Tuesday, December 29, 2020

சர்வாதிகாரத்திற்கு அடிபணியும்படி அல்-குர்ஆன் கூறுகிறதா? எமக்காக குரல்கொடுத்த தமிழ் எம்.பிக்களை ஏன் விமர்சிகின்றனர்?

பாலஸ்தீனர்களின் புனித போராட்டத்தை பணத்திற்கும், பதவிக்குமாக ஒருசில பாலஸ்தீனர்களே யூதர்களிடம் காட்டிக்கொடுக்கின்றார்கள். ஆனால் இங்கே புனிதமும் இல்லை, போராட்டமும் இல்லை. இவ்வாறான நிலையில் தங்கள் தனிப்பட்ட சுயநலத்திற்காக சமூகத்தை காட்டிக்கொடுப்பது ஒன்றும் ஆச்சர்யமல்ல.

நாட்டுச் சட்டத்திற்கு அடிபனியுமாறு அல்-குர்ஆனில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் சட்டமும், இஸ்லாமிய சட்டமும் முரண்பாடான நிலையில் இருந்தால் நாங்கள் எதனை பின்பற்றுவது ? இதற்கு உலமாக்கள் பதில் வழங்குவதுதான் பொருத்தமானது. ஆனால் எம்மிடம் அவ்வாறான உலமாக்கள் இல்லை.

எவ்வாறான நாட்டின் சட்ட திட்டத்திற்கு கட்டுப்பட வேண்டுமென்றும், எந்த சூழ்நிலையில் என்றும் தெரிவிக்கவில்லை. அதாவது முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் திட்டமிட்டு மறுக்கப்பட்டு சர்வாதிகார ஆட்சி நிலவுகின்ற ஒரு நாட்டின் சட்டத்திற்கு அடிபனியுமாறு அல்-குர்ஆனில் எந்த இடத்தில் கூறப்பட்டுள்ளது ?

“புனிதமான நோக்கமில்லாமல் தேசப்பற்று அல்லது இனவெறியோடு இஸ்லாமியக் கொடியின் கீழ் அல்லது அதற்கும் மேலாக நபியவர்களின் படையில் இருந்துகொண்டு போரிட்டாலும் அவர் செல்லுமிடம் நரகம்” என்று ரசூலுல்லாஹ் அவர்கள் உஹது யுத்தம் முடிவுற்றநிலையில் உஹது களத்தில் வைத்து கூறியுள்ளார்கள்.

மார்க்கம் இவ்வாறு தெளிவாக கூறப்பட்டுள்ள நிலையில், யாரோ பேரினவாதிகள் சிலரை திருப்திப்படுத்தும் நோக்கில் அல்-குர்ஆன் வசனங்களுக்கு பிழையான வியாக்கியானம் கூறி தேசப்பற்று என்றபோர்வையில் அடிமையாக வாழவேண்டுமென்று எம்மவர்களே எங்களுக்கு உபதேசம் கூறுவதன் மூலம் அவர்கள் “முஸ்லிம் பெயர் தாங்கிகள்” என்பதனை நிரூபிக்கின்றனர்.

இந்த நாட்டில் விடுதலை புலிகள் அழிக்கப்பட்டதன் பின்பு அதாவது 2010 இல் இருந்து தென்னிலங்கை அரசியல் சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்காக முஸ்லிம்கள் பந்தாடப்பட்டு வருகின்றார்கள்.

அத்துடன் நாங்கள் பலயீனமான நிலையில் இருந்துகொண்டு உரிமைக்காகவும், நீதியை நிலைநிறுத்த போராட்டம் நடாத்தினால் அதில் வெற்றிபெற முடியாது. பலயீனமானவர்கள் என்பதற்காக அடிமையாக வாழவும் முடியாது. மாறாக எங்களை பலப்படுத்திக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இதனை வழிநடாத்துவது யார் ?

இவைகள் ஒருபுறமிருக்க, ஜனாசாக்கள் எரிக்கப்பட்டு வருகின்ற இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் வாய்மூடி மௌனியாகவும், அரசாங்கத்துடன் பின்கதவினால் கள்ள உறவுகளை பேணிவருகின்றனர்.

இந்த காலகட்டத்தில், எமது மக்கள்மீது பரிதாபப்பட்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சாணாக்கியன், மனோகணேசன் போன்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் மக்களுக்காக பாராளுமனறத்தில் குரல் எழுப்பியதுடன், வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

தமிழ் எம்பிக்களது இந்த செயல்பாடுகளை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் வரவேற்றதுடன் அது ஓர் ஆறுதல் தருகின்ற விடயமாகவும் பார்க்கப்பட்டது.

முஸ்லிம்களுக்காக தமிழ் எம்பிக்கள் குரல் கொடுத்ததனை தென்னிலங்கை இனவாதிகளினால் ஜீரணிக்க முடியவில்லை.

ஆனால் இவ்வாறு முஸ்லிம்களுக்காக ஓங்கி ஒலிக்கின்ற குரல்களை நசுக்கும் நோக்கில், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது எம்மவர்கள் சிலரினால் வசைபாடப்படுவதானது தமிழ் எம்பிக்கள் முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பதனை தடுக்கும் பேரினவாதிகளின் சூழ்சிகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.

முகம்மத் இக்பால் - சாய்ந்தமருது 

www.metromirror.lk

metromirrorweb@gmail.com

புதிய நிபுணர் குழுவின் பரிந்துரைகள், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான தீர்வைத்தரட்டும்; அலிஸாஹிர் மௌலானா நம்பிக்கை..!


அஸ்லம் எஸ்.மௌலானா

கொவிட் -19 தொற்று நோயினால் உயிரிழப்பவர்களின் உடலங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட புதிய நிபுணர் குழுவின் பரிந்துரைகள், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான தீர்வைப் பெற்றுத்தரும் என நம்புவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

கொவிட்-19 இலங்கையில் பரவத் தொடங்கிய காலத்தில் இருந்தே முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். அதேவேளை அடக்கம் செய்வது தீங்கு விளைவிக்கும் என்பது விஞ்ஞான பூர்வமாக  நிரூபிக்கப்பட்டால், நாம் அடுத்தவருக்கு தீங்கு விளைவிக்க விரும்பாதவர்கள் எனும் அடிப்படையில் ஜனாசாக்களை அடக்கம் செய்ய வேண்டும் எனும் எமது செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துவோம் எனவும் கூறி வந்தோம்.

கடந்த 10 மாதங்களில் உலகளாவிய ரீதியில் 194 நாடுகளிலும் கொவிட்-19 காரணமாக மரணித்த சுமார் 1.5 மில்லியன் உடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன. இவ்வாறு அடக்கம் செய்வதன் மூலமாக   தீங்கு விளைவிக்கும் என எங்குமே அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

இந்நிலையில் முதலில் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளானது  சர்ச்சைக்குரியவையாகவும் எந்தவித ஆதாரபூர்வமற்ற, நிரூபிக்க முடியாத அல்லது நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் அற்றவையாக இருக்கின்ற காரணத்தினால் அந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது வெளிப்படையாக அறியப்பட்டதாலும், நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் அதிகரித்து வருகின்ற தொடர் அழுத்தங்கள் காரணமாகவும் ஒரு புதிய நிபுணர் குழுவை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

முன்னைய பரிந்துரைகள் எதுவுமே வெளிப்படையாக அரசாங்கத்தால் மக்களது பார்வைக்கு முன்வைக்கப்படாததால், அவற்றை முஸ்லிம் சமூகத்தினால் ஏற்க முடியாதிருந்தது. அவர்களால் கொடுக்கப்பட்ட அறிக்கையானது வெளிப்படையாக இருந்திருந்தால், அரசின் தீர்மானத்தோடு மக்கள் இணங்கி இருப்பார்கள் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ள தரம்வாய்ந்த நிபுணர் குழுவானது விஞ்ஞான ரீதியான காரணங்களின் அடிப்படையில் செயற்படும் என்பதில் எங்களுக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது. இந்த நிபுணர் குழாமினது ஆய்வுகள் முற்றிலும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டவையாகவும் சர்வதேச அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைசார் வல்லுநர்களின் வழிகாட்டலில் வைரஸ் தொற்றிய உடலங்களை அடக்கம் செய்வதானது நிலத்தடி நீரை பாதிக்கும் ஆபத்தினை ஏற்படுத்தாது எனும் வகையிலே அமையும் என நான் நம்பிக்கை கொள்ள விரும்புகிறேன்.

இக்குழுவின் அறிக்கையானது நாளை புதன்கிழமை (30.12.2020) சுகாதார அமைச்சின் ஊடாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கை எந்த விதமான கடைசி நேர மாற்றங்களோ திருத்தங்களோ இன்றி முழுமையாக சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன். இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்டையில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் ஏற்கனவே அளித்த வாக்குறுதியின் பிரகாரம் செயற்பட்டு, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.

குறித்த நிபுணர் குழாமினது அறிக்கையானது சுகாதார அமைச்சின் மூலமாகவோ அல்லது ஜனாதிபதி செயலகத்தின் மூலமாகவோ பொதுமக்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும் என்பதையும் கவலையோடு வாழும் முழு முஸ்லிம் சமூகத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதுடன் துயரத்தோடும் வலியோடும் உள்ள குடும்ப உறவுகளுக்கும் அது ஆறுதலாக அமையும் எனவும் வேண்டிக் கொள்கிறேன்.

மேலும் இவ்வறிக்கையானது பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே நிலவுகின்ற சந்தேகம் மற்றும் அச்ச நிலைமையினை குறைக்கவும் இலங்கையிலே கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைத்து, அதனை இல்லாதொழிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவும் ஏதுவாக அமையும் என எதிர்பார்க்கிறேன்.

எங்களது அடிப்படை உரிமையை மீட்டெடுப்பதற்காக கடுமையானதும் துயர் நிறைந்ததுமான மனக்குமுறல்களுக்கு மத்தியில் கடந்த 10மாதங்களாக நாங்கள் அனுபவித்து வந்த துயரங்களுக்குப் பின்னால் இறைவன் உதவியால் விஞ்ஞான ரீதியாகவும் மனிதாபிமான அடிப்படையிலும் எங்களுக்கு ஒரு ஆறுதலை ஏற்படுத்தக் கூடிய ஒரு நம்பிக்கையினை இங்கு வெளிப்படுத்துகிறேன்- என்று அலிஸாஹிர் மௌலானா மேலும் தெரிவித்தார்.

www.metromirror.lk

metromirrorweb@gmail.com

கல்முனை தெற்கில் தீவிரமடையும் கொரோனா; 176 பேருக்கு தொற்று; நகரம் உள்ளிட்ட 11 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்; இராணுவத்தினரின் கண்காணிப்பு தீவிரம்

அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.ஐ.சம்சுதீன்

கல்முனை தெற்குப் பிரதேசத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதையடுத்து, கல்முனையின் சில பிரதேசங்கள் இன்று செவ்வாய்க்கிழமை (29) முற்றாக முடக்கப்பட்டு, இராணுவத்தினரின் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன.

கல்முனை செய்லான் வீதி தொடக்கம் வாடி வீட்டு வீதி வரையான 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை பொதுச் சந்தையிலும் கல்முனைக்குடியின் ஒரு பகுதியிலும் திங்கட்கிழமை (28) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அன்றைய தினம் இரவு தொடக்கம் மறு அறிவித்தல் வரை மக்கள் நடமாட்டத்தை முற்றாகக் கட்டுப்படுத்தி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரியினால் தனிமைப்படுத்தல் அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

இதனால் இன்று கல்முனை நகரின் தெற்குப் பகுதி மற்றும் கல்முனைக்குடியின் சில பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள், கடைகள் யாவும் மூடப்பட்டிருந்தன. கல்முனை மாநகர பொதுச் சந்தையும் முடக்கப்பட்டிருந்தது. இதனால் இப்பகுதிகள் யாவும் சனநடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

இப்பகுதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, மக்கள் நடமாட்டம் முற்றாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதன்போது வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் தவிர வேறு எவரும் வீடுகளில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறே அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் தரப்பினர் தவிர வேறு எவரும் இப்பிரதேசங்களினுள் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களின் எல்லை வீதிகள் மூடப்பட்டிருந்ததுடன் முக்கிய சந்திகள் மற்றும் கல்முனை நகரின் முக்கிய இடங்களில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் நிலை கொண்டிருந்ததுடன் மற்றும் சில விசேட இராணுவ சிப்பாய்கள் மோட்டார் சைக்கிள்களில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

எனினும், இப்பிரதேசங்களை ஊடறுத்து செல்லும் கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதி ஊடான பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம்பெற்றதுடன் இப்பிரதேச பரப்பினுள் வாகனங்கள் எவையும் நிறுத்துவதற்கோ ஆட்களை ஏற்றி, இறக்குவதற்கோ அனுமதி வழங்கப்படவில்லை. தனிப்பட்ட வாகனங்களில் பயணித்தோர் தொடர்ந்தும் பயணிக்க அனுமதிக்கப்படாமல் திருப்பி விடப்பட்டனர்.

நேற்று திங்கட்கிழமை (28) மாலை வரை கல்முனை தெற்கு சுகாதாரப் பிரிவில் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் இரவு கல்முனையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் சில இடங்களில் பலருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வரவேண்டியிருப்பதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மரணித்தவரின் வீட்டில் மூவருக்கு கொரோனா..!


(இக்பால் அலி)

ரம்புக்கன- கொத்தனவத்த கிராம சேவைப் பிரிவில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் குடும்பத்தில், மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த 75 வயதுடைய நபரின் மகன், மகள் மற்றும் 15வயதுடைய சிறுவன் ஆகியோரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், அருகில் வசிக்கும் பாடசாலை மாணவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து இவர்கள் அனைவரும் உந்துகொட சிகிச்சை  நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.


Saturday, December 26, 2020

மருதமுனை 65 மீற்றர் சுனாமி எஞ்சிய வீட்டுத்திட்டம்..?

ஜெஸ்மி எம்.மூஸா

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 16 ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆனாலும் அதன் எச்சங்களின் நினைவுகள் அதன் அதிர்வலைகளை ஞாபமமூட்டிக் கொண்டே இருக்கின்றன. இதில் ஒன்றுதான் மருதமுனை 65 மீற்றர் மக்களது வீட்டுப்பிரச்சினையாகும்

ஆழிப் பேரலையின் தாக்கத்தினால் இலங்கையில் அதிகம் பாதிக்கப்பட்ட கிராமங்களுள் மருதமுனை முதன்மையானது என்பது புள்ளிவிபரத் தகவல். அக்பர் கிராமம்- இருபத்தைந்து வீட்டுத்திட்டம்- நாற்பது வீட்டுத்திட்டம்- சம்ஸ் மத்திய கல்லூரி- மஸ்ஜிதுல் குமைதி பள்ளிவாசல் உட்பட மருதமுனையின் பெரும்பாலான இடங்களைக்  காவு கொண்டதுடன் ஐந்நூற்றுக்கும் அதிகமான உயிர்களையும் கோடிக்கணக்கான உடமைகளையும் ஏப்பம் விட்டமையை சுனாமியை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை

பலருக்கு இது நினைவு நாளாக இருக்கின்ற போதிலும் பாதிப்பின் வடுக்களைச் சுவித்தவர்களுக்கு மறக்கமுடியா நாள் இதுவே. அனர்த்தங்களைத் தொடர்ந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பிறான்ஸ் சிற்றி-இஸ்லாமிக் றிலீப்-65 மீற்றருக்கு உட்பட்டோர் வீட்டுத்திட்டம் எனப்பல குடியிருப்புக்கள் உருவாகி சிற்சில குறைபாடுகளுடன் மக்கள் தங்கள் இருப்பிடத் தேவை நிவர்த்திப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.

65 மீற்றரில் எஞ்சிய வீடுகளுக்கு நடந்தது என்ன?

சுனாமி அனர்த்தத்தின் போது பெரும்பாதிப்பைச் சந்தித்த 65 மீற்றருக்கு உட்பட்ட மக்களின் எஞ்சிய வீடுகளைக் கையளித்தல் பிரச்சினையே இந்திய மெகா சீரியல்களைப் போல் தொடர்கின்றன.

அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட 65 மீற்றருக்கு உட்பட்டோர் ஒன்றிணைந்து உருவாக்கிய அமைப்பானது சுனாமி ஏற்பட்டு மூன்று வருடங்கள் கழிந்தும் எவ்வித நிவாரணங்களும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து 2007.01.20 ஆம் திகதி மருதமுனை பிரதான வீதியை மறித்து சாலை மறியல் போராட்டம் ஒன்றை மூன்று நாட்களாக நடந்தேற்றியதன் பிற்பாடு அன்றைய அம்பாறை அரசாங்க அதிபராக இருந்த சுனில்கன்னங்கராவுக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பான பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு பிரதேச செயலாளராக இருந்த ஏ.எச்.எம்.அன்ஸார் தலைமையில் கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. 

உடனடியாகவே பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்து கேட்கப்பட்ட போது பிரதேச செயலாளராக இருந்த அன்ஸார்; தூர நோக்கின் அடிப்படையில் 186 பேருக்கு வீடுகள் தேவை எனத்தெரிவித்தார். பேச்சுவார்த்தை உடன்பாட்டின் பின்னர்; மருதமுனை மேட்டு வட்டையில் வீடமைப்புத்துறை அமைச்சின் ஏற்பட்டில் ஆமை வேகத்தில் வீடுகள் கட்டப்பட்டன. 

186 வீடுகள் கட்டப்படுவதாகத் தெரிவித்து வீடமைப்பு அமைச்சு அதற்கான எண்ணிக்கைப் பலகையினைக் காட்சிப்படுத்திய போதும் 178 வீடுகளே கட்டப்பட்டன. எட்டு வீடுகளுக்கு என்ன நடந்தது என்றே தெரியாது? இதன் பின்னணியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து இதுவரை தெளிவில்லை.

அதிகாரிகள் லஞ்சம் பெற்றுள்ளனர்?

178 வீடுகளையும் கையளிக்கும் படலம் ஆரம்பமான போது கடலில் இருந்து 65 மீற்றருக்கு உட்பட்டவர்களில் முழுமையாக வீட்டை இழந்தவர்கள்-வீடு சோதமானவர்கள்-வளவு மட்டும் உள்ளவர்கள் என 143 பேர் அடையாளம் காணப்பட்ட போதும் பல்வேறு சர்ச்சைகளின் பின்னர் 2012 ஆம் ஆண்டு நூற்றி ஒன்பது வீடுகள் மாத்திரமே கையளிக்கப்பட்டன.

மீதமான 69 வீடுகள் யாருக்கும் வழங்கப்படாத நிலையில் இருக்க பிற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற நீதிமன்ற உத்தரவின் நிமித்தம் 111 வீடுகள் கையளிக்கப்பட்ட நிலையில் 74 வீடுகள் கவனிப்பாரற்று இன்றும் கிடக்கின்றன 

மருதமுனையில் சுனாமியால் பாதிக்கப்பட்டும் படாமலும் வீடுகளற்ற நிலையில் ஏழைகளுக்கும் புதிதாக இஸ்லாத்துக்கு வந்தவர்களுக்கும் ஒப்படைக்கலாம் என 65 மீற்றருக்கு உட்பட்ட அமைப்பினர் உள்ளிட்ட பலர் பிரயத்தனங்களை மேற்கொண்டபோதும் அதனை ஒப்படைப்பதில் கல்முனை பிரதேச செயலக அதிகாரத்தரப்பினர் தொடர்ந்தும் இழுபறி நிலையினையே இருந்து வந்தனர்.

இதற்கிடையில் பல தடைவ நேர்முகப் பரீட்சையும் நடைபெற்று மீதி வீடுகளை வழங்கவதற்கான முஸ்தீபுகளும் நடைபெற்றன. அவ்வாறு நடந்த நேர்முகப்பரீட்சையின் போது ஒழுங்கீனமும் ஊழல்களும் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் புகார் செய்தே வந்தனர். சிலர் அத்துமீறிக் குடியேறியும் பார்த்தனர். எல்லாமே தொடராகத் தடுக்கப்பட்டன. அரச அதிகாரிகள் நினைத்திருந்தால் கொடுத்திருக்கலாமே என கோசங்கள் எழுந்த போதுதான் மீதமுள்ள வீடுகளில் பலவற்றிற்காக அரச அதிகாரிகள் இலஞ்சப் பணம் பெற்ற உண்மை தெரியவந்தது.

காற்றில் பறந்து கொண்டிருக்கும் அரசியல் வாக்குறுதிகள்

16 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடங்கி ஜனாதிபதித் தேர்தல் வரை பலவற்றை இம்மக்கள் கடந்து விட்ட நிலையிலும் இதுவரை இம்மக்களின் பிரச்சினை இழுபறியாகி வருவதென்பது அரசியல்வாதிகளின் கையாலாகாததனமே அல்லாமல் வேறில்லை.

தேர்தல் காலங்களில் இவர்கள் வழங்கியுள்ள வாக்குறுதிகளையும் ஏமாற்று வார்த்தைகளையும் தாங்கிக் கொள்ளாமல் குறித்த வீடுகள் தாமகவே உடைந்து விழும் நிலைமைக்கு வந்துவிட்டன. சிலவேளை முஸ்லிம் கட்சிகளின் அரசியல்வாதிகள் இப்படித்தான் என நீங்கள் அவர்கள் பக்கம் கைநீட்டினால் அது உங்கள் தவறு. இந்தநாட்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் தரிசித்த ஒரே வீட்டுத்திட்டம் என்ற பெருமை இதற்கு மட்டுமே உண்டு. 

தற்போதுள்ள அரசு பதவியேற்றதும் இவ்வீடுகளை கையளிக்க ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறி மக்களை நம்பவைத்திருப்பதே இறுதி அப்டேட்டாகச் சொல்லலாம்.

வீடுகள் பாழடைவதற்கு அரச அதிகாரிகளே பொறுப்பு

எஞ்சியுள்ள வீடுகள் யார் யாருக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்கப்பால் அதனைப் பெறப்போகின்றவர்கள் ஏழைகள். அவர்கள் இன்று அவ்வீடுகளைப் பெற்றால் அதனைப் லட்சக்கணக்கான ரூபாய்க்களைச் செலவு செய்தே அதில் குடியேற வேண்டும்.

காரணம் இன்று அவ்வீடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன. ஜன்னல் கண்ணாடிகள் கழற்றப்பட்டும் சேதமாக்கப்பட்டும் உள்ளன. மிருகங்களின் சரணாலயமாகவும் போதைவஸ்த்துக்காரர்களின் ஒழிவிடமாகவும் அவ்வீடுகள் மாறியுள்ளன. இதற்கெல்லாம் காரணம் அரசியல் வாதிகளின் பொடுபோக்குத்தன்மை ஒருபுறமிருக்க அரச அதிகாரிகளின் கவனமின்மையே பிறிதொரு காரணமாகும் 

வீடுகள் இல்லாமல் அத்துமீறி குடியேறி வசித்து வருகின்ற சில குடும்பங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த அதிகாரிகள் தங்களின் கீழுள்ள வீட்டுத்திட்டத்தைப்பாதுகாக்காமல் பாழடைந்து சேதமேற்படவும் காரணமாக இருந்துள்ளனர். இவ்வீடுகள் மீண்டும் ஒப்படைக்கப்படும் நிலை வந்தால் அதற்கான புனர்நிருமாணப்பொறுப்பை அரசே பொறுப்பேற்க வேண்டும்

எது எவ்வாறான போதும் அரசில்வாதிகளின் கையாகாலாகாத செயற்பாட்டின் மிக நீண்ட எச்சமாக மருதமுனை 65 வீட்டுத்திட்டத்தின் எஞ்சிய வீடுகள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளதை எவரும் அழித்துவிட முடியாது. 17 ஆவது ஆண்டு நிறைவிலாவது இதனை நிறைவேற்றுவார்களா? எனக் கேட்பதற்கு வெட்கப்படும் எழுத்துக்களாக விடைபெறவேண்டியுள்ளது.

metromirrorweb@gmail.com


சாயம் பூசப்படும் சமயக் கிரியைகள்; சாத்வீக வழிகள் வெற்றி பெறுமா?


-சுஐப் எம். காசிம்-

முஸ்லிம் சமூகத்தின் ஏக்கப் பெருமூச்சு, உலகளவில்,மனிதாபிமானத்தின் வாசலைத் தட்டிச் செல்கையில், வேறு விடயத்தை எழுதும் வழிகளின்றியே, இம்முறையும் கொவிட் 19 பற்றி எழுத நேரிடுகிறது.

"கோடைக்கு கொச்சி வெச்சி,குளுந்த தண்ணி நானூற்றி, மாரிக்கு செத்த, மன வருத்தம் தீருதில்ல தோழி". இது நாட்டார் கவி. நல்ல முயற்சிகள் பயனற்றுப் போனதன் பரிதாபம் இக் கவியில்,கோடிட்டுக் காட்டப்படுகிறது.

இலங்கை முஸ்லிம்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள அவலத்தைப் போக்கும் பொருட்டும், இவ்வாறு நல்ல பல முயற்சிகள் நடக்காமலில்லை. ஆனால், இவற்றின் மீது பூசப்படும் சாயங்கள்தான், சந்தர்ப்பத்தை தட்டிவிடுமோ? என்ற அச்சத்தைக் கிளறி விடுகிறது.மிக நீண்ட காலமாக,இழுபறிப்படும் இந்த ஜனாஸா விவகாரம் முஸ்லிம் அரசியல் களத்தை கொதிப்பாக்கி வருகிறது.இதில் சமூக, ஏனைய தரப்புக்களின் பங்களிப்புக்கள் எவ்வாறுள்ளன, என்ற கேள்விகளுக்கு பதில்களைத் தேடுவது யார்? ஒருவாறு இரகசியமாக எதுவும் நடந்தாலும்,அதன் எதிரொலிகளையாவது காண முடியவில்லையே!

இன்றைய சூழலில் இழக்கப்படும், மிகப் பெறுமதியான மத நம்பிக்கையை (நல்லடக்கம்) வென்றெடுக்க முஸ்லிம் சமூகத்தின் மதத் தலைமைகள் எதைச் செய்துள்ளன?. எதையாவது, இத்தலைமைகளே செய்ய வேண்டும். ஏனெனில் அந்தளவிற்கு, நாட்டின் அரசியல் களம் தலைபுரண்டு, முகம் சுழித்துக் கிடக்கிறது. இதனால்,அரசியல் தலைமைகள் முன்னிற்கும் அத்தனை முயற்சிகளும் இனவாதிகள், மதவாதிகள் மற்றும் கடும்போக்கர்களின் கண்களுக்கு அரசியல் சூதாகவே தென்படுகிறது. 

இந்தச் சக்திகளின் ஆசீர்வாதத்தால் கொண்டு வரப்பட்ட இப்புதிய அரசியல் கலாசாரத்தில், இவ்வாறான பார்வைகள் தவிர்க்க முடியாதவைதான். இதற்காகவே மதத் தலைமைகள், இவ்விடயத்தில் முன்னிற்க வேண்டியுள்ளது. சிவில் சமூக அமைப்புக்கள், முஸ்லிம் அரசியல் தலைமைகளை வழிகாட்டுவதாகவும் தென்னிலங்கைக்கு ஒரு பார்வை உள்ளதால், நல்லடக்கத்திற்கான உரிமைக்கு,இத்தலைமைகள் முன்னிற்பதும் ஆரோக்கியமாக அமையப் போவதில்லை.

2015 க்குப் பின்னர், தென்னிலங்கையில் ஏற்பட்ட, இப்பார்வையைப் போக்குவதற்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் இன்னும் பல தூரங்கள் பயணிக்க வேண்டியுள்ளமை, மூன்றாம் சமூகத்தின் பலவீனங்களில் ஒன்றுதான்.

எனவே, மத மற்றும் ஆன்மீக அமைப்புக்கள்தான், "கபன்" சீலைக்கான சாத்வீக வழிகளை முன்னகர்த்த வேண்டும். ராஜபக்ஷக்களின் நிர்வாகத்துக்கு இன்றுவரை ஓரளவு நெருக்கமாக உள்ள மூன்றாம் சமூகத்தின், முக்கிய சக்தியாக இதுதானுள்ளது. 

இந்நிலையில், தென்னிலங்கையிலிருந்து அந்நியப்பட்டுள்ள போதிலும், பொரளை கனத்தை மயான ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்றுள்ளதில், தெளிவுகள் சில பிறக்கத்தான் செய்கின்றன. நிச்சயமாக இது அரசியலாக இருக்காது. சிங்கள, பௌத்த தளங்களில் வேரூன்ற வேண்டிய தேவை இருக்கையில்,நாட்டையே சர்வதேசப் பொறிக்குள் சிக்க வைக்குமா? இங்குள்ள (ஐ.ம.ச) முஸ்லிம் தலைமைகளைத் தொடர்ந்தும் கட்டிப்போடும் முயற்சியாகவும் இதை நோக்க முடியாதே! உள்ளவர்களே, எதுவுமின்றி வழி தெரியாது விழி பிதுங்குகையில், இவர்கள் சென்று எதைச் சாதிப்பது? இருபதுக்காக நெருங்கி,நல்லடக்கத்தை சாத்தியப்படுத்தத் துணிந்த சாணக்கியங்களும் சத்தமின்றியே உள்ளனர். எனவே,இன்னும் சில தசாப்தங்களுக்கு இங்குதான் தலைமைகளின் இருப்பிடம் என்பது, ஐக்கிய மக்கள் சக்தி தலைவருக்குத் தெரியாததா? ஆனால், அரசியலென்று வந்துவிட்டால், ஆளுக்கொரு பங்கு அண்ணன், தம்பிக்கு என்றில்லையே! "ஆதாயம் இல்லாட்டி,செட்டியார் ஆற்றோடு போயிருக்கார்" என்ற கதையாகவே ஐ.ம.ச வின் கள நிலைமைகள் தடுமாறுகின்றன. இங்குதான்,மதத் தலைவர்களை இணைத்த ஒன்றுபடல் அவசியம் என்கிறோம்.

நல்லடக்கத்தில் நம்பிக்கை உள்ள "இப்ராஹிமிய" மார்க்கத்தினரில் கிறிஸ்தவர்களும் உள்ளனர். முஸ்லிம்களுக்கு இவ்விடயத்திலிருக்கும் விட்டுக் கொடுக்க முடியாத இறுக்க மனநிலை போன்று, கிறிஸ்தவர்கள் இதுவரைக்கும் இல்லாதுள்ளமை, மற்றும் நல்லடக்க உரிமைக்கான முஸ்லிம்களின் குரலோடு இணைந்து "இப்ராஹிமிய" மதத்தவரின் நம்பிக்கைக்கு குரல் எழுப்பாதமை என்பன கவலையை ஏற்படுத்தியிருக்கும். ஒருவேளை,அரசியல் தலைமைகள் முன்னிற்பதால் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதோ
தெரியாது. 

ஈஸ்டர் தாக்குதல்களின் எதிரொலிகள் ஏற்படுத்திய இந்த சமூக இடைவெளிகள், கொரோனா இடைவெளிகளைப் போலவே, விஸ்வரூபமாகி இன்னும் நிற்கிறதா?நிலைக்கிறதா?இவற்றைக் களைவதற்கு சமூகங்களின் மதத் தலைமைகள் முயற்சிக்கவில்லையா?

உலகில் அதிகூடிய சனத் தொகையினரான , அமெரிக்க, ஐரோப்பியநாடுகளில் செல்வாக்குமிக்க மதத்தவரான,இந்நாடுகளின் ஆட்சியிலும் செல்வாக்குச் செலுத்துகின்ற கிறிஸ்தவர்கள் ,"இப்ராஹிமிய"(ஆப்ரஹாம்) வேதத்தவரின் நல்லடக்க விடயத்தை வென்றெடுக்க இலங்கை முஸ்லிம்களுடன் இணைய வேண்டும். அப்போதுதான், இம்முயற்சிகளுக்கு வீணான சாயங்கள் பூசப்படுவதைத் தடுக்கக் கூடியதாக இருக்கும்.

அதிர்ஷ்டவசமாக, ஏனைய நாடுகளிலுள்ள இப்ராஹிமிய வேதத்தினர் (கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம்) எமது நல்லடக்கத்திற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளமை மகிழ்ச்சிக்கு உரியதே. மனிதாபிமானத்தைப் பொறுத்த வரை, இந்தக் கொடிய கொரோனா உலகிலிருந்து இல்லாதொழிந்து, எல்லா மதத்தவரும் தத்தமது ஆத்ம மீட்சிக்கான சமயக் கிரியைகளைச் செய்வதற்கு இறைவன் வழிவிட வேண்டுமென்பதே எல்லோரினதும் பிரார்த்தனை.

நல்லடக்கத்திற்கான, கருத்தாடல்கள் கவனம் தப்பாதிருப்பதும், திசை தெரியாமலிருப்பதுமே, இம்முயற்சிகளை உறுதியான பாதையில் வழிநடத்தும். தொடர்ந்தேர்ச்சியாக நடக்கும், இனிமேல் நடக்கப் போகும் ஆர்ப்பாட்டங்களுக்கு இலங்கை அரசாங்கம் இசைந்து கொடுக்குமோ இல்லையோ!, அரசியல் கலக்காத, ஆத்மீக நோக்கிலான, கடும்போக்காளர்களின் கண்களைக் குத்தாத அணுகுமுறைகளே வழிகளை திறக்கும் .

எரித்தலை எதிர்த்தும், நல்லடக்கத்திற்கு அனுமதி கோரியும் நடத்தப்பட்ட மார்ச் மாத பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட மூன்றாம் சமூகத்தின் அரசியல் தனித்துவ தலைமைகளுடன், நாட்டின் இரண்டாம் தலைமையும் அவருடனிருந்த ஆதிக்கப் போக்குகளும் நடந்து கொண்ட முறைகளே, இதை நினைவூட்டி, அறிவூட்டுகிறது. ஆனால்,அன்றைய மனநிலைகளில், இன்றும் எமது நாட்டுத் தலைவர்கள் இருக்கமாட்டார்கள் என நம்புவோம்.

metromirrorweb@gmail.com

மருதூர் ஏ மஜீத் பல்துறை வித்தகர்; மு.கா. தலைவர் ஹக்கீம் அனுதாபச் செய்தி


இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரப்பில் கிழக்கிலங்கை, சாய்ந்தமருது மண்ணிலிருந்து கோலோச்சிய பெருந்தகை மருதூர் ஏ. மஜீத்தின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அன்னாரின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நண்பர் மருதூர் ஏ. மஜீத்தை பல்துறை வித்தகர் என்றால் மிகையாகாது. கல்வியலாளராகவும், கவிஞராகவும், எழுத்தாளராகவும், நூலாசிரியராகவும், மூலிகை மருத்துவத்தில் ஈடுபாடுடையவராகவும், தற்காப்புக் கலையில் கைதேர்ந்தவராகவும், இவை அனைத்தையும் விட கிழக்கு மாகாண நாட்டாரியலில் முத்திரை பதித்தவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராகவும் அவர் விளங்கினார்.

பழகுவதற்கு மிகவும் இனியவராக இருந்த அவரிடத்தில் ஒரு வித்துவச் செருக்கு இருந்தது. அதனை இலக்கிய ஆணவம் என்று கூடக் கூறலாம். இலக்கியத்தில் மட்டுமல்லாது, அவர் ஈடுபட்ட எந்தத் துறையிலுமே அன்னாருக்குச் சரியெனப்பட்டதை எவராவது வித்தியாசமாக விமர்சித்து அவர் மீது அழுத்தம் செலுத்த முற்பட்டால், அதற்கு அடிபணிய மறுக்கும் தன்மை அவரில் இயல்பாகவே குடிகொண்டிருந்தது.

இலங்கைக்கும் அப்பால் தமிழகம் தொட்டு மலேஷியா வரை இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடுகளில் அவரது பங்களிப்பு இருந்திருக்கின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகப் பெருந் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் அசைக்க முடியாத ஆளுமையினால் அதிகம்ஈர்க்கப்பட்டு, அவரால் அரவணைக்கப்பட்ட மருதூர் ஏ.மஜீத் எமது கட்சியின் வளர்ச்சியில் ஊணாகவும், உரமாகவும் இருந்திருக்கின்றார்.

தமது நூல்களின் வரிசையில் பதினெட்டுத் தொகுதிகள் வரை எழுதியிருக்கும் அவர், எனது குடும்பப் பின்னணியை வைத்து எழுதிய “வேர்” என்ற நூல் கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாட்டில் வெளியிட்டு வைக்கப்பட்டதையும் இந்த துக்ககரமான சந்தர்ப்பத்தில் நன்றியறிதலோடு நினைவு கூர்கின்றேன்.

அவருக்கு போர்த்தப்படாத பொன்னாடைகள் இல்லை. புன்னகை பூத்த முகத்துடன் அவர் பொன்னிற ஆடையும், சால்வையும் அணிந்து கண் முன் காட்சியளிப்பது மனதில் இன்றும் நிழலாடுகின்றது.

ஆரவாரமின்றி, இஸ்லாமிய ஈமானியப் பின்புலத்தில் பணி செய்து ஓய்ந்துள்ள நண்பர் மஜீத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொண்டு ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவன வாழ்வை அளிப்பானாக.

அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது துணைவியாருக்கும், குடும்பத்தினருக்கும் அல்லாஹ் ஆறுதலை வழங்குவானாக.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.

metromirrorweb@gmail.com.

மருதூர் ஏ.மஜீத் அவர்களின் மறைவு கல்வி, சமூக, இலக்கியத் துறைகளுக்கு பேரிழப்பாகும்..!


(அஸ்லம் எஸ்.மௌலானா)

ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளரும் மூத்த இலக்கியவாதியுமான மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீட் அவர்களின் மறைவு கல்வி, சமூக, இலக்கியத் துறைகளுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீட் அவர்கள் நாடறிந்த எழுத்தாளராவார். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இலக்கிய வாசம் பரப்பி, தனக்கென ஒரு தனித்துவ அடையாளத்தை பெற்றிருந்தார். கலை, இலக்கியம், கல்வி, சமூகம் சார்ந்த பல நூல்களை எழுதி வெளியிட்ட பன்னூலாசிரியரான மணிப்புலவர், நாடு முழுவதும் நிறைய இளம் படைப்பாளிகளை உருவாக்கியிருக்கிறார்.

கிழக்கிலங்கையின் கலை, இலக்கிய முதுசொமாகத் திகழ்ந்த இவர் எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகி, அனைவரையும் வசீகரிக்கின்ற ஆற்றலை பெற்றிருந்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நானும் மணிப்புலவர் அவர்களும் ஈரான் நாட்டுக்கு ஒன்றாக விஜயம் செய்து, அங்கு தங்கியிருந்த காலம் தொட்டு எம்மிருவருக்குமிடையிலான உறவு மிகவும் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து ஊர், சமூக விடயங்கள் பற்றிப் பேசிக்கொள்வோம். அவருடனான உறவு என்பது மிகவும் கலாதியானதும் கனதியானதுமாகும்.   

சமீபத்தில் கூட அவரது வீடு சென்று, அவரை சந்தித்தபோது, சமூகம் சார்ந்த விடயங்கள் தொடர்பில் அவர் என்னுடன் கருத்துகளை பரிமாறிக் கொண்டமையும் அவரது ஹாஷ்யமான உரையாடலும் பசுமை நினைவாக இருக்கிறது. இந்நிலையில் அவரது மறைவு எனக்கு மிகவும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கம் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.

மேலும், அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

metromirrorweb@gmail.com