Friday, July 30, 2021

வீராப்பு வசனங்களைப் பேசி தமிழ், முஸ்லிம் எனும் தமிழ் பேசும் உறவை சீர்குலைக்க முயற்சிக்காதீர்கள்..!


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சிறுமி ஷாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும், ஆனால், சமூக ஊடகங்களில் வீராப்பு வசனங்களை பேசி தமிழ், முஸ்லிம் என்னும்
தமிழ் பேசும் உறவை சீர்குலைக்க முயற்சிக்காதீர்கள் என ஜனனம் அறக்கட்டளை தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான கலாநிதி வினாயகமூர்த்தி ஜனகன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

சிறுமி ஷாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் நூறுவீதம் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அது அரசியல் கடந்த ஒரு நீதி சார்ந்த விடயம். அதற்காக வேண்டி என்னுடைய ஜனனம் அறக்கட்டளை ஊடாக சிறுமியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமான உதவிகளை ஜனநாயக அடிப்படையில் மேற்கொள்ளவும் தாங்கள் தயாராக உள்ளோம்.

ஆனால், தற்போது பார்க்கப் போனால் சமூக வலைதளங்களை திறந்தாலே இச்சிறுமியின் விவகாரத்தை வைத்து இரு தரப்பினரும் மாறி மாறி அரசியல் செய்வதை தெளிவாக காணக்கூடியதாக இருக்கின்றது.

இலங்கை திருநாட்டை பொருத்தமட்டில் மதங்களால் தமிழ், முஸ்லிம் என்று வேறுபட்டாலும் மொழியினால் தமிழ், முஸ்லிம்
ஆகிய சமூகங்கள் ஒன்றாக பிணைந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இரு சமூகங்களுக்கிடையில் பாரிய தொப்புள்கொடி உறவு இருக்கிறது. இந்த விவகாரத்தை வைத்து சமூக ஊடகங்களில் தனிப்பட்ட காரணங்களுக்காக இதை அரசியல் மயமாக்கி தமிழ், முஸ்லிம் உறவை சீர்குலைக்க தயவுசெய்து முயற்சிக்க வேண்டாம் என்று சமூக ஊடகங்களில் வீராப்பு வசனம் பேசி கொள்பவர்களிடம் மிகப் பணிவாக வேண்டிக் கொள்ள விரும்புகிறேன்.

இந்தச் சிறுமியின் விவகாரமானது தமிழ், முஸ்லிம், சிங்களம் என்பதைத் தாண்டி அப்பாவி சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாங்களும் நீங்களும் குரல் கொடுக்க வேண்டுமே தவிர தனிப்பட்ட அபிலாஷைகளுக்காகவும் அரசியல் நோக்கங்களுகாகவும் உங்கள் குரல்களை சமூக ஊடகங்களில் எழுப்புவதை சற்று சிந்தித்துப் செயற்படுங்கள்.

இவ்வாறான ஒரு செயற்பாடு தொடர்ந்து சென்றால் தமிழ், முஸ்லிம் உறவுகளுக்கு இடையிலே அதிக விரிசலை ஏற்படுத்தும் என்ற சந்தேகம் ஒன்று என்னுள் தோன்றுகிறது.

இந்தச் சிறுமி மாத்திரமல்ல, இனிவரும் காலங்களில் எந்தச் சிறுமிக்கும் இவ்வாறான நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக, நாங்கள் இனம், மதம் கடந்து ஒன்று சேர வேண்டும் என்பதை உங்களிடம் கூறிகொள்ள விரும்புகிறேன்.

எதிர்காலத்தில் குறிப்பாக என்னுடைய ஜனனம் அறக்கட்டளையின் ஊடாக சிறுவர், சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்படுவது தொடர்பிலான விழிப்புணர்வு செயற்றிட்டங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாகவும், நேரடியாகவும் மேற்கொள்ள இருக்கின்றோம்.

தற்போது இச் சம்பவத்துக்கு பிற்பாடு கொழும்பு மாவட்டத்தில்
மலையகத்திலிருந்து வீட்டு வேலைக்கு வந்து வேலை செய்கின்றவர்கள் சிலர் திருப்பி அனுப்பப் படுவதாக சமூக ஊடகங்கள் ஊடாக அறிகின்றோம்

இது ஒரு பண்பற்ற செயல் என்பதையும் சொல்லிக் காட்ட விரும்புகின்றேன்.

ஆனால், இவர்களுக்கான ஒரு சிறந்த தீர்வாக சிறுவர்கள் அல்லாமல் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுகின்றவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றின் ஊடாக இவ் வேலை சார்ந்த துறையில் பயிற்றுவிக்கப்பட்டு, நிறுவனத்தின் ஊடாக, நிறுவனத்தின் கண்காணிப்பின் கீழ் வேலைக்கு அமர்த்தப்பட்டால் இவ்வாறான ஒரு பிரச்சினைக்கு தீர்வை காணலாம்.

இந்த விடயத்துக்கு எங்களுடைய கல்வி நிறுவனமும் முன் வர தயாராக உள்ளது என்பதையும் குறிப்பிட்டு கொள்ள விரும்புகிறோம்.

அதுமாத்திரமல்ல, இன்றைய சிறுவர்கள், இளைஞர்கள் குறிப்பாக போதைவஸ்துக்கு அடிமையாகி, வாழ்க்கையை சீரழிப்பதையும் சமூக ஊடகங்களுக்கு முன் கொண்டுவந்து, அதற்கு ஒரு திறந்த தீர்வுத் திட்டத்தினையும் மேற்கொள்ள சமூக ஊடக ஆர்வலர்கள் முன்வர வேண்டும் என்பதையே நான் எதிர்பார்க்கிறேன்.

அதை விட்டு விட்டு வெறுமனே சமூக வலைதளங்களில் வீராப்பு பேசிக்கொண்டு வீடுகளில் இருப்பதை நான் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Saturday, July 24, 2021

கல்முனை சந்தையில் சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக அமுல்; வர்த்தகர் சங்கத்தின் முன்மாதிரியான செயற்பாடு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கிழக்கு மாகாணத்தில் மிகப்பெரும் பொருளாதார மையமாகத் திகழ்கின்ற கல்முனை மாநகர பொதுச் சந்தையில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார நடைமுறைகளை இப்பொதுச் சந்தை வர்த்தகர் சங்கம் மிகவும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.

கல்முனை மாநகர சபை மற்றும் சுகாதாரத்துறையினரின் ஆலோசனை, வழிகாட்டலில் சங்கத்தின் தலைவர் ஏ.பி.ஜமால்தீன் ஹாஜியார், செயலாளர் ஏ.எல்.கபீர், பொருளாளர் யூசுப் ஹாஜியார் ஆகியோர் இச்சந்தையில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார செயற்பாடுகளை நெறிப்படுத்தி வருகின்றனர்.

பொதுச் சந்தையின் பிரதான நுழைவாயிலில் சுகாதார அறிவுறுத்தல்கள் பொறிக்கப்பட்ட பாரிய பதாகை அமைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் அங்கு பல இடங்களிலும் கை கழுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேவேளை முகக்கவசம் அணிந்து வரத் தவறுகின்ற பொது மக்களுக்கு அவற்றை வர்த்தகர் சங்கத்தினர் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

மேலும், சந்தையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் சமூக இடைவெளியை உறுதிப்படுத்துவதிலும் சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் அவர்களை வழிப்படுத்துவதிலும் வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.



Monday, July 19, 2021

தரம்பிரிக்கப்படாத குப்பைகளை பள்ளக்காட்டில் கொட்டத் தடை; கல்முனை மாநகர சபையினால் புதிய நடைமுறை அமுல்; தரம்பிரிக்கப்படாத குப்பைகள் பொறுப்பேற்கப்பட மாட்டாது என அறிவிப்பு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபை எல்லையினுள் முன்னெடுக்கப்படும் திண்மக் கழிவுகற்றல் சேவையின்போது தரம்பிரிக்கப்பட்ட குப்பைகள் மாத்திரமே பொறுப்பேற்கப்படும் என கல்முனை மாநகர சபை அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் பணிப்புரைக்கமைவாக அட்டாளைச்சேனை, பள்ளக்காடு பகுதியில் தரம்பிரிக்கப்படாத குப்பைகளைக் கொட்டுவததற்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தடையைக் கவனத்தில் கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர் இன்று (19) வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

கல்முனை மாநகர சபை எல்லையினுள் சேகரிக்கப்படுகின்ற திண்மக்கழிவுகளை கொட்டுவதற்கென இடமொன்று (Dumping Place) எமது கல்முனை மாநகர எல்லையினுள் இல்லாமையினால், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பள்ளக்காடு எனும் பகுதியிலுள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலபரப்பிலேயே அவை கொட்டப்பட்டு வருகின்றன. இதற்காக எமது மாநகர சபையினால் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு கழிவுகளின் நிறைக்கேற்ப கட்டணம் செலுத்தப்பட்டு வருகின்றது.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் தேசிய கொள்கைத் திட்டத்தின் பிரகாரம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் கட்டாய அறிவுறுத்தலுக்கமைவாக தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் மாத்திரமே குறித்த திண்மக்கழிவு முகாமைத்துவ நில நிரப்புகை நிலையத்தில் கொட்டுவதற்கு அனுமதிக்கப்படும் என அட்டாளைச்சேனை பிரதேச சபை எமது மாநகர சபைக்கு அறிவித்திருப்பதுடன் தரம்பிரிக்கப்படாத குப்பைகள் கொட்ட அனுமதிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்து, தடை விதித்துள்ளது.

இதனால் கடந்த சில நாட்களாக எமது மாநகர பிரதேசங்களில் சேகரிக்கப்படுகின்ற திண்மக்கழிவுகளை கொட்டுவதில் எமது மாநகர சபை பாரிய சவாலை எதிர்நோக்கி வருகின்றது.

ஆகையினால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், பொது மக்கள் தமது வீடுகளில் சேர்கின்ற சமையலறைக் கழிவுகள், உணவுக் கழிவுகள், மரக்கறி, இலை, குலைகள் போன்ற உக்கக்கூடிய கழிவுகளை ஒரு பையிலும் பிளாஸ்டிக், பொலித்தீன், டின்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்பட்டு, கழிக்கப்படுகின்ற உக்க முடியாத பொருட்களை மற்றொரு பையிலும் வெவ்வேறாக ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாறு தரம் பிரிக்கப்படாத குப்பைகள் எக்காரணம் கொண்டும் மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் வாகனங்களில் பொறுப்பேற்கப்பட மாட்டாது என்பதை வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.

எனவே, கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பொது மக்கள் அனைவரும் நிலைமையை உணர்ந்து, திண்மக்கழிவகற்றல் சேவையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு மேற்படி நடைமுறையை கட்டாயம் பின்பற்றி, முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்- என கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



Wednesday, July 7, 2021

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பஷில் ராஜபக்ஷவே; அதனை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்கிறார் பதவி துறந்த கெட்டகொட..!


அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவை நிச்சயம் நிறுத்துவேன் என அவருக்காக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த ஜயந்த கெட்டகொட தெரிவித்துள்ளார்.

பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்காகவே நான் பதவியை இராஜினாமா செய்துள்ளேன்.

பஷில் ராஜபக்ஷ விரைவில் நிதி அமைச்சராகப் பதவியேற்பார். அடுத்த ஜனாதிபதி வேட்பாளரும் அவரே. அதற்காக நான் முன்னின்று உழைப்பேன்- என கெட்டகொட மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் தற்காலிக ஊழியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம்..!

உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 8 ஆயிரம் ஊழியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனக்கும் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. அவர் நிதியமைச்சர் என்ற ரீதியில் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முன்மொழிவை சமர்ப்பிப்பார் என்றும் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் குறிப்பிட்டார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்  அமைச்சரவைக் கூட்டத்தில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.