Sunday, November 5, 2023

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் புதிய நிர்வாகிகள்.!

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி  உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டம் நேற்று (04) மட்டக்களப்பு பலநோக்கு கூட்டுறவு சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

சங்கத்தின் தலைவர் பி.நந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த பொதுச்சபைக் கூட்டத்தில் மட்டக்களப்பு, கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலக கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, தொழிற்சங்கத்தினால் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் பற்றிய விடயங்கள் பேசப்பட்டதையடுத்து புதிய நிருவாகத் தேர்வும் இடம்பெற்றது.

இதன்போது பின்வரும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நிருவாக சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

தலைவராக ஏ.எல்.எம். பாறூக், செயலாளராக பி.ரி. ஆதம்பாவா, பொருளாளராக கே. சசிதரன், உப தலைவராக எஸ். ஜாபீர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

நிருவாக சபை உறுப்பினர்களாக பி. தியாகராஜா, எச்.எம்.கே. ரஹ்மான், ஏ.அமலராஜா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். 

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி  உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் நிருவாகத்தின் ஆயுட்காலம் 3 வருடங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Thursday, November 2, 2023

கல்முனை மாநகர சபை பட்ஜெட்டுக்கு சந்தை வர்த்தகர் சங்கத்தினால் முன்மொழிவு சமர்ப்பிப்பு.!

-ஏயெஸ் மெளலானா-

கல்முனை மாநகர சபையின் 2024ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கு கல்முனை மாநகர பொதுச் சந்தை அபிவிருத்தியை மையப்படுத்தி, சந்தை வர்த்தகர் சங்கம் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது.

சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.கபீர் தலைமையில் அதன் நிர்வாகக் குழுவினர், மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்களை சந்தித்து, இதனைக் கையளித்துள்ளனர்.

40 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கல்முனை மாநகர பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதி தற்போது மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்ற போதிலும் இச்சந்தை வியாபாரிகள் மூலம் வாடகை மற்றும் வரிப் பணமாக வருடாந்தம் சுமார் 02 கோடி ரூபாவுக்கு மேல், மாநகர சபைக்கு வருமானம் கிடைக்கிறது.

இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் குறித்த வருமானத்தில் 25 வீதமான பணத்தையேனும் இச்சந்தையின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துமாறு தமது முன்மொழிவில் கோரப்பட்டிருப்பதாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல். கபீர் தெரிவித்தார்.