Monday, January 18, 2021

கொரோனாவுக்கு இன்றும் 06 பேர் பலி; மொத்த எண்ணிக்கை 270 ஆக உயர்வு..!


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 03 பகுதியை சேர்ந்த 63 வயதுடைய பெண், கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 80 வயதுடைய ஆண், , முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 75 வயதுடைய ஆண், களுத்துறை தெற்கு பகுதியை  சேர்ந்த 65 வயதுடைய ஆண், தெஹிவளை பகுதியை சேர்ந்த 63 வயதுடைய ஆண் மற்றும் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

கல்முனை வலய கல்விப் பணிமனை பொறியியலாளராக ஏ.எம்.சாஹிர் கடமையேற்பு..!


அஸ்லம் எஸ்.மௌலானா

வருடாந்த இடமாற்றத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாண பிரதம செயலாளரினால் கல்முனை வலயக் கல்வி பணிமனைக்கான மாவட்டப் பொறியியலாளராக நியமிக்கப்பட்ட ஏ.எம்.சாஹிர் இன்று திங்கட்கிழமை (18) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்முனை கட்டிடங்கள் திணைக்களத்தின் மாவட்டப் பொறியியலாளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே, இவர் கல்முனை வலய கல்விப் பணிமனைக்கு இடமாற்றப்பட்டிருக்கிறார்.

பொறியியல் சேவையில் சுமார் 16 வருட கால அனுபவத்தைக் கொண்ட முதலாம் தர, பட்டயப் பொறியியலாளரான இவர் கல்முனை மாநகர சபையின் பதில் பொறியியலாளராகவும் கடமையாற்றி வருகின்றார். இதற்கு முன்னதாக நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் கல்முனை மாநகர சபைக்கான திட்டப் பொறியியலாளராகவும் வேறு சில நிறுவனங்களிலும் பொறியியலாளராக கடமையாற்றியுள்ளார்.

றுகுணு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த இவர், மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் நிர்மாணத்துறை சார்ந்த சட்டத்துறையில் முதுமானிப் பட்டத்தையும்

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழத்தில் பொது நிர்வாகத்துறைசார் பட்டத்தையும், நிர்மாண முகாமைத்துவத்தில் எம்.பி.ஏ. பட்டத்தையும் வேறு சில பொறியியல் தொழில்சார் தகைமைகளையும் பெற்றுள்ளார்.

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். மற்றும் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி என்பவற்றின் பழைய மாணவரான இவர், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் முன்னாள் பொருளாளரான மர்ஹூம் கே.எம்.பி.ஆதம்பாவா மற்றும் ஆஷியா உம்மா தம்பதியரின் கனிஷ்ட புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

www.metromirror.lk

metromirrorweb@gmail.com

Friday, January 15, 2021

சாய்ந்தமருது ஹனிபாவின் ஜனாஸா 25 நாட்களின் பின்னர் நீதிமன்ற உத்தரவில் குடும்பத்தினரிடம் கையளிப்பு..!


அஸ்லம் எஸ்.மௌலா
னா

கடந்த டிசம்பர் 21ஆம் திகதி மரணமடைந்த சாய்ந்தமருதைச் சேர்ந்த முஹம்மட் இஸ்மாயீல் முஹம்மட் ஹனிபாவின் ஜனாஸா, நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் இன்று வெள்ளிக்கிழமை (15) அன்னாரது குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்து, அவரது ஜனாஸா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படாமல், 25 நாட்களாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கவில்லை என்ற வாதத்தை முன்வைத்து, அவரது பி.சி.ஆர்.அறிக்கை வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையின் பிரகாரம் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டால் ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்காக குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிடக்கோரி கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப் அவர்கள், கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்த அதேவேளை இன்று வெள்ளிக்கிழமை திடீர் மரண விசாரணைக்கான நகர்த்தல் மனுவொன்றும் அவரால் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு முன்னதாக நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 2021-01-08 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட குறித்த நபரின் பி.சி.ஆர். அறிக்கையின் பிரகாரம் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்ற விடயம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

கடந்த டிசம்பர் 21ஆம் திகதி சர்க்கரை நோயின் அதீத தாக்கம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 58 வயதுடைய முஹம்மட் ஹனிபா சிறிது நேரத்தில் மரணித்திருந்தார். அதேவேளை, அவரது உடலத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையின்போது கொவிட் தொற்று இருப்பதாக கூறப்பட்டு, அவரது ஜனாஸா குடும்பத்தினரிடம் கையளிக்கப்படாமல் மறுக்கப்பட்டிருந்தது.

அதனை மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பி.சி.ஆர். பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதன் அறிக்கையானது மட்டக்களப்பிலுள்ள விசேட தொற்று நோயியல் நிபுணரால் வைத்தியசாலையின் அத்தியட்சகருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி குறித்த உடலத்தில் கொவிட் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த நபரின் உறவினர்கள், தொடர்புடையவர்கள் என 125 பேருக்கு பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் எவருக்கும் கொவிட் தொற்று இல்லை என்று உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து, அவரது உடலத்தை அடக்கம் செய்வதற்காக கையளிக்குமாறு குடும்பத்தினரால் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தபோதிலும் அக்கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பி.சி.ஆர். அறிக்கையும் குடும்பத்தினருக்கு காண்பிக்கப்படவில்லை.

இந்நிலையில், அவரது குடும்பத்தினர் கடந்த 05ஆம் திகதி கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப் அவர்களை நேரடியாக சந்தித்து, இந்த விடயத்தில் தலையிடுமாறும் ஜனாஸாவை பெற்றுத்தர உதவுமாறும் வேண்டிக்கொண்டதன் பேரில், அவர் அந்த ஜனாஸாவை மேலும் தாமதிக்காமல் உடனடியாக விடுவிக்குமாறு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அத்தியட்சகருக்கு, சட்டத்தரணி என்ற ரீதியில், கோரிக்கை கடிதம் (வக்கீல் நோட்டிஸ்) ஒன்றை அன்றைய தினமே அவசரமாக கையளித்திருந்தார். எனினும் ஜனாஸா விடுவிக்கப்படவில்லை.

இதையடுத்து, மறுநாள் 06ஆம் திகதி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களினால் இலங்கை தண்டனை சட்டக்கோவையின் பிரிவு 162 இன் கீழ் தனிப்பட்ட பிராதாக முறைப்பாட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு, அது அன்றைய தினமே நீதவான் ஐ.எம்.றிஸ்வான் அவர்கள் முன்னிலையில் ஆதரிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்டத்தரணி றகீப் அவர்களின் வாதத்தில் திருப்தியுற்ற நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிப்பதற்காக ஏற்றுக்கொண்டது.

அத்துடன் குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவை 66 இன் கீழ் குறித்த நபரின் பி.சி.ஆர். அறிக்கையை 2021-01-08 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக நீதிமன்றுக்கு சமர்ப்பிக்குமாறு அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பி.சி.ஆர். அறிக்கையை 2021-01-08ஆம் திகதி பரிசீலித்த நீதிமன்றம், குறித்த ஆவணத்தை நீதிமன்ற வழக்கேட்டில் கோவைப்படுத்தியதுடன் இந்த ஆவணத்தை மையப்படுத்தி 2021-01-11ஆம் திகதி  வழக்கை ஆதரிப்புக்காக எடுக்குமாறு பணித்திருந்தது.

அன்றைய தினம் இவ்வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, திடீர் மரண விசாரணை அதிகாரியின் அறிக்கை கோரப்பட்டு, 2021-01-13ஆம் திகதிக்கு அவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட மரண விசாரணை அதிகாரியின் அறிக்கையை மையப்படுத்தி, சில அறிவுறுத்தல்களை வழங்கிய நீதிமன்றம் வழக்கை எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஒத்திவைத்தது. இதனிடையே இன்று வெள்ளிக்கிழமை திடீர் மரண விசாரணைக்கான நகர்த்தல் மனுவொன்றும் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களினால் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது குறித்த நபரின் மரணமானது சர்க்கரை நோயின் அதீத தாக்கம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பினால் சம்பவித்துள்ளது என வெளிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் ஜனாஸாவை குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இதன்படி இன்று வெள்ளிக்கிழமை இரவுகையளிக்கப்பட்ட ஜனாஸா, சாய்ந்தமருது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விவகாரங்களில் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களுடன் சட்டத்தரணிகளான ரொஷான் அக்தர், சி.ஐ.சஞ்சித் அஹமட் ஆகியோரும் ஆஜராகியிருந்ததுடன் ஜனாஸாவை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளிலும் முக்கிய பங்காற்றியிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்
https://metromirrorlk.blogspot.com/2021/01/11.html


www.metromirror.lk
metromirrorweb@gmail.com

Saturday, January 9, 2021

அல்லாஹ்வின் அற்புதமான படைப்பு நமக்குள் இருக்கும் இதயம்..!

அல்லாஹ்வின் அற்புதமான படைப்பு நமக்குள் இருக்கும் இதயம்..!

அதன் ஒவ்வொரு துடிப்புகளும் கனமானவை, சொல்வதற்கு, எண்ணுவதற்கு நிகரில்லை, நிகரற்ற ரஹ்மான் வல்லோனை புகழ்வோம், அவனுக்கு நன்றி செலுத்திடுவோம், அல்ஹம்துலில்லாஹ்..!

Watch

https://www.facebook.com/metromirrorsl/videos/764464574422609

Friday, January 8, 2021

சாய்ந்தமருது ஹனிபாவின் ஜனாஸாவை விடுவிப்பதில் இழுத்தடிப்பு; பி.சி.ஆர். அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு; வழக்கு 11ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு..!


அஸ்லம் எஸ்.மௌலானா

கொரோனா தொற்றினால் மரணித்ததாக கூறப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதைச் சேர்ந்த முஹம்மட் இஸ்மாயீல் முஹம்மட் ஹனிபா என்பவரின் பி.சி.ஆர். அறிக்கை நீதிமன்ற உத்தரவின் பேரில் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஆவணத்தை மையப்படுத்தி, எதிர்வரும் 11-01-2021 திகதி திங்கட்கிழமை குறித்த வழக்கை ஆதரிப்புக்கு எடுக்குமாறு இன்று வெள்ளிக்கிழமை (08) நீதிமன்றம் பணித்துள்ளது.

இவரது ஜனாஸா தொடர்பான வழக்கு கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 21ஆம் திகதி மரணமடைந்த மேற்படி முஹம்மட் இஸ்மாயீல் முஹம்மட் ஹனிபா என்பவரின் பி.சி.ஆர். அறிக்கையை வெளிப்படுத்தக் கோரியும் அந்த அறிக்கையின் பிரகாரம் குறித்த நபருக்கு கொரோனா தொற்றில்லை என்று உறுதிப்படுத்தப்படுமாயின் அவரது ஜனாஸாவை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உத்தரவிடுமாறு கோரியும் கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப் அவர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை (06) கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அன்றைய தினம் இம்மனு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.எம்.றிஸ்வான் அவர்கள் முன்னிலையில் ஆதரிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த நபரின் பி.சி.ஆர். அறிக்கையை 2021-01-08 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னதாக நீதிமன்றுக்கு சமர்ப்பிக்குமாறு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகருக்கு நீதவான் கட்டளை பிறப்பித்திருந்தார்.

இக்கட்டளையின் பிரகாரம் குறித்த அறிக்கையை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் நீதிமன்றுக்கு சமர்ப்பித்திருந்தார்.

இந்த ஆவனைத்தைப் இன்று பரிசீலித்த நீதிமன்றம், குறித்த ஆவணத்தை நீதிமன்ற வழக்கேட்டில் கோவைப்படுத்தியதுடன் இந்த ஆவணத்தை மையப்படுத்தி எதிர்வரும் திங்கட்கிழமையன்று (11) வழக்கை ஆதரிப்புக்காக எடுக்குமாறு பணித்துள்ளது.

இம்மனு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களுடன் சட்டத்தரணிகளான ரொஷான் அக்தர், சி.ஐ.சஞ்சித் அஹமட் ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.

கடந்த 2020/12/21ஆம் திகதி சர்க்கரை நோயின் அதீத தாக்கம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சாய்ந்தமருது, பொலிவேரியன் கிராமத்தை சேர்ந்த முஹம்மட் இஸ்மாயீல் முஹம்மட் ஹனிபா, அன்றைய தினமே வைத்தியசாலையில் மரணித்திருந்தார். அன்றைய தினம் அந்த உடலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையின்போது கொவிட் தொற்று இருப்பதாக கூறப்பட்டது. எனினும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது அவரது உடலத்தில் கொவிட் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த நபரின் உறவினர்கள், தொடர்புடையவர்கள் என 125 பேருக்கு  மேற்குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் எவருக்கும் கொவிட் தொற்று இல்லை என்றும் உறுதிபடுத்தப்பட்டது.

இந்நிலையில், அவரது பி.சி.ஆர். அறிக்கையை வெளிப்படுத்துமாறும் அவருக்கு கொவிட் தொற்று இல்லையெனில், உடலத்தை அடக்கம் செய்வதற்காக கையளிக்குமாறும் அவரது குடும்பத்தினரால் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் இதுவரை பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையை வெளியிடாமலும் உடலத்தை குடும்பத்தினரிடம்  ஒப்படைக்காமலும் தவிர்த்து வருகின்றார்.

இந்நிலையில், அவரது குடும்பத்தினர் இந்த விடயத்தில் தலையிடுமாறும் ஜனாஸாவை பெற்றுத்தர உதவுமாறும் வேண்டிக்கொண்டதன் பேரில், அந்த உடலத்தை மேலும் தாமதிக்காமல் உடனடியாக விடுவிக்குமாறு கோரி கடந்த செவ்வாய்க்கிழமை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அத்தியட்சகருக்கு கல்முனை மாநகர முதல்வரினால் கடிதம் ஒன்று அவசரமாக கையளிக்கப்பட்டது. எனினும் ஜனாஸா விடுவிக்கப்படாதையடுத்து, இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

metromirrorweb@gmail.com