Sunday, July 31, 2022

மாகாண பொதுச் சேவை செயலாளர் வெளி நேர்முகப் பரீட்சையில் கலந்து கொள்வது நிருவாக விதி மீறலாகும்..!

இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.முகம்மட் முக்தார் தெரிவிகையில்;

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஜுன் 16 இல் இடம்பெற்ற வலயக் கல்வி பணிப்பாளர் நேர்முக பரீட்சையில் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளர் கலந்து கொண்டிருந்தார். இது தவறு என கிழக்கு மாகாண பிரதம செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கு எழுத்து மூலம் முறையிட்டுள்ளதுடன் அதுபற்றி பிரதம செயலரிடம் தொலைபேசி மூலமும் தெரிவித்துள்ளேன்.

இதேவேளை கல்வித்துறை உயர் பதவிக்கு நடாத்தப்பட்ட நேர்முக பரீட்சையில் கல்வி திணைக்கள தலைவர் என்ற வகையில் மாகாண கல்வி பணிப்பாளர் குறித்த நேர்முகப் பரீட்சையில் கலந்து கொள்ள வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு நடைபெறாமல் இலங்கை நிருவாக சேவை அதிகாரிகள் மூவர் மட்டும் கலந்து கொண்டமை இலங்கை நிருவாக சேவை மேலாதிக்கமாக இருக்கலாமோ அல்லது இலங்கை கல்வி நிருவாக சேவை

உத்தியோகத்தர்களை மலினப்படுத்தும் செயற்பாடோ என சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

'தமிழ் சமூகத்தை முஸ்லிம் சமூகம் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்' -நிந்தவூர் தவிசாளர் தாஹிர்

(ஏ.எல்.எம்.சலீம்)

'தமிழ் மக்கள் பல்வேறு துன்பதுயரங்கள், இன்னல்களை அனுபவித்துவந்த போதிலும், ஆட்சி அதிகாரத்திற்கு வருபவர்களுடன், இணையாவோ, மண்டியிடவோ ஒருபோதும் முனையவில்லை, முஸ்லிம் சமூகம் இதனை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்'

இவ்வாறு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் கூறினார்.

நிந்தவூர் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களுக்கான 4 ஆவது சபையின் 52 ஆவது அமர்வு சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. இந்த அமர்வுக்கு தலைமைவகித்து தவிசாளர் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஆட்சி அமைக்கும் அரசுடன் இணைவதன் மூலமே விமோசனங்களைப் பெறலாம், உரிமைகளை வென்றெடுக்கலாமென்ற மாயையிலிருந்து முஸ்லிம் சமூகம் விடுபட வேண்டுமெனக்குறிப்பிட்ட தவிசாளர் தாஹிர் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

'இந்த நாட்டில் தமிழ் சமூகம் பல்வேறு இன்னல்களையும் துன்பதுயரங்களையும், புறக்கணிப்புக்களையும் அனுபவித்து வருகின்ற போதிலும், அந்த மக்கள் ஆட்சியாளர்களிடம் மண்டியிட்டு, அரசுகளுடன் இணைந்து இதற்கான விமோசனங்களைப்பெற்றுத்தருமாறு தமது அரசியல் தலைமைகளை ஒரு போதும் கோரவில்லை.

இழப்புகளை, இன்னல்களுக்கான விடிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கான அழுத்தங்களை ஒற்றுமையுடன் பிரயோகித்து சாதித்தே வருகின்றனர். இந்த முன்னுதாரணத்தை முஸ்லிம் சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் இன்றைய அரசியல் மாற்றங்களுக்கு மத்தியிலும், பிரதான இரு முஸ்லிம் கட்சிகளும் ஏன் இன்னும் புதிய அரசுடன் சேரவில்லை? அமைச்சு பதவிகளை ஏன் பெறவில்லை எனக் கேட்பவர்களாகவே நம்மவர்கள் உள்ளனர்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நாட்டின் இன்றைய நிலைக்கு முக்கிய காரணமாக பிரஜைகளின் சுய நல, போக்குகளும் குறிப்பிடத்தக்கதாகும்.

எனக்குக் கிடைத்தால் போதும் என்ற மனநிலை கொண்டோரே அரசியல் வாதிகளையும் ஆளும்தரப்பு, எதிர்த்தரப்பு எனப் பிரித்தாள முனைகின்றனர்.

எனவே, மக்கள் முதலில் மாறவேண்டும். அரசுடன் இணைந்திருந்தாலே வாழலாமென்ற மன நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

இன்று நாட்டில் புதிய அரசியல் ரீதியான மாற்றம் ஏற்பட்டுள்ளது. நீண்டகால அரசியல் அனுபவமிக்க, இராஜதந்திர தொடர்புகளை நுணுக்கமாகவும், துல்லியமாகவும் கையாளக்கூடிய ரணில் விக்கிரம சிங்க அரசியலமைப்புக்கு உட்பட்டு ஜனாதிபதியாகப் பதவி ஏற்றுள்ளார்.

அவருக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அதே வேளை, அவர் முன்னைய ஆட்சியினரின் நிழல் ஜனாதிபதியா எனும் கேள்வியும், அச்சமும் மக்களின் பார்வையாகவுமுள்ளது.

இருப்பினும் ஜனாதிபதியின் செயற்பாடுகள் மக்கள் நலன் சார்ந்ததாகவும், எவரையும் காப்பாற்றும் நோக்கற்றதாகவும், அராஜகமற்ற நிலையிலும் அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதேவேளை முப்படைகளின் தளபதியாகவிருந்து புரையோடிப் போயிருந்த யுத்தத்தையே வென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, மக்கள் எழுச்சிக்கு முகம் கொடுக்க முடியாமல் விலகிச் சென்றுள்ளார்.

அவர் நினைத்திருந்தால் படைதரப்பின் ஆதரவுடன் அதிகாரப் பிரயோகம் செய்து, பாதுகாப்பு தேடியிருக்கலாம். ஆனாலும் எவ்வித சேதாரமுமின்றி அவர் ஒதுங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். மனிதாபிமானம் செத்துவிடவில்லை என்பதையே இது காட்டுகின்றது' இவ்வாறு அவர் கூறினார்.


கல்முனையில் 10 எரிபொருள் நிலையங்கள் இருந்தும் கடற்றொழிலுக்கு டீசல் பெற முடியவில்லை; மீனவர்களை கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டம்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.ஐ.சம்சுதீன்)

கடற்றொழிலை தங்குதடையின்றி, கிரமமாக முன்னெடுப்பதற்கு போதியளவு எரிபொருளை பெற்றுத்தருமாறு கோரி கல்முனைப் பிரதேச ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாளர்கள் இன்று (31) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்முனை ஆழ்கடல் மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்முனை ஹுதா திடலை அண்மித்த கடற்கரைப் பகுதியில் சங்கத்தின் தலைவர் எம்.ஏ.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான மீனவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது தமது கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திக்கொண்டு, கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபாட்டிருந்தனர்.

கடந்த பல மாதங்களாக நிலவி வருகின்ற எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கல்முனைப் பகுதியில் கடற்றொழில் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து, நிர்க்கதியடைந்திருப்பதாகவும் கல்முனை மாநகர எல்லையினுள் 10 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இருந்தும் கூட கடற்றொழிலுக்காக தங்களால் டீசலைப் பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.

கல்முனைப் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தற்போது போதியளவு டீசல் வருகின்ற நிலையில், மீன்பிடிப் படகுகளுக்கென தங்களால் டீசலைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் டீசல் விநியோகத்தின்போது தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அதனை வழங்குமாறு கடற்றொழில் திணைக்களத்தின் உறுதிப்படுத்தலுடன் பிரதேச செயலாளரினால் சிபார்சுக் கடிதங்கள் வழங்கப்பட்டிருக்கின்ற போதிலும் எரிபொருள் நிலையங்களில் அதற்கு மதிப்பளிக்கப்படாமல், பதுக்கல் வியாபாரத்தில் ஈடுபடுகின்ற மாபியாக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது எனவும் இதன்போது அவர்கள் கடும் விசனமும் கண்டனமும் வெளியிட்டனர்.

இப்பிரச்சினைக்கு உடனடியாக தீவினைப் பெற்றுத்தருவதற்கு கடற்றொழில் அமைச்சரும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் அவசர நடவடிக்கை எடுக்க முன்வர என மீனவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை, மீனவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து, இப்பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கான முக்கிய கூட்டம் ஒன்று, இன்று (31) கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Saturday, July 30, 2022

காலிமுக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றமிழைத்திருப்பின் பகிரங்க மன்னிப்பு வழங்க வேண்டும்; ஜனாதிபதி ரணிலிடம் தென்கிழக்கு கல்விப் பேரவை கோரிக்கை..!

-அஸ்லம் எஸ்.மௌலானா-

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றமிழைத்திருப்பின் அவர்களுக்கு, ஜனாதிபதி ரணில் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் விதத்தில் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை தென்கிழக்கு கல்விப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மேற்படி பேரவையின் தவிசாளரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஏ.எல்.எம்.முக்தார், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;

காலிமுக ஆர்ப்பாட்டம், அதன் பின்னரான அனைத்து செயற்பாடுகளிலும் தொழிற்சங்கத் தலைவர்கள், சகல பல்கலைக்கழக மாணவர்கள், புத்திஜீவிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மதத்தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் எனப் பல தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

இவர்கள் அனைவரும் எவ்வித அரசியல் கட்சிகளையோ, எந்த தீவிரவாத இயக்கத்தையோ சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால் அவர்களை நாட்டுத் தலைவர்- பாசிஸ்டுகள், குழப்பவாதிகள், ஆட்சிக் கவிழ்ப்பாளர்கள் என பட்டம் சூட்டினார். அத்துடன் ஆர்ப்பாட்டங்களில் முன்னணியில் நின்ற பலர் தற்போது தேடித்தேடி கைது செய்யப்படுகின்றமை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூகப் போராட்டங்களில் கலந்து கொள்பவர்களை எந்த நாட்டிலும் கைது செய்கின்ற வரலாறு இல்லை. அண்மையில் இந்தியாவில் இடம்பெற்ற விவசாயிகளின் போராட்டம் ஒரு வருடத்திற்கு மேல் இடம்பெற்றது. இறுதியில் இந்திய அரசாங்கம் அடிபணிந்து விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றது. இதற்காக எந்த  விவசாயியையும் இந்திய அரசாங்கம் கைது செய்வதற்கு முயற்சிக்கவில்லை.

காலிமுக ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டம் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டா நாட்டை விட்டு வெளியேறினார். இதன் காரணமாகவே ரணில் ஜனாதிபதியானார். எனவே காலிமுக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நன்றியுடையவராக ரணில் இருக்க வேண்டும். ஆனால் அவர்களை பலிவாங்குவதில் அரசாங்கம் தீவிரமாக செயற்படுவதை முழுநாடும் உணருகிறது. இது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆரோக்கியமானதல்ல.

அரசாங்கத்தின் தற்போதைய கைது நடவடிக்கைகள் இலங்கை அரசியலமைப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம், அரசியல் சுதந்திரம் என்பவற்றை ஒடுக்கும் செயற்பாடாகும். நேரடியாக இவற்றை மீறி செயற்படாது மிகவும் தந்திரமாக அடக்கி ஒடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அரசின் இச்செயற்பாடுகள் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் இலங்கை அரசுக்கு மிகக் கெட்ட பெயரை பெற்றுத் தருவதுடன் பொருளாதார ரீதியாக நலிவடைந்து போன இலங்கை எடுக்கும் முயற்சிகளை மிகவும் மோசமாக பாதிக்கும்.

உண்மையில், காலிமுக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றமிழைத்திருப்பின் அவர்களுக்கு பகிரங்க மன்னிப்பை வழங்குவதன் மூலம் ஜனாதிபதி ரணில் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த முன்வர வேண்டும்- எனவும் ஏ.எல்.எம்.முக்தார் வலியுறுத்தியுள்ளார்.

Friday, July 29, 2022

மிகை ஊழியர் அடிப்படையில் கடமையாற்றும் அதிபர்களுக்கு பதவி உயர்வு; கல்வி அமைச்சினால் சுற்றுநிருபம் வெளியீடு..!

-அஸ்லம் எஸ்.மௌலானா-

இலங்கை அதிபர் சேவைக்கு மிகை ஊழியர் அடிப்படையில் கடந்த 2012.08.08 ஆம் திகதி நியமனம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்க அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் பிரகாரம் இலங்கை அதிபர் சேவை மிகை ஊழியர் தரம் 3 இலிருந்து 2 ஆம் தரத்திற்கும் இலங்கை அதிபர் சேவை (மிகை ஊழியர்) தரம் 2 இலிருந்து தரம்-1 ற்கும் பதவி உயர்வு வழங்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இப்பதவி உயர்வுகளை பெறுவதற்காக பூர்த்தி செய்திருக்க வேண்டிய நிபந்தனைகள் பற்றி கல்வி அமைச்சினால் வெளியிடபட்டுள்ள சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அதிபர் மிகை ஊழியர் சேவையில் நிரந்தரமாக்கபட்டிருத்தல் வேண்டும்,

பதவி உயர்வுக்கு தகுதி அடையும் தினத்திற்கு முன்னர் 06 வருட சேவையை பூர்த்தி செய்திருப்பதுடன் 06 வருட சம்பள உயர்ச்சியை பெற்றிருக்க வேண்டும்,

உரிய காலத்தினுள் EB பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும். இதற்காக 2022.05.26ஆம் திகதியில் இருந்து 03 வருடம் சலுகைக் காலம் வழங்கப்படும்,

ஏனைய மொழிகளில் சித்தியடைந்திருத்தல் வேண்டும் அல்லது விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்,

பதவி உயர்வுக்கு முந்திய 06 வருடங்கள் செயலாற்றுகை தரங்கணிப்பு திருப்திகர மட்டத்தில் இருக்க வேண்டும்,

அரச சேவை ஆணைக்குழுவின் 01/2020 இற்கமைய ஒழுக்காற்று தண்டனை பெறாதவராயிருத்தல் வேண்டும் என்பனவே அந்நிபந்தனைகளாகும்.

இலங்கை அதிபர் சேவையில் மிகை ஊழியர் அடிப்படையில் கடமையாற்றி ஓய்வுபெற்ற அதிபர் EB சித்தியைத் தவிர ஏனைய தேவைகளை பூர்த்தி செய்திருப்பின் ஓய்வுபெற்ற தினத்திற்கு முந்திய தினத்தில் இருந்து பதவி உயர்த்தப்படுவர் என அந்த சுற்றுநிருபத்தின் ஊடாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, தற்போது சேவையில் இருப்போர் ஓய்வுபெறும்போது இலங்கை அதிபர் சேவை மிகை ஊழியர் அடிப்படையில் ஓய்வுபெற வைக்கப்படுவர்.

இலங்கை அதிபர் சேவை மிகை ஊழியர் ஒருவர் இன்னுமொரு மிகை ஊழியர் அதிபருடன் ஒத்துமாற அனுமதிக்கப்படுவார்.

இலங்கை அதிபர் சேவை மிகை ஊழியர் ஒருவர் இலங்கை அதிபர் சேவை நிரந்தர ஆளணி பதவிக்குரிய வெற்றிடத்திற்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் நியமனம் செய்யப்படமாட்டார் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்வி அமைச்சின் இத்தீர்மானத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் அதிபர் சேவை மிகை ஊழியர் அடிப்படையில் கடமையாற்றும் 3200 பேர் பயனடைவர் என இலங்கை கல்வி நிருவாக அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்தார்.

Thursday, July 14, 2022

கல்முனையில் Gas விநியோகத்திற்கான விசேட நடைமுறை ஆரம்பம்; முதல்வர், பிரதேச செயலாளர்கள் இணைந்து நடவடிக்கை..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர பிரதேசங்களில் எரிவாயு மற்றும் எரிபொருள் விநியோகத்தை குளறுபடிகளின்றி சீராக முன்னெடுப்பதற்காக குடும்ப அட்டை மற்றும் பாஸ் முறைமை அமுலுக்கு வந்துள்ளது.

கல்முனை மாநகர முதலவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் பிரதேச செயலாளர்கள், மாநகர பிரதி முதல்வர், ஆணையாளர், பொலிஸ் அதிகாரிகள், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள், எரிவாயு நிறுவனங்களின் பிராந்திய அதிகாரிகள் மற்றும் சிவில் அமைப்புகளை உள்ளடக்கிய விசேட செயலணி மேற்கொண்ட தீர்மானத்திற்கமைவாக கல்முனை மாநகர சபை மற்றும் பிரதேச செயலகங்கள் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

கடந்த ஜூன் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் பல தடவைகள் இச்செயலணி மாநகர சபையில் கூடி, இப்பிரதேசங்களில் எரிவாயு, மண்ணெண்ணெய், பெற்றோல் மற்றும் டீசல் விநியோகத்தின்போது ஏற்படுகின்ற குழப்பங்களை தவிர்ப்பதற்கும் முறைகேடான செயற்பாடுகள், பதுக்கல் மற்றும் கருப்புச்சந்தை வியாபாரத்தை முறியடிப்பதற்கும் அனைத்து மக்களுக்கும் அவை இலகுவாக கிடைப்பதற்கும் ஏற்ற வகையில் விநியோக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக பல்வேறு கோணங்களில் ஆலோசித்து, அதற்கான திட்டமிடல்களை மேற்கொண்டிருந்தது.

உத்தேச நடைமுறைகள் தொடர்பாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை மாநகர முதல்வர் தலைமையிலான குழுவொன்று இரு தடவைகள் சந்தித்து, கலந்துரையாடியிருந்ததுடன் அவரது அனுமதி, ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டிருந்தது.

இதையடுத்து மாநகர முதல்வரும் பிரதேச செயலாளர்களும் தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக இவ்விசேட திட்டம் வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அனைத்துக் குடும்பங்களும் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் என்பவற்றை பெற்றுக் கொள்வதற்கான குடும்ப அட்டையும் அதனோடிணைந்ததாக வாகனங்களுக்கான எரிபொருள் கொள்வனவுக்காக விசேட அனுமதிப்பத்திரமும் (பாஸ்) கிராம சேவகர் ஊடாக தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சில இடங்களில் எரிவாயு விநியோகம் குளறுபடியின்றி சீராக முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

நீண்ட காலத்திற்கு பின்னர் நாட்டுக்கு லிட்ரோ எரிவாயு வந்திருப்பதையடுத்து கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் குடும்ப அட்டையின் பிரகாரம் எரிவாயுவை முறையாக விநியோகிப்பதற்கான ஒழுங்குகள் தொடர்பாக மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப், பிரதேச செயலாளர்களையும் லிட்ரோ நிறுவன பிராந்திய முகாமையாளர்களையும் மாநகர முதல்வர் செயலகத்திற்கு அழைத்து, கலந்துரையாடியிருந்தார். இதில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

அதேவேளை, கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சிபட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மண்ணெண்ணெய், பெற்றோல் மற்றும் டீசல் போன்றவை வந்ததும் இதே அடிப்படையில் குடும்ப அட்டை மற்றும் பாஸ் முறைமையின் கீழ் தேவையான ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாகனத்திற்கும் எரிபொருளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கு மேலதிகமாக கடற்றொழில், விவசாயம், கைத்தொழில்துறைகளுக்கும் உணவுப் பண்டங்கள் உற்பத்தியாளர்களுக்கும் தேவையானளவு மண்ணெண்ணெய், டீசல் போன்றவற்றை அந்தந்த திணைக்களங்களின் சிபார்சுகளுக்கேற்ப முறையாக விநியோகிப்பதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.