Wednesday, August 30, 2023

மாளிகைக்காடு மீனவர் சமாஜ அலுவலகம் விஷமிகளால் சேதம்.!

-ஏயெஸ் மெளலானா-

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச செயலக பிரிவிலுள்ள மாளிகைக்காடு கடற்கரை வீதியில் அமைந்துள்ள மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜ அலுவலகம் இனந்தெரியாத விஷமிகளினால் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அலுவலக கதவுகள், ஜன்னல்கள் முற்றாக சேதமடைந்திருப்பதுடன் கதிரைகள், மேசைகள் உள்ளிட்ட தளபாடங்களும் உடைந்து சேதமடைந்துள்ளன.

அத்துடன் அலுமாரிகளில் பூட்டி வைக்கப்பட்டிருந்த சமாஜத்திற்கான ஆவணங்களும் வெளியில் தூக்கி வீசப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தில் அமையப்பெற்றுள்ள குறித்த சமாஜ அலுவலகம் அண்மைக் காலமாக எவ்வித செயற்பாடுமின்றி பூட்டிய நிலையில் காணப்படுவதாகவும் இக்கட்டிடத் தொகுதியில் குற்றச்செயல்கள் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதேவேளை, இப்பிரதேசத்தில் இயங்கி வருகின்ற சில பொது அமைப்புகள் தமது செயற்பாடுகளுக்கு இக்கட்டிடத்தை ஒதுக்கித் தருமாறு கோரிக்கைகளை விடுத்திருந்தன.

எனினும் சமாஜ நிர்வாகத்தினர் இக்கட்டிடத்தை ஒப்படைக்க முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பொதுத் தேவைகளுக்கு பயன்படக்கூடிய இக்கட்டிடம் சேதப்படுத்தப்பட்டிருப்பது குறித்து இப்பகுதி மீனவர்களும் பொது அமைப்பினரும் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.




Monday, August 21, 2023

சாய்ந்தமருதில் கடலரிப்பை தடுக்க பைசல் காசிம் எம்.பி. அவசர நடவடிக்கை.!

-யூ.கே.காலித்தீன்- 

அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தின் ஹஸனாத் பள்ளிவாசலின் பின்புற கட்டடத் தொகுதியும் மதில்களும்  கடல் சீற்றத்தின் காரணமாக சேதமுற்று காவுகொள்ளப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் பைஸால் காசிமின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஓரிரு தினங்களில் உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

ஒலுவில் துறைமுகத்தின் நிர்மாணத்திற்கு பின்னராக ஏற்பட்ட கடலரிப்பினால், கடற்றொழிலை பிரதான ஜீவனோபாயமாக கொண்டு வாழும் கரையோர பிராந்திய மக்களின் வாழ்க்கை நிலை சொல்லொண்ணா துயரங்கள் நிறைந்ததாக மாறிவிட்டது. 

கடலரிப்பினை தடுப்பதற்கான தற்காலிக நடவடிக்கைகளை அரசும் மற்றும் திணைக்களங்களும் அவ்வப்போது செய்வது வழமை, இருந்த போதிலும் கடந்த காலங்களை விட தற்போது கடலரிப்பின் சீற்றம் மிக மோசமாக காணப்படுகின்றது.

சாய்ந்தமருது பிரதேசத்தில் கடலரிப்பின் வீரியம் அதிகரித்தமையை அடுத்து இன்று  திங்கட்கிழமை (21) மாலை கடலரிப்பின் வீரியம் காணப்படும் இடங்களில் ஜியோ பேக்குகளை இட்டு பாதிப்பினை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும், நிரந்தரத் தீர்வுக்கான திட்டத்தினை தயார் செய்யுமாறும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பிராந்திய பொறியியலாளர், கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரை தொடர்பினை ஏற்படுத்தி ஓரிரு தினங்களில் நிரந்தர தீர்வினை மேற்கொள்ள பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நடவடிக்கையினை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் அவர்களுக்கு சாய்ந்தமருது மீனவ சமூகமும் ஹஸனாத் பள்ளிவாசல் நிருவாகத்தினரும் நன்றியினை தெரிவிக்கின்றனர்.











கிழக்கில் காணி, நிர்வாகம், நிதி, பொலிஸ் அதிகாரம் பற்றிப் பேச வட்டமேசை மாநாடு அவசியம்.!

இனங்களிடையே புரிந்துணர்வு, நம்பிக்கை ஏற்படாத வரை 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவது சாத்தியமில்லை.!

ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த முன்மொழிவில் முஷாரப் எம்.பி. தெரிவிப்பு..!

-அஸ்லம் எஸ். மெளலானா-

இனங்களிடையே பரஸ்பரம் புரிந்துணர்வு, நம்பிக்கை ஏற்படாத வரை 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது சாத்தியமில்லை என்று திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்துள்ள அரசமைப்பின் 13 ஆவது திருத்த சட்டம் தொடர்பான தனது முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் காணி விநியோகம், அரச நிர்வாகம், நிதி மற்றும் பொலிஸ் அதிகாரம் தொடர்பாக கலந்துரையாடி, தீர்வுகளை எட்டுவதற்காக இம்மாகாணத்தை சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே வட்டமேசை மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு, அர்த்தமுள்ள கலந்துரையாடல்கள் இடம்பெற வேண்டும்.

அதிகாரப் பகிர்வை முன்னிறுத்தியே அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் அனைத்து சமூகத்தினரும் விட்டுக் கொடுப்புகளுடன் அர்ப்பணிப்புகளை செய்வதற்கு தயாராக வேண்டும்.

இன சமத்துவமும் தனிநபர் உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். மாகாண அரச நிர்வாக செயற்பாடுகளில் அனைத்து சமூகங்களினதும் வகிபாகங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

இனங்களிடையே புரிந்துணர்வின்மை, சந்தேகம், அவநம்பிக்கை மேலோங்கியிருக்கின்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்து மத, சமூக குழுக்களிடையேயும் பரஸ்பரம் புரிந்துணர்வு, நம்பிக்கை மற்றும் ஒற்றுமை கட்டியெழுப்பப்பட வேண்டும். 

அரசமைப்பின் 13 ஆவது திருத்த சட்டமானது, அர்த்தமுள்ள வகையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமாயின் முதலில் இவ்வாறான அடிப்படை விடயங்கள் நிறைவு செய்யப்படுவது அவசியமாகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தனது முன்மொழிவின் ஊடாக ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளார்.



Friday, August 18, 2023

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி அமைப்பின் சீருடை அறிமுக நிகழ்வு.!

-ஏ.எஸ்.மெளலானா, யூ.கே.காலிதீன்-

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் சீருடை அறிமுக நிகழ்வு வெள்ளிக்கிழமை (18) மாலை சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் சாய்ந்தமருது கிளையின் தலைவத் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். சலீம் தலைமையிலும் ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரான ஏ.எஸ். அஸ்வரின் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். நளிர், பேரவையின் மூத்த உலமா அஷ்செய்க் யூ.எல். அஸ்ரப் ஆகியோருடன் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்கள்,  உறுப்பினர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான யூ.கே. காலித்தீன் நன்றியுரை நிகழ்த்தினார்.

சீருடைக்கான அனுசரனையினை தனது மரணித்த தாயின் ஞாபகர்த்தமாக பொறியியளாளர் அலியார் சௌஃபர்  வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.











Wednesday, August 16, 2023

கல்முனைப் பிராந்திய ஆழ்கடல் மீனவர் நலன்கருதி தொலைத்தொடர்பு நிலையம் அமைக்க பைசால் காசிம் எம்.பி. நடவடிக்கை.!

-ஏயெஸ் மெளலானா-

கல்முனைப் பிராந்திய ஆழ்கடல் மீனவர்களின் நலன் கருதி தொலைத் தொடர்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கான வேலைத் திட்டத்தை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொருளாளருமான அல்ஹாஜ் பைசால் காசிம் மேற்கொண்டு வருகின்றார்.

2010 - 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடற்றொழில் அமைச்சராக ராஜித சேனாரத்ன எம்.பி. பதவி வகித்தபோது சாய்ந்தமருது பிரதேசத்தில் தொலைத்தொடர்பு நிலையமொன்று அமைக்கப்பட்டது. எனினும் அது சிறிது காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனைப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பைசால் காசிம் எம்.பி. அன்மையில் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பைசால் காசிம் எம்.பி. ஆகியோர் சந்தித்து இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர்.

இதையடுத்து இவர்கள் இருவருமாக கல்முனை பிராந்திய மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீரஞ்சனுடன் மேற்கொண்ட தொலைபேசிக் கலந்துரையாடலின் போது கல்முனைப் பிராந்தியத்தை மையப்படுத்தி தொலைத்தொடர்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கான திட்ட அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு தொலைத்தொடர்பு வசதி மிகவும் முக்கியத்துவமிக்க சாதனமாக கருதப்படுகிறது. ஆழ்கடல் மீனவர்களுடனான தொடர்பாடல்களுக்கும் கடலில் ஏற்படுகின்ற அனர்த்தங்களின் போது உயிரிழப்புக்களையும் படகு உள்ளிட்ட பொருள் சேதங்களையும் தவிர்த்து, பாதுகாப்பாக கரை திரும்புவதற்கும் தொலைத்தொடர்பு நிலையமே முக்கிய பங்காற்றுகிறது.

இவ்வாறு மிகவும் அவசியத் தேவையாக இருந்து வருகின்ற தொலைத்தொடர்பு நிலையம் இப்பிராந்தியத்தில் இல்லாதிருக்கும் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக நடவடிக்கை எடுத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களுக்கு கல்முனைப் பிராந்திய மீனவர்கள் நன்றியையும் பாராட்டையும் தெவித்துள்ளனர்.

Sunday, August 13, 2023

சாதனையாளர்களையும், வீரர்களையும் கௌரவித்த சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம்.!

நூருல் ஹுதா உமர்

கழக உறுப்பினர்களுக்கான பாராட்டு, சர்வதேச அளவில் சாதனை புரிந்த சிறுமிகளுக்கான கௌரவம், கடந்த வாரம் சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகத்தினால் சந்தேங்கனி மைதானத்தில் வைத்து பெறப்பட்ட பெஸ்ட் XI ரீ10 சம்பியன் மற்றும் KSC T10 இரண்டாம் நிலை வெற்றி கிண்ணங்களை பெற்ற சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழக வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இளம் வீரர்கள் மற்றும் கழகத்திற்கு இடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தல் வேலைத்திட்டமும் கழகத்தின் முகாமையாளர் எம்.எம். பஸ்மீரின் நெறிப்படுத்தலில் கழக தலைவர் எம்.பி.எம். பாஜில் தலைமையில் சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (11) இரவு நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கழகத்தினுடைய பிரதித்தலைவரான சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய பிரதியதிபராக இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற ஏ.எம்.ஏ. நிஸார், கழகத்தின் ஊடக செயலாளர் நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு பணிப்பாளர் சபை உறுப்பினராக கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டமையை பாராட்டி விஷேட கௌரவிப்பும் இடம்பெற்றது.

மேலும் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மற்றும் சர்வதேச அளவில் சாதனை புரிந்த சிறுமிகளுக்கான கௌரவமும் இடம்பெற்றது. 

இந்த கௌரவிப்பு நிகழ்வில் சாய்ந்தமருது பொது நிறுவனங்கள் சம்மேளன தலைவர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். பரீட் , சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினரும், தொழிலதிபருமான ஏ.எல். உதுமாலெப்பை, தொழிலதிபர் யூ.எல். சப்ரி, கழக செயலாளர் ஏ.சி.எம்.நிஸார், கழக நிர்வாகிகள், கழக வீரர்கள், சாதனை சிறுமிகளின் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.  

சாய்ந்தமருது பொது மைதானத்தில் இடம்பெற்ற நட்புறவு கிரிக்கட் போட்டியில் முதல்பாதி முடிவுற்ற நிலையில் மழை குறுக்கிட்டமையால் போட்டி கைவிடப்பட்டு இரு அணிகளையும் இணை சம்பியன்களாக அறிவிக்கப்பட்டு பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் இந்நிகழ்வில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.










சாய்ந்தமருதுக்கு பெருமை தேடித் கொடுத்த கலாசார மத்திய நிலைய மாணவர்கள்.!

-எம்.எஸ்.எம்.ஸாஹிர்-

கலாசார அலுவல்கள் அமைச்சினால் வருடம் தோறும் நடாத்தப்பட்டு வரும் பிரதீபா - 2023 போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. இதில் ஓர் அங்கமான மாகாண மட்டப் போட்டிகள் மட்டக்களப்பு பிள்ளையாரடி மகா வித்தியாலயத்தில் சனிக்கிழமை (12) இடம்பெற்றது.

இந்தப் போட்டிகளில் சுமார் 15 க்கு மேற்பட்ட மத்திய நிலையங்கள் பங்குபற்றியிருந்தன. அதில் முஸ்லிம் பிரிவில் சுமார் 07 மத்திய  நிலையங்கள் கலந்து கொண்டன.

இந்த மாகாண மட்டப் போட்டிகளில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையம் முதல் முறையாகக் கலந்து கொண்டு சிரேஷ்ட நிகழ்ச்சியான கோலாட்டம் போட்டியிலும் மற்றும் கனிஷ்ட நிகழ்ச்சியான ரபான், கோலாட்டம் போட்டியிலும் கலந்து கொண்டது.

இந்த இரண்டு பிரிவுகளில் கோலாட்டம் சிரேஷ்ட நிகழ்ச்சியில் 83 புள்ளிகளைப் பெற்று சாய்ந்தமருது வரலாற்றில் முதலாவதாகக் கலந்து கொண்ட போட்டியிலேயே முதல் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு சாய்ந்தமருதுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வரலாற்றுச் சாதனை படைந்துள்ளனர்

அதேபோல் மற்றுமொரு சாதனையாக கனிஷ்ட பிரிவு போட்டியில் ரபான் கோலாட்டம் 73 புள்ளிகளோடு இரண்டாமிடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டது.

இது சாய்ந்தமருது வரலாற்றில் பாரியதொரு வெற்றியாகும். ஏனெனில், சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையம் திறந்து எட்டு மாத காலப்பகுதியில் மிக நீண்ட காலமாக செயற்பட்டு வந்த மத்திய நிலையங்களை வீழ்த்தி இவ்வெற்றிச் சாதனையை நிலை நாட்டியுள்ளனர்.

இந்த வெற்றியில் கலந்து கொண்ட கோலாட்ட பிரிவு மாணவர்களான எம்.எப்.எம்.றிஹ்பத், ஏ.ஜீ.எம்.ஆஸிப், என்.ஹம்தி, என்.எம்.இஷாம், ஜே.எம்.றிப்காஸ், என்.நப்ரின், ஜே.எம்.ஷாபீத், என்.எம்.அல்தாப், ஏ.எம்.எம்.நுஸ்கி, என்.எம்.எம்.றுக்ஸான், ஏ.எம்.அஸ்ரி, ஏ.எம்.ஹபீஸ், ஜே.எம்.ஜகி, ஏ.எம்.எம். அர்ஷிக், எப்.எம்.ஹசீன், எஸ்.எம்.சௌஸான், எச்.எம்.அப்ரத், ஜே.எம்.சஹ்ரான், என்.ரீ.எம்.அஸ்ரிப் மற்றும் ரபான் கோலாட்ட பிரிவு மாணவர்களான ஜே.எம்.ஜரிஹ், எம்.எப்.எம். அஸ்பல், எம்.எப்.எம்.பஹட் , ஏ.ஆர்.எம்.சப்கி, என்.அமைத் அஹமட், எஸ்.எம்.ஏ.மஹ்தி, எம்.ஆர். இஸ்ஸத், எம்.ஐ.எம்.அபான், எஸ்.எம். ஆதிப், எம்.பிஸ்மில்லாஹ், எம்.ஏ.எம்.அப்துல் ஹாதி, எப்.எம்.பர்ஹான், ஆர்.ஏ.எம்.அஹ்னாப் மற்றும் கலாசார மத்திய நிலையத்தில் இம் மாணவர்களைப் பயிற்றுவித்த வளவாளர்களான எம்.ஐ.எம். அமீர் (ஆசிரியர்), எம்.ஐ. அலாவுதீன்(மூத்த கலைஞர்), எம்.எச். பைசர் (மூத்த கலைஞர்), ஏ.எல்.எம். சாஜி (ஆசிரியர்) மற்றும் எஸ்.எச்.ஏ. கபூர் (வாத்தியம்) மற்றும் கலாசார மத்திய நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி. நௌசாத் ஆகியோர் உட்பட வெற்றிக்காகப் பங்குபற்றி பாடுபட்ட அனைவருக்கும் கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி திரு.யூ.கே.எம். றிம்ஸான் வாழ்த்துக்களோடு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

சாய்ந்தமருதில் நீண்ட காலமாக கலாசார நிகழ்வுகள் தொடராக நடந்து வருகிறது. இருந்த போதிலும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில், சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தை வைபவ ரீதியாக இன்னும் திறக்கப்படாத நிலையில் இவ்வெற்றி கிடைத்தமை சவாலானதொரு விடயம்.  இதேவேளை இவ்வெற்றிக்காக முழுமூச்சாகவும் பக்க பலமாகவும் இருந்து மாணவர்கள் மத்தியில் இரவு-பகல் பாராது அயராது செயற்பட்டு இவ்வெற்றிக்கு காரணகர்த்தாவாகவும் உந்து சக்தியாகவும் அமைந்த நிலையப் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான், இதற்கு பின்புலமாக இருந்து  செயற்பட்ட சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் மற்றும் இம்மாணவர்களை போட்டியில் பங்குபற்ற அனுமதி வழங்கிய அதிபர்களுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நன்றி தெவித்தார்.

அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் இஸ்லாமிய துறைக்கான பயிலுனர் எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு.!

-ஏயெஸ் மெளலானா-

முஸ்லிம் மாணவர்களுக்கு அநீதியிழைக்கும் வகையில் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் இஸ்லாம் பாடநெறிக்கு 20 பயிலுனர்களை மாத்திரம் சேர்த்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் தனது முயற்சி காரணமாக கல்வி அமைச்சரின் தலையீட்டினால் 60 பேரை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்;

2019 மற்றும் 2020 ஆண்டுகளுக்குரிய க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு ஆசிரியப் பயிற்சிக்காக பயிலுனர்களை சேர்ப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 2023.07.22 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.

அதில் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரிக்கு இஸ்லாம் பாடநெறிப் பயிற்சிக்காக 20 மாணவர்கள் அனுமதிக்கப்படவிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் வருடாந்தம் 25 - 30 மாணவர்கள் உள்வாங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இரண்டு வருடத்திற்குமாக மொத்தம் 20 மாணவர்களை மாத்திரம்  அனுமதிப்பதானது பெரும் அநீதியான விடயம் என்பதை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவை சந்தித்து சுட்டிக்காட்டியதுடன் இவ் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு வலியுறுத்தினேன்.

இதனை ஏற்றுக்கொண்ட கல்வி அமைச்சர், இரண்டு வருடங்களுக்குமாக 60 மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

எனினும் குறித்த 60 மாணவர்களையும் வெவ்வேறு கல்விக் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்வதற்கு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அறியக் கிடைத்தது. அதனால் மீண்டுமொரு தடவை கல்வி அமைச்சரை சந்தித்து, நிலைமையை விபரித்ததையடுத்து 60 பேரையும் அட்டாளைச்சேனை தேசிய கல்வி கல்லூரியில் சேர்த்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் மாணவர்களுக்கு இழைக்கப்படவிருந்த பாரிய அநீதியை களைவதற்காக உறுதியான தீர்மானங்களை மேற்கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோருக்கும் தனது முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரபுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பைசல் காசிம் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி நிர்வாகத்தில் ஒரு தசாப்தமும் கல்முனை மாநகராட்சி ஆணையாளராக ஒரு வருடத்தையும் பூர்த்தி செய்யும் ஏ.எல்.எம். அஸ்மி.!


இலங்கை நிர்வாக சேவையின் மூத்த SLAS அதிகாரியான ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் கல்முனை மாநகராட்சி ஆணையாளராக ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ளார்.

அம்பாரை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட ஏ.எல்.எம். அஸ்மி, சிரேஷ்ட சட்டத்தரணி ஆதம்லெப்பையின் மகனாவார்.

ஆரம்ப கல்வியை பொத்துவில் மத்திய கல்லூரியிலும், உயர்கல்வியை தலைநகரிலும் கற்று, பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாகத் துறையில் இளமானி பட்டத்தினையும், பொருளியல் துறையில் முதுமானிப் பட்டத்தினையும் பூர்த்தி செய்துள்ளார்.

வங்கி உத்தியோகத்தராக அரச சேவைக்குள் நுழைந்து பின்னர் இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு, பொத்துவில், அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளராகவும், அக்கரைப்பற்று மாநகராட்சி ஆணையாளராகவும், கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளரும், பதிவாளருமாகவும் கடமையாற்றியதோடு தற்போது கல்முனை மாநகராட்சி ஆணையாளராக கடமையாற்றி வருகிறார்.

ஏ.எல்.எம். அஸ்மி அவர்கள் ஒரு சிறந்த நிர்வாகி, இலங்கை நிர்வாக சேவையில் 20 வருடங்கள் கடந்து பயனிக்கும் இவர் அரச கடமையினை சட்ட விதிமுறைகளை பேணி தான் எடுத்த உறுதி மற்றும் சத்திய உரை என்பவற்றுக்கு ஏற்ப நேர்மையாக  செய்துவரும் ஒருவராவார்.

அஸ்மியின் சேவைத் தரம், தகுதி மற்றும் உள்ளூராட்சி சேவை அனுபவம் என்பவற்றின் அடிப்படையில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக பதவி வகிக்க வேண்டிய ஒருவர்.

ஆயினும் மாகாண அதிகார பரவலாக்கத்தில் இன்னும் ஒரு சிங்கமான கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளராக பதவி வகித்து கூட்டுறவுத் துறையை பிரகாசிக்கச் செய்தவர் என்ற அடிப்படையிலும் உள்ளூராட்சி நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு வழங்கி வந்த தலைமைத்துவ வழிகாட்டுதல்கள், நிர்வாக மற்றும் முகாமைத்துவ செயற்பாட்டு திறமைகள் என்பவற்றை கருத்திற் கொண்டும் கல்முனை மாநகராட்சி ஆணையாளராக 12 ஆகஸ்ட் 2022 ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டார்.

மும்மொழி புலமைமிக்கவரான அஸ்மி, 10 வருடங்கள் உள்ளுராட்சி மன்ற அனுபவத்தில் திளைத்து கிழக்கு மாகாணத்தில் ஒரு சிறந்த உள்ளூராட்சி மன்றமாக அக்கரைப்பற்று மாநகர சபையை மிளிரச் செய்வதற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றியதோடு கல்முனை மாநகர சபையையும் மிகக் குறுகிய காலத்தில் கட்டியெழுப்பியுள்ளார்.

கல்முனை மாநகர சபையில் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட புதிய வரி செலுத்தும் கருமபீடம் அடுத்த வாரம் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. முறைப்பாடுகளை தெரிவிக்கும் முறைமையும் அறிமுகமாகிறது.

கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தில் உள்ள முஸ்லிம் இலங்கை நிர்வாக சேவை சிரேஷ்ட வரிசையில் முதலாமவராக ஏ. மன்சூரும், இரண்டாவதாக திருமதி ஆர்.யு. அப்துல் ஜெலீலும், மூன்றாமவராக எம்.எம். நஸீரும், நான்காம் இடத்தில் ஏ.எல்.எம். அஸ்மியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

✍️ஜபீர் ஷரிபுடீன்

Thursday, August 10, 2023

இளைஞர், யுவதிகளுக்கான முதலுதவி பயிற்சிப் பட்டறை.!


-சாய்ந்தமருது செய்தியாளர்-

மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீ லங்கா ற்றும் வை.எம்.எம்.ஏ. அமைப்பின் மாவடிப்பள்ளி கிளையின் ஏற்பாட்டிலும் டைடன் ஆசியன் கல்வி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பிலும் இளைஞர், யுவதிகளுக்கான முதலுதவி பயிற்சிப் பட்டறையொன்று நேற்று புதன்கிழமை (09) புனித சென்ஜோன்ஸ் முதலுதவி படைப்பிரிவின் அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது.

மனித மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளரும் வை.எம்.எம்.ஏ. அமைப்பின் மாவடிப்பள்ளி கிளையின் தலைவரும் சென்ஜோன்ஸ் படைப் பிரிவின் கல்முனை கோட்ட அத்தியட்சகருமான எஸ்.ஏ. முஹம்மட் அஸ்லம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சென்ஜோன்ஸ் படைப்பிரிவின் ஆணையாளர் கெப்டன். எம். டி. நௌசாத் வபியினால் முதலுதவி பயிற்சிகள் வழங்கப்பட்டது.

நிகழ்வின் இறுதியாக பங்குபற்றிய இளைஞர் யுவதிகளுக்கு முதலுதவி சம்பந்தமான எழுத்து மூல மற்றும் செயன்முறை பரீட்சைகளும் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் டைடன் ஆசியன் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர்  என். கோகுளதாசன், நிறுவனத்தின் தலைவர் ஏ.ஆர்.எம். சர்ஜூன், தலைமை நிர்வாக அதிகாரி ஏ.ஏ.ஏ. அப்ரி, சென்ஜோன்ஸ் படைப்பிரிவின் சம்மாந்துறை கோட்ட அத்தியட்சகர் எம்.ஹுசைன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.