




Monday, November 15, 2021

சிறந்த மார்க்க அறிஞரான அஷ்ஷெய்க் இமாம் தனது வாழ்நாள் முழுவதையும் சமூகத்துக்காக அர்ப்பணித்திருந்தார்..!

 -அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா அனுதாபம்-


(அஸ்லம் எஸ்.மௌலானா)

சிறந்த மார்க்க அறிஞராகவும் ஆன்மீக வழிகாட்டியாகவும் சமூக சேவையாளராகவும் திகழ்ந்த அஷ்ஷெய்க் ஏ.ல்.இமாம் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதையும் சமூகத்துக்காக அர்ப்பணித்திருந்தார் என அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது.

நிந்தவூர் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை மற்றும் நிந்தவூர் ஜம்இய்யதுல் உலமா என்பவற்றின் முன்னாள் தலைவரான அஷ்ஷெய்க் ஏ.ல்.இமாம் (பலாஹி) அவர்கள் நேற்று முன்தினம் காலமானதையிட்டு மேற்படி ஜம்இய்யதுல் உலமாவின் சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா (மதனி), செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல் நாஸிர் கனி (ஹாமி) ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

அஷ்ஷெய்க் ஏ.ல். இமாம் (பலாஹி) அவர்கள் 14-11-2021 அன்று தனது 59ஆவது வயதில் வபாத்தானதையிட்டு அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஆழ்ந்த கவலையடைகின்றது.

1962-06-02 ஆம் திகதி அகமது லெவ்வை, ஹயாதும்மா ஆகிய தம்பதிகளுக்கு புதல்வராக பிறந்த அஷ்ஷெய்க் ஏ.ல்.இமாம் அவர்கள், ஐனுல் பாயிஸா என்பவரைத் திருமணம் முடித்து மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையானார்.

காத்தான்குடி ஜாமிஉல் பலாஹ் அரபுக் கல்லூரியில் மௌலவி பட்டம் பெற்று வெளியேறி, நிந்தவூர் தஃவா இஸ்லாமியா கலாபீடத்தில் விரிவுரையாளராக கடமையாற்றினார்.

ஊரின் நன்மதிப்பைப் பெற்ற இவர், நிந்தவூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவராகவும், நிந்தவூர் ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராகவும் பதவி வகித்ததோடு நிந்தவூர் பிரதேசத்துக்கான காதி நீதிபதியாகவும் கடமையாற்றி ஊருக்குப் பல சேவைகளைச் செய்தார். இவர் சிறந்த மார்க்க அறிஞராகவும், ஆன்மீக வழிகாட்டியாகவும் சமூகசேவையாளராகவும் திகழ்ந்து வாழ் நாள் முழுவதையும் சமூகத்துக்காக அர்ப்பணித்தார்.

தன்னிகரில்லா சிறப்பம்சங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்த ஏ.ல்.இமாம் மௌலவியிடம் இறையச்சம், பேணுதல், அடக்கம், பணிவு, அன்பு, ஆதரிப்பு, பொறுமை, குடும்ப உறவுகளைப் பேணல் முதலான பண்புகள் மேலோங்கி காணப்பட்டன. அன்னார் 59ஆவது வயதில் காலமானதையிட்டு அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஆழ்ந்த கவலையடைகின்றது. 

அன்னாரின் பிரிவால் துயருறும் அவரின் குடும்பத்தினர், நண்பர்கள், ஊரவர் அனைவருக்கும் அல்லாஹ் மன ஆறுதலை அளிக்குமாறும் அன்னாரது சமய, சமூக, கல்வி, கலாசார விவகாரங்களில் அவர் காட்டிய தியாகம், அர்ப்பணிப்புக்களை அங்கீகரித்து ஜன்னதுல் பிர்தௌஸை கொடுத்தருளவும் அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா பிரார்த்திக்கின்றது- என்று அந்த அனுதாப செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sunday, November 14, 2021

இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களின் உரிமைககளை உறுதிப்படுத்துவதில் கரிசனையுடன் செயற்பட்டவர் எம்.ஐ.எம்.மொஹிதீன்..!

-முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் அப்துல் மஜீத் அனுதாபம்-

(அஸ்லம் எஸ்.மௌலானா)

இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் எட்டப்படும்போது முஸ்லிம்களின் உரிமைககள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்பதில் மிகுந்த கரிசனையுடன் செயற்பட்ட எம்.ஐ.எம்.மொஹிதீன் அவர்களின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் வடக்கு-கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஸ்தாபகத் தலைவரும் சமூக, அரசியல் வரலாற்று ஆய்வாளருமான எம்.ஐ.எம்.மொஹிதீனின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

1985ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எச்.சேகு இஸ்ஸதீனுடன் இணைந்து கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி எனும் அமைப்பைத் தோற்றுவித்து, இனப்பிரச்சினை சம்மந்தமான விடயங்களில் இவர் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.

ஜூலைக் கலவரத்தைத் தொடர்ந்து இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை கூர்மையடைந்து சென்ற காலப்பகுதியில் இந்திய ராஜதந்திரிகளான பி.பார்த்தசாரதி, ரொமேஷ் பண்டாரி, இணை அமைச்சர்களாக இருந்த பி.சிதம்பரம், நத்வாத் சிங் போன்றவர்கள் இந்தியாவின் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் சிறப்புத் தூதுவர்களாக கொழும்பு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கிழக்கிழங்கையை பிரதிநிதித்துவம் செய்து கொண்டிருந்த முஸ்லிம் எம்.பி.க்களை அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன இப்பேச்சுவார்த்தைகளில் கவனத்தில் கொள்ளாமல் புறக்கணித்திருந்தார். அதேவேளை முன்னாள் அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் தலைமையில் உருவாக்கப்பட்ட முஸ்லிம் கவுன்ஸில் எனும் அமைப்பு இந்தியா சென்று ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியது.

அதன்போது முஸ்லிம் தரப்பில் முக்கிய நபராக எம்.ஐ.எம்.மொஹிதீன் செயற்பட்டார். பேச்சுவார்த்தையின் முடிவில் விடுதலைப் புலிகளின் அன்றைய முக்கியஸ்தரான சதாகாசிவம் கிருஷ்ணகுமார் என்று அழைக்கப்படும் கிட்டு அவர்களும் முஸ்லிம் கவுன்சில் சார்பாக எம்.ஐ.எம்.மொஹிதீன் அவர்களும் கூட்டறிக்கையை வெளியிட்டனர். அதில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணையும் பட்சத்தில் முஸ்லிம்களின் விகிதாசாரம் குறைவடைவதனால் கிழக்கில் உள்ள குடிப்பரம்பலுக்கு ஏற்ப சகல துறைகளிலும் முஸ்லிம்களுக்கான வாய்ப்பு வழங்கப்படும் என்ற உடன்பாடு குறிப்பிடப்பட்டிருந்தது.

மட்டுமின்றி 1986.10.05ஆம் திகதி அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் முஸ்லிம் அரசியல்வாதிகள், கல்விமான்கள், புத்திஜீவிகள் மற்றும் பள்ளிவாசல் சம்மேளனத்தின் பங்கேற்புடன் இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பான மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணையுமாயின் முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதிலும் எம்.ஐ.எம்.மொஹிதீன் அவர்களின் பங்களிப்பு சிலாகித்துக் கூறப்பட வேண்டியதாகும்.

அத்துடன் ஆட்சி அதிகாரப் பகிர்வில் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும் என்ற புத்தகம் உட்பட வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் வரலாற்று வாழ்விடங்கள் சம்மந்தமான ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றையெல்லாம் தொகுத்து ஆவணப்படுத்தி, சமூகத்திற்கு பெரும் சேவையாற்றியுள்ளார்.

அதேவேளை, முஸ்லிம் சமூகத்தில் இருந்து ஒரே குரல் பேச வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்ததன் காரணமாக 1995ஆம் ஆண்டு தனது முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி எனும் கட்சியைக் கலைத்து விட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் தன்னை இணைத்துக் கொண்டு, அஷ்ரப்புடன் இணைந்து முஸ்லிம் சமூகத்திற்கான பல்வேறுபட்ட சமூகப் பணிகளை முன்கொண்டு சென்றார்.

காற்றையும் காலத்தையும் வென்று நிற்கும் அன்றலந்த மலர்போல் எம்.ஐ.எம்.மொஹிதீனின் நாமம் என்றென்றும் வீசிக்கொண்டே இருக்கும்.

சமூகத்திற்கான அன்னாரின் பணியை பொருந்திக் கொண்டு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்க வேண்டும் என எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்பதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கு எனது சார்பிலும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்- என்று மு.கா. தவிசாளர் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார்.

Thursday, November 11, 2021

அதிபர், ஆசிரியர் சமபள முரண்பாடு: திருப்தியான தீர்வுக்கு அரசாங்கம் முன்வந்தமை வரலாற்று முக்கியத்துவமிக்கதாகும்..!

-இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் பாராட்டு-

(அஸ்லம் எஸ்.மௌலானா)

போராட்டங்களை மேலும் வளர விடாமல் தடுக்கும் வகையில் ஆசிரியர்கள் திருப்தியடையக் கூடிய தீர்வொன்றுக்கு அரச தரப்பு வந்துள்ளமையானது வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்மானமாகும் என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது

சங்கத்தின் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா, செயலாளர் எம்.கே.எம்.நியார் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

கடந்த இரண்டரை தசாப்தங்களாக அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. 1997 ஆம் ஆண்டு முதல் மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் இவ்விடயத்தை அலைக்கழித்தே வந்துள்ளனர்.

மூன்று மாதகாலத்திற்கும் அதிகமாக தொழிற்சங்கங்கள் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தது. எனினும் அரச தரப்பினர் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்மானமொன்றுக்கு வராமையால் போராட்டங்கள் மாற்று வடிவங்களை நோக்கி நகர்ந்தன.

இதனை மேலும் வளர விடாமல் தடுக்கின்ற; ஆசிரியர்கள் திருப்தியடையக் கூடிய தீர்வொன்றுக்கு அரச தரப்பு வந்துள்ளமையானது வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்மானமாகும். இவ்வாறு தீர்வொன்றினை முன்வைத்தனூடாக அரசு பொறுப்புடன் நடந்துள்ளது. 

அதிபர்,ஆசிரியர்களைத் தொடர்ந்தும் வீதிகளில் அலைய விடக் கூடாது என்ற முடிவுக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ அவர்களுக்கும் இத்தீர்மானத்திற்கு உந்து சக்தியினை வழங்கி, செயற்படுத்திய பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்டோருக்கு அதிபர், ஆசிரியர் சமூகத்தின் சார்பில் கௌரவமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

வரவு செலவுத் திட்டத்தில் ஒட்டு மொத்த கல்விக்காக (7.5 வீதம்)அதிகமான தொகையினை ஒதுக்கிய ஆட்சியாளர் வரிசையில் இந்த அரசுக்கு முன்னுரிமை இடம் கிடைத்துள்ளது பாராட்டத்தக்க அம்சமாகும். 

1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட டீ.சி.பெரேரா ஆணைக்குழு முதல் அதிபர், ஆசிரியர்கள் ஏமாற்றப்பட்டு வந்த நிலையில் சுபோதினி சம்பள முரண்பாட்டு அறிவிப்பினை தாமாகவே முன்மொழிந்து அதன் மூன்றில் ஒருபங்கை வழங்குவதாக வழங்கப்பட்டுள்ள வாக்குறுதியினால் நாம் ஆறுதல் அடைகின்றோம். எனினும் சுபோதினி அறிக்கையினை முழுமையாக பெறுவதே அதிபர்,ஆசிரியர் சமூகம் முழுப் பயனையும் திருப்தியுடன் அனுபவிக்கும் காலமாகும்.

கூட்டிணைந்த தொழிற்சங்கங்களின் பிரதான ஆர்ப்பாட்ட முன்னெடுப்புக்கள் மற்றும் பிராந்திய முன்னெடுப்புக்களில் இணைந்து பணியாற்றிய அனைத்து அதிபர், ஆசிரியர்களும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே. அவர்களுக்கு எமது தாழ்மையான நன்றிகள் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, November 10, 2021

ஒலுவில் பிரதேசத்தில் ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் குடிநீர் வசதி

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் ஒலுவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பொதுக் கிணறுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

பிரதேச மக்கள் சிலரின் நீண்ட காலத் தேவையாக இருந்து வந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையையேற்று, ரஹ்மத் பவுண்டேஷன் தலைவரும் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக வை.டபிள்யூ.எம்.ஏ. நிறுவனத்தின் அனுசரணையுடன் இக்கிணறுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இடம்பெற்ற கையளிப்பு நிகழ்வில் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த பயனாளிகளிடம் இவற்றைக் கையளித்தார்.

இவ்வாறான பயன்மிக்கதும் நிலைபேறானதுமான சேவையை தமது அமைப்பு முன்னெடுப்பதற்கு உதவிய வை.டபிள்யு.எம்.ஏ. நிறுவனத்துக்கு தனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இதன்போது அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேஷன் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர்.


Sunday, November 7, 2021

சட்டத்தரணி எம்.எஸ்.எம்.ஜெமீல் எழுதிய 'வணிக விதானம்' நூல் வெளியீட்டு விழா..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

முன்னாள் மேல் நீதிமன்ற ஆணையாளரும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.எம்.ஜெமீல் எழுதிய 'வணிக விதானம்' நூல் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை (06) மருதமுனை பொது நூலக சமூக வள நிலையத்தில் நடைபெற்றது.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அத்துடன் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் முகாமைத்துவ பீடாதிபதியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.குணபாலன் விமர்சன உரையையும் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.எம்.ஏ.சமீம், நூல் ஆய்வுரையையும் தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடதிபதி கலாநிதி சித்தி சபீனா ஹசன் வாழ்த்துரையையும் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ரி.எல்.அப்துல் மனாப், கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் உட்பட பல்கலைக்கழக பீடாதிபதிகள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள், எழுத்தாளர்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.













Pix By ALM.Sinas & M.I.Samsudeen

www.metromirror.lk
metromirrorweb@gmail.com
whatsapp-0779425329

கிழக்கு கல்வி அமைச்சில் பதவி நிலை உத்தியோகத்தர் பற்றாக்குறைவினால் பணிகள் மந்தம்; தென்கிழக்கு கல்விப் பேரவை ஆளுநருக்கு மகஜர்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் பதவி நிலை உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை காரணமாக வேலைகள் மிகவும் மந்த கதியில் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ள தென்கிழக்கு கல்விப் பேரவை, இது குறித்து
கிழக்கு மாகாண ஆளுனர் உடனடியாக அவதானம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பேரவையின் தலைவர் ஏ.எல்.எம்.முக்தார், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் செயலாளரைத் தவிர சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவரும் உதவிச் செயலாளர்கள் இருவரும் கடமையில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது இந்த அமைச்சில் ஒரு சிரேஸ்ட உதவிச் செயலாளரும் ஒரு உதவிச் செயலாளரும் ஒரு பதில் உதவிச் செயலாளரும் கடமையில் உள்ளனர்.

நிருவாக ஏற்பாடுகளுக்கமைய ஒரு விடயம் உதவிச் செயலாளர் ஊடாக சிரேஸ்ட உதவி செயலாளருக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் செயலாளருக்கு இறுதி ஒப்பத்திற்கு சமர்ப்பிக்கப்படுகிறது. ஆனால் தற்போதைய சிரேஸ்ட உதவிச் செயலாளர் ஒரு சட்டத்தரணி என்பதனால் கல்வி அமைச்சு சார்பில் நீதிமன்றம், மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றில் ஆஜராகி வருகிறார்.

அதேவேளை கடமையில் உள்ள ஒரு உதவிச் செயலாளர் அமைச்சுக்கு சமுகமளிப்பதில் அக்கறையின்றி உள்ளார். இந்த நிலையில் கல்வி அமைச்சின் பணிகள் யாவும் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றன. இதன் காரணமாக அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளின் கருமங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாதுள்ளது.

எனவே, கிழக்கு மாகாண கல்வியமைச்சில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை உடனடியாக சீர்செய்யப்பட வேண்டும். அதற்காக அமைச்சில் தங்கியிருந்து கடமையாற்றக் கூடிய சிரேஷ்ட உதவிச் செயலாளர் மற்றும் உதவிச் செயலாளர் ஒருவரும் நியமனம் செய்யப்பட வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.