Thursday, June 27, 2024

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் வாசிகசாலை அமைக்க ஏற்பாடு; புத்தகங்களை அன்பளிப்புச் செய்யுமாறும் வேண்டுகோள்.!

-அஸ்லம் எஸ்.மெளலானா-

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் விரைவில் வாசிகசாலை ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிலையத்தின் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் தெரிவித்தார். 

இதற்காக புத்தகங்களை அன்பளிப்பு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

இந்த வாசிகசாலையை கலாசார மத்திய நிலைய மாணவர்களுடன் பாடசாலை மாணவ, மாணவிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள் என சகல தரப்பினரும் பயன்படுத்த முடியும்.

இலங்கை தேசிய  நூலகம் 2024 ஆம் ஆண்டுக்கான ஒக்டோபர் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு "உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே" என்ற கருத்திட்டத்திற்கு அமைவாக கலாசார மத்திய நிலையங்களின் வாசிகசாலைகளை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கு அமைவாகவே சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்திலும் வாசிகசாலை ஒன்றை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதற்காக புத்தக சேகரிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டின் எப்பாகத்திலும் உள்ள எழுத்தாளர்கள், கலை, இலக்கியவாதிகள் மற்றும் நலன் விரும்பிகள் இந்த வாசிகசாலைக்கு புத்தகங்களை அன்பளிப்புச் செய்யுமாறு வேண்டுகின்றோம்.

புத்தகங்களை அன்பளிப்புச் செய்ய விரும்புவோர் 077 758 0663 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும் என்பதுடன் நிலையைப் பொறுப்பதிகாரி, கலாசார மத்திய நிலையம், பொலிவேரியன் கிராமம், சாய்ந்தமருது - 16 எனும் முகவரிக்கு புத்தகங்களை அனுப்பி வைக்க முடியும்.

அதேவேளை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளும் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.



Tuesday, June 25, 2024

சாய்ந்தமருது ஹிஜ்ரா பள்ளிவாசல் மத்ரஸாவில் ஹிப்ளு பிரிவு ஆரம்பம்.!

-அஸ்லம் எஸ். மெளலானா-

சாய்ந்தமருது பொலிவேரியன் ஹிஜ்ரா பள்ளிவாசலில் இயங்கி வருகின்ற அல்குர்ஆன் மதரஸாவில் குர்ஆனை மனனமிடும் ஹிப்ளு மற்றும் ஷரீஆ பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவரும் முன்னாள் பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம். சலீம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இந்த மத்ரஸாவில் இணைந்து கொண்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பள்ளிவாசல் இமாம் மற்றும் நிருவாக சபை உறுப்பபினர்களும் நலன் விரும்பிகளும் பங்கேற்றிருந்தனர்.

இங்கு அல்குர்ஆனை பார்த்து ஓதுதலுக்கு மேலதிகமாக அல்குர்ஆனை மனனமிடுதல் மற்றும் ஷரீஆ வகுப்புக்களும் இடம்பெறவுள்ளதாக ஹிஜ்ரா பள்ளிவாசல் தலைவர் ஏ.எல்.எம். சலீம் தெரிவித்துள்ளார்.

நாளை புதன்கிழமை முதல் இவ்வகுப்புகள் நடைபெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஹிஜ்ரா பள்ளிவாசலானது கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தினால் சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் காவு கொள்ளப்பட்டு உயிர் நீத்த சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட  சுகதாக்களின் நினைவாக உருவாக்கப்பட்ட சுனாமி மீள்குடியேற்ற கிராமமான பொலிவேரியன் கிராமத்தில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







நைட்டாவின் தீயணைப்பு துறைசார் கற்கையை பூர்த்தி செய்தார் கே.எம். றூமி.!

கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படை உத்தியோகத்தர் கே.எம். றூமி அவர்கள் நைட்டா நிறுவனத்தால் நடாத்தப்பட்ட தீயணைப்பு துறைசார் NVQ Level-4 கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்து, அதற்கான சான்றிதழை பெற்றுள்ளார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள நைட்டா நிறுவனத் தலைமையகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவில் நிறுவனத் தலைவரினால் இவருக்கான சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

இவர் இதற்கு முன்னரும் தீயணைப்பு துறைசார் தொடர்பில் பல்வேறு நிறுவனங்களின் கற்கைகளையும் பயிற்சிகளையும் சிறப்பாக பூர்த்தி செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.









Wednesday, June 19, 2024

முஷாரப் எம்பியின் தொடர் முயற்சியினால் பொத்துவில் முகுதுமகா பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு.!

- செயிட் ஆஷிப், கே எ ஹமீட் -

75 வருடகால  பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்த முகுதுமகா விகாரை மற்றும் மண்மலை  தொடர்பான வர்த்தமானிக்குப் பணிந்து அங்கு தொடர வேண்டிய பணிகள் குறித்த கூட்டம் நேற்று (2024.06.18) நகர அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. SMM முஷாரப் அவர்கள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், பௌதீக திட்டமிடல் திணைக்கள அதிகாரிகள், கடற்படையின் கட்டளை தளபதிகள், அம்பாறை மாவட்ட தொல்பொருள் உத்தியோகத்தர்கள், பொத்துவில் பிரதேச செயலாளர், புத்த சாசன அமைச்சின் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்தும் பணியின் தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்பு நிலங்களில் உள்ள எல்லை கற்களை அகற்றுதல், குறித்த வர்த்தமானியிலிருந்து மையவாடியை விடுவித்தல், எதிர்காலத்தில் வீதியில் சேரும் மண்ணை இடையூறின்றி அகற்றுவற்கான அனுமதியை CCD க்கு வழங்குதல், கடற்படை உத்தியோகத்தர்கள் இங்குள்ள பிக்குகளின் அழுத்தமின்றி சுதந்திரமாக பணிபுரிதல்  என்பன குறித்து கூட்டத்தில் திட்டமிடப்பட்டன.

இவ்வர்த்தமானி குறித்து ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த  பல வழக்குகள் முஷாரப் எம்பி யின் முயற்சியால் வாபஸ்‌ பெறப்பட்டிருக்கின்ற அதேவேளை, அங்குள்ள சிறிய பிக்குவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு வர்த்தமானிக்குப் புறம்பாக பிழையான தகவல்களை கொண்டுருப்பதால் அதனை விரைவாக முடிவுறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.



சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பதவி உயர்வு; முஷாரப் எம்.பியினால் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை.!

2005 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் SMM. முஷாரப் அவர்கள் இன்று (2024-06-19) சமர்ப்பித்திருந்தார். 

குறித்த பிரேரணையில், 

2005 ஆம் ஆண்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட பட்டதாரிகள் இதுவரை எந்த பதவியுயர்வுகளும் இன்றி தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். 

அபிவிருத்தி துறையில் 20 வருட அனுபவமும் தேர்ச்சியும் பெற்றிருக்கின்ற குறித்த உத்தியோகத்தர்களை, விசேட பரீட்சை ஒன்றின் மூலம் திட்டமிடல் சேவைக்குள் உள்வாங்குமாறும், இந்த உத்தியோகத்தர்களுக்கு முதலாம் தரத்திற்கு மேல் தொடர்ந்து பதவியுயர்வுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரை முஷாரப் எம்பி அவர்கள் கோரியிருக்கிறார்.  

இதற்கு முன்னரும் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்கள் வெவ்வேறான மூன்று சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைகளை  சமரப்பித்திருக்கிறார். 

1985 இற்கு முன்னார் விவசாய நிலங்களாக இருந்து போர்காலத்தில் கைவிடப்பட்ட காணிகளை வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களங்கள் அபகரித்து வைத்துள்ளது. இவ்வாறு காணிகளை இழந்த விவசாயிகளுக்கு, ஜனாதிபதியின் விசேட உத்தரவின் பேரில் குறித்த காணிகளை விவசாயச் செய்கைக்காக விடுவித்து வழங்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்கள் தனது முதலாவது சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சில மாதங்ளுக்கு முன்னர் சமர்ப்பித்திருந்தார். 

அப்பிரேரணையின் பலனாக கிழக்கு மாகணத்தில் சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளை, விடுவிப்புச் செய்யப்படுவதற்கான பணிகள் தற்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அவை இன்னும் சில வாரங்களில் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட இருக்கின்றன. 

அதேபோன்று அம்பாறை மாவட்டத்தில் கரும்புச் செய்கைக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான மாற்று நிலம் அதன் உரிமையாளர்களுக்கு வழங்கப்படாமை, தொடர்ச்சியாக கரும்புச் செய்கை நட்டத்தில் இயங்குகின்றமை, மாற்று பயிர்செய்கைக்கு மாறுவதற்கு கம்பனி அனுமதிக்காமை உள்ளிட்ட பல விடயங்களை மையப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்கள் தனது இரண்டாவது ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்தார். அதன் பலனாக கரும்புச் செய்கையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கும் நடவடிக்கைகளும் தற்போது இடம்பெற்று வருகின்றன. 

மூன்றாவது பிரேரணையாக, யுத்த காலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவிய பகுதிகளில் சிவில் பாதுகாப்பு பிரிவின் கீழ் ஆசிரியப் பணிக்காக இணைக்கப்பட்டவர்கள், 15-20 வருடங்களுக்கும் மேலாக ஆசிரியர்களாக  பணியாற்றி வருகின்ற போதிலும் அவர்களின் நியமனம் இதுவரை கல்வயமைச்சின் கீழ் கொண்டுவரப்படவில்லை. 

இதனைச் சுட்டிக்காட்டி அவர்களை கல்வியமைச்சின் கீழ் ஆசிரியர்களாக நியமிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்கள் ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றையும் சமர்ப்பித்திருந்தார். அப்பிரேரணை இப்போது பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. வெகுவிரைவில் அவ் உத்தியோகத்தர்கள், கல்வியமைச்சின் கீழ் ஆசிரியர்களாக நியமனம் பெற உள்ளார்கள். 

2020 இல் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாண எம்பிக்களுள் முஷாரப் எம்பி தவிர்ந்த வேறு எந்த பாராளுமன்ற உறுப்பினரும் இதுவரை எந்தவொரு சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையும் இந்த நான்கைந்து வருடங்களுக்கும் சமரப்பிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிட்டுக் காட்ட வேண்டியது. 

பாராளுமன்றில் ஆற்றப்படும் உரைகள் மக்களைக் கவருமே தவிர, அவை மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கொண்டு சேர்க்காது. 

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணைகள் மற்றும் அமைச்சுசார் ஆலோசணைக்கு கூட்டங்களில் சமர்ப்பிக்கடும் விடயங்களே அமைச்சுக்கள், திணைகளால் கவனத்தில் எடுக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நகர்கின்றன. 

பாராளுமன்றில் உபயோகமின்றி கவர்ச்சிக்காக பேசுவதைக் குறைத்து விட்டு சபை ஒத்திவைப்பு வேளைகள் மற்றும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டங்கள் என எதனையும் விரயம் செய்துவிடாது, தனது பாராளுமன்ற பதவிக்காலத்தினை மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டடையும் பயன்மிகு தருணங்களாக உபயோகித்து வரும் சுறுசுறுப்பான ஒரு திறன்மிகு பாராளுமன்ற உறுப்பினராக இயங்கிவரும் முஷாரப் எம்பி அவர்களின் ஒப்பற்ற பணி மகத்தானது.

-செயிட் ஆஷிப்




Sunday, June 16, 2024

வைத்திய சேவையை வழங்க வைத்தியர்களின் பங்களிப்பு மட்டுமன்றி வளங்களும் அவசியம்.!

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர் இமாமுத்தீன் மெளலானா தெரிவிப்பு!

-அபு அலா - 

நோயாளர்களுக்கு சிறந்த வைத்திய சேவைகளை வழங்குவதாக இருந்தால் வைத்தியர்களின் பங்களிப்புகள் மட்டும் போதாது. அதற்கான வைத்திய உபகரணங்கள், மருந்துகள், ஆளணிகள் போன்ற பல தேவைகள் உள்ளதென கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர் இமாமுத்தீன் மெளலானா தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் புதிய அபிவிருத்திக் குழு உறுப்பினர்களின் நிர்வாகத் தெரிவும், முதலாவது நிர்வாக சபைக் கூட்டமும் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் யூ.எல்.எம்.வபா தலைமையில் (14) வைத்தியசாலையின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வைத்தியசாலையின் சேவை மிகத் திறன்பட இயங்க வேண்டுமாக இருந்தால் அந்த வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் செயற்பாடுகள் நல்லதாக இருக்க வேண்டும். அத்துடன் வைத்தியசாலை மீதான பார்வை மற்றும் தொடர்பாடல்கள் மிக அதிகமாக இருந்தால்தான் அந்த வைத்தியசாலையின் வைத்திய சேவைகளுடன் அபிவிருத்திகளும் சிறந்த முறையில் இடம்பெறும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எமது வைத்தியசாலையில் சிகிச்சை பெற வருகின்ற நோயாளர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சையளிக்கப்பட்டு அவர்கள் சுகம் பெற்றவர்களாக, திருப்தியான முறையில் செல்ல வேண்டும் என்பதே எமது எல்லோருடைய நோக்கமாக இருக்க வேண்டும்- என்றார்.

வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் Nebulizer ஒன்று இல்லாமல் பாரிய சிரமங்களை நாங்கள் எதிர்நோக்கி வருகின்றோம் என்று வைத்தியசாலை பொறுப்பதிகாரியினால் இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டபோது ANF தனியார் மருத்துவ உபகரண விநியோக நிறைவேற்றுப் பணிப்பாளரும் அபிவிருத்திக் குழு உறுப்பினருமாகிய எ.எல்.எ.கபூர் உடனடியாக Nebulizer ஒன்றினை வழங்கி அக்குறைபாட்டை நிவர்த்தி செய்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் புதிய அபிவிருத்திக் குழு நிர்வாகத்தின் தலைவராக வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் யூ.எல்.எம்.வபா நிறுவனத் தலைவர் என்ற ரீதியில் தெரிவு செய்யப்பட்டார்.

செயலாளராக ஆசிரிய ஆலோசகர் எம்.எப்.முஹம்மது நழீர் தெரிவு செய்யப்பட்டார்.

பொருளாளராக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஏ.சி.முஹம்மது றியாஸ் தெரிவு செய்யப்பட்டார்.

உப செயலாளராக ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில் தெரிவு செய்யப்பட்டார்.

உறுப்பினர்களாக, தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளரும் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவருமான ஏ.எச்.ஹனீஸ், சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், அதிபரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமாகிய ஏ.எல்.அஜ்மல், ANF தனியார் மருத்துவ உபகரண நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எ.எல்.எ.கபூர், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் மருந்துக் கலவையாளர் ஏ.எல்.முஹம்மட் புகாரி இலங்கை வங்கி அட்டாளைச்சேனை கிளையின் ஓய்வுபெற்ற முகாமையாளர் ஏ.சி.கியாஸ்டீன், மக்கள் வங்கி உத்தியோகத்தர் எம்.ஐ.முஹம்மது நபீல், ஏ.பி.தீனுல்லாஹ், ஓய்வுபெற்ற சமுக சேவை உத்தியோகத்தர் எம்.ஐ.அன்வர், ஓய்வுபெற்ற கிராம சேவகர் எஸ்.எல்.ஏ.சமட், அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நிருவாக சபை உறுப்பினர் எம்.ஏ.றமீஸ், எம்.ஏ.சிறாஜ் அஹமட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.






www.metromirror-lk

metromirrorweb@gmail.com 

WhatsApp 0779599929

உலகவாழ் முஸ்லிம்களின் பிரச்சினைகள் நீங்கப் பிரார்த்திப்போம்: மு.கா. பிரதிப் பொருளாளர் யஹியாகான்.!

-சாய்ந்தமருது செய்தியாளர்-

உலகவாழ் முஸ்லிம்களின் அனைத்து பிரச்சினைகளும் நீங்கி - அனைத்து சவால்களையும் தியாக சிந்தையோடு எதிர்கொள்ளும் ஆற்றலை அல்லாஹ் வழங்க வேண்டுமென இன்றைய ஈதுழ் அழ்ஹா பெருநாள் தினத்தன்று பிரார்த்திப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

இறை தூதர்களான நபி இப்ராஹிம் (அலை), நபி இஸ்மாயில் (அலை), அன்னை ஹாஜரா ஆகியோரின் தியாகத்தை பிரதிபலிக்கும் ஹஜ் கடமை என்பது  தியாகத்தையும் சகிப்புதன்மையையும் அதிகம் வலியுறுத்தும் இறுதிக் கடமையாகும்.

இலங்கை முஸ்லிம்கள் - இந்த நாட்டிற்காக ஆற்றிய அனைத்து வகையான தியாகங்களும் போற்றுதலுக்குரியது.

தியாகத்தை வலியுறுத்தும் இந்நாளில் தியாகத்தையும் சகிப்புத் தன்மையையும் கடைப்பிடித்து இப் பெருநாளை கொண்டாடுவோம்.

நாம் வழங்கும் குர்பானிகளில் ஏழை மக்களை அதிகளவில் இணைத்துக் கொண்டு - அனைவரும் பெருநாள் தினத்தை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் கொண்டாடுவோம். எமது குர்பானிகளை இறைவன் அங்கீகரித்துக்கொள்ள பிரார்த்திப்போம். ஈத் முபாறக்



பலஸ்தீன அன்புறவுகளுக்காக பிரார்த்திப்போம்; கல்முனை முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர்.!


(சாய்ந்தமருது செய்தியாளர்)

இன்றைய ஈகைத்திருநாளில் பலஸ்தீன அன்புறவுகளுக்காக துஆ செய்யும் அதேவேளை இலங்கை வாழ் முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமை நிலைபெறவும் பிரார்த்திப்போம் என்று கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளருமான ரஹ்மத் மன்சூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

நபி இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களினதும், அவர்களது மனைவி மற்றும் குழந்தையினதும் தியாகங்களை நினைவுபடுத்தும் முகமாக அல்லாஹ் இத்திருநாளை அருளியுள்ளான்.

அக்குடும்பத்தினரின் தியாகங்கள் முழு மனித சமூகத்திற்கும் சிறந்த முன்மாதிரியாகும். தனிமனிதர்களின், குடும்பங்களின் மற்றும் சமூகங்களின் தியாகங்கள் மூலமே வெற்றிகரமான எதிர்காலத்தை அடைய முடியும்.

அவ்வாறான நிலையில், பலஸ்தீனில் எமது அன்புறவுகள் கண்ணீர் சிந்துகின்றன. உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன. அவர்களின் இலட்சியப் பயணம் வெற்றி அடைவதற்கும், சாந்தி, சமாதானம் விரைவில் மலரும் நாம் அனைவரும் துஆக்களைச் செய்வோமாக.

அதேவேளை இஸ்லாம் தியாகங்களின் ஊடாகவே வாழ்வில் வெற்றி அடைய முடியுமென்பதைப் போதிக்கின்றது. அந்த வகையில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாட்டினதும் சமூகத்தினதும் நன்மைக்காக தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் அர்ப்பணிப்புடன் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது.

மேலும், எமது நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் சமாதானமும் ஐக்கியமும் மலர வல்ல இறைவன் துணை புரிய வேண்டும் என்று பிரார்த்திப்பதோடு நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகள் நீங்கி, சுபீட்சமான வாழ்வு மலர வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்புக்களை நல்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

பலஸ்தீன் விடுதலைக்காக பிரார்த்திப்போம்; முன்னாள் முதல்வர் ஏ.எம்.றகீப்.!

-சாய்ந்தமருது செய்தியாளர்-

உலக முஸ்லிம்களின் நிம்மதியாக, சந்தோசத்திற்காகவும் பலஸ்தீன் மக்களின் விடுதலைக்காகவும் நாட்டின் பொருளாதார மீட்சிக்காகவும் இப்புனிதத் திருநாளில் பிரார்த்திப்போம் என்று கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உச்சபீட உறுப்பினருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் மக்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வாறானதோர் இக்கட்டான சூழ்நிலையிலேயே இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுகின்றோம்.

ஹஜ் என்பது தியாகம், சகிப்புத்தன்மை, சமத்துவம், சகவாழ்வு, பிறருக்கு உதவுதல் போன்றவற்றை எமக்கு கற்றுத்தருகின்ற ஒரு மேன்மைமிகு வணக்கமாகும். மேலும், இறைவனின் அன்பையும் நெருக்கத்தையும் அடைந்து, பாவ மீட்சியை பெற்றுத்தருகின்ற ஓர் உன்னத வணக்கமுமாகும். இன்று நாம் எதிர்நோக்கியிருக்கின்ற பிரச்சினைகள், நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான ஒரே வழி இறைவனின்பால் மீள்வதாகும்.

இஸ்லாமிய உலகின் முதல் கிப்லாவான பைத்துஸ் முகத்தஸ் - மஸ்ஜில் அக்ஸா எனும் புனிதஸ்தலம் அமையப் பெற்றுள்ள பலஸ்தீன் தேசமானது இன வெறியர்களால் அழிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள மக்கள் இனப்படுகொலை செய்யப்படுகின்றனர். இந்த அட்டூழியங்கள் அனைத்தும் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காக இருகரமேந்தி வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.

ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்ற அனைத்து இஸ்லாமிய நெஞ்சங்களுக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

சமூக, தேச நலன்களில் கரிசனை கொள்வோம்; கிழக்கு மாகாண சபை முன்னாள் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல்.!

-சாய்ந்தமருது செய்தியாளர்-

பலஸ்தீன் மக்களின் மீட்சிக்காகவும் உலக முஸ்லிம்களின் நிம்மதிக்காகவும்
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் முஸ்லிம் சமூகத்தின் நலன்களுக்காகவும் கரிசனையுடன் இப்புனிதத் திருநாளில் பிராத்திப்போம் என்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்பாளருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் வீழ்ந்திருந்த சூழ்நிலை மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மீதான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே சில வருடங்களாக எமது பெருநாட்கள் கடந்து சென்றிருந்ததை எண்ணிப் பார்க்கிறோம். இறைவன் அருளால் தற்போது அந்த அவலநிலை ஓரளவு நீங்கி, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள தருணத்தில் இப்பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றோம்.

எவ்வாறாயினும் எமது நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து முற்றாக மீட்சி பெற வேண்டும். இதன் மூலம் எமது நாட்டு மக்கள் அனைவரது கஷ்டங்களும் முழுமையாக நீங்கி, நிம்மதியான சூழ்நிலைக்குத் திரும்ப வேண்டும். தேச நலன் கருதிய செயற்பாடுகளுக்கு அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலமே இந்த இலக்கினை அடைந்து கொள்ள முடியும்.

இன, மத, பிரதேச பேதங்களைக் களைந்து நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றிணைவதன் ஊடாகவே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்கிற யதார்த்தங்களை உணர்ந்து செயற்படுவோமாக.

மேலும், இனப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்ற பலஸ்தீன் முஸ்லிம்களின் மீட்சிக்காகவும் பலஸ்தீன் சுதந்திர நாடாக மலர்வதற்கும் நாம் இன்றைய தினத்தில் விசேடமாக பிரார்த்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

இறைவனுக்காக தியாகங்கள் செய்து இறையன்பை பெற்றுக் கொள்வோம்; முன்னாள் முதல்வர் சிராஸ்.!

-சாய்ந்தமருது செய்தியாளர்-

எமது நாட்டில் இனங்களுக்கிடையில் இருக்கின்ற தப்பபிப்பிராயங்கள் களையப்பட்டு, புரிந்துணர்வும் சகவாழ்வும் நிலையான அமைதியும் உருவாக இன்றைய ஈகைத்திருநாளில் பிரார்த்திப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மெற்றோ பொலிடன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

இந்தத் தியாகத் திருநாளில் எம்மனைவர் மீதும் இறையருள் பொழிய, இறையன்பு கிடைக்க பிரார்த்திக்கிறேன். 

நபி இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களினதும், அவர்களது மனைவி மற்றும் குழந்தையினதும் தியாகங்களை நினைவுபடுத்தும் முகமாக அல்லாஹ் இத்திருநாளை எமக்கு அருளியுள்ளான். அக்குடும்பத்தினரின் தியாகங்கள் முழு மனித சமூகத்திற்கும் சிறந்த முன்மாதிரியாகும்.

தனிமனிதர்களின், குடும்பங்களின் மற்றும் சமூகங்களின் தியாகங்கள் மூலமே தேசம் வெற்றிகரமான எதிர்காலத்தை அடைய முடியும். இஸ்லாம் தியாகங்களின் ஊடாகவே வாழ்வில் வெற்றி அடைய முடியுமென்பதை போதிக்கின்றது.

எனவே நாங்கள் எமது வாழ்க்கையிலும் தியாகங்கள் பலவற்றை செய்ய வேண்டியுள்ளது. எமது தியாகங்கள் இறைவனுக்காக செய்யப்படுபவையாக இருக்கும்போதுதான் நாம் இறைவனின் நற்கூலியையும் இறையன்பையும் பெற்றுக்கொள்ள முடியும்.  

இன்றைய எமது நாட்டு பொருளாதார சூழ்நிலையில்  முஸ்லிம்களும்,  சகோதர இன மக்களும் பல பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கியிருக்கின்றனர், அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. நாம் எம்மால் முடிந்ததை வழங்கி அவர்களது வாழ்விலும் ஒளியேற்றுவோம்.

மேலும் எமது தொப்புல் கொடி உறவுகளான பலஸ்தீன மக்கள் படும் சொல்லொனாத் துயரங்கள், உயிரழப்புக்களிலிருந்து அம்மக்களை பாதுகாத்தருள இத்திருநாளில் இறைவனிடம் இருகரமேந்தி பிராத்தனை செயவ்வோமாக.

அனைத்து சகோதர நெஞ்சங்களுக்கும் மீண்டுமொரு முறை புனிதஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

Friday, June 14, 2024

கல்முனை மாநகர ஆணையாளராக என்.எம்.நெளபீஸ் கடமையேற்பு.!


-அஸ்லம் எஸ்.மெளலானா-

கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள என்.எம்.நெளபீஸ் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (14) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம் அவர்கள் தலைமையில் புதிய ஆணையாளர் வரவேற்கப்பட்டார்.

இந்நிகழ்வில் மாநகர சபையின் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், உள்ளுராட்சி உத்தியோகத்தர் தாரிக் அலி சர்ஜுன், வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம், நிதி உதவியாளர் யூ.எம். இஸ்ஹாக் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் ஐ.எம்.றிகாஸ், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எம். ஆஷிக், லகுகல பிரதேச செயலாளர் நவநீதன், மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஸ்,   கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினர் யூ.எல். நூருல் ஹுதா உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றி வந்த ஏ.எல்.எம். அஸ்மி அவர்கள் கிழக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளராக (ஆளணி மற்றும் பயிற்சி) பதவி உயர்வு பெற்று சென்றதையடுத்தே கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு பணிப்பாளரான என்.எம். நெளபீஸ் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களினால் நியமிக்கட்பட்டிருக்கிறார்.

கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாகவே என்.எம். நெளபீஸ் அவர்கள் கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த நௌபீஸ் அவர்கள் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளராகவும் கிண்ணியா நகர சபை மற்றும் ஏறாவூர் நகர சபை என்பவற்றின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

சிறந்த நிருவாகத் திறனும் அனுபவம், ஆற்றலும் கொண்ட நௌபீஸ் அவர்கள் ஏறாவூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





Wednesday, June 12, 2024

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக ஏ.எல்.எம். அஸ்மி நியமனம்.!

-அஸ்லம் எஸ்.மெளலானா-

கிழக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளராக (ஆளணி மற்றும் பயிற்சி) கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளர் செயலகத்தில் இவர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

இலங்கை நிர்வாக சேவையின் தரம்-1 அதிகாரியான ஏ.எல்.எம். அஸ்மி அவர்கள் முறையே பொத்துவில் மற்றும் அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளராகவும் அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளராகவும் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளராகவும் அதன் பதிவாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

தற்போது கல்முனை மாநகர ஆணையாளராக கடமையாற்றி வருகின்ற நிலையில் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 

ஏ.எல்.எம். அஸ்மி அவர்கள் இலங்கை நிர்வாக சேவையில் இரு தசாப்த காலத்தை பூர்த்தி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, June 11, 2024

இளைஞனை காரினால் மோதிய வைத்தியருக்கு 5 இலட்சம் ரூபா சரீரப் பிணை; பாதிக்கப்பட்டவருக்கு ஒரு இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்கவும் உத்தரவு.!

 

-பாறுக் ஷிஹான்-

இளைஞனை காரினால் மோதிய வைத்தியருக்கு 5 இலட்சம் ரூபா சரீரப் பிணை; பாதிக்கப்பட்டவருக்கு ஒரு இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்கவும் உத்தரவு.!

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை காரினால் மோதி காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வைத்தியர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு ஒரு இலட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு நேற்று கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வுத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் 41 வயது மதிக்கத்தக்க வைத்தியர் ஒருவர் கடந்த சனிக்கிழமை (8) இரவு 11 மணியளவில் கல்முனை வீதியில் தனது காரில் பயணித்துக் கொண்டிருநத போது மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற 28 வயதுடைய இளைஞன் மீது கார் மோதி விபத்து நிகழ்ந்ததால் அந்த இளைஞன் காயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.

சம்பவத்தையடுத்து தப்பிச் சென்ற வைத்தியரது கார் அன்றைய தினம் இரவே கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மீட்கப்பட்டதுடன் வைத்தியரும் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் இடம்பெற்ற போது குறித்த வைத்தியர் குடிபோதையில் இருந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Monday, June 10, 2024

கிழக்கு விவசாய அமைச்சின் செயலாளராக நஸீர் நியமனம்; யஹியாகான் வாழ்த்து..!

கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, காணி நிர்வாகம், மீன்பிடி, உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் செயலாளராக சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எம்.நசீர் - நியமிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியை தருவதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் முக்கிய அமைச்சான விவசாய அமைச்சுடன் இணைந்ததாக  மேலும் சில பொறுப்புக்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறையைச் சேர்ந்த நஸீர் - கல்முனை பிரதேச செயலாளராகவும் கடமையாற்றி உள்ளார். அவரது அந்த சேவைக் காலம் பொற்காலம் எனக் கூறலாம்.

கிழக்கின் - விரல்விட்டு எண்ணக் கூடிய நிர்வாக சேவை அதிகாரிகளில் நஸீரும் குறிப்பிடத்தக்க ஒருவர்.

காலம் பிந்தினாலும் - உயரிய அமைச்சொன்றுக்கு அவர் செயலாளராக நியமிக்கப்பட்டு கடமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

கிழக்கில் காணிப் பிரச்சினை பண்ணெடுங் காலமாக நிலவி வருகின்றது. இதனை எந்த சமுகத்துக்கும் பாதிப்பில்லா வகையில் தீர்க்கக் கூடிய ஆற்றல் நஸீருக்கு உள்ளது. இப்போது, காணி நிர்வாகமும் சேர்த்து அவருக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.


எனவே அதிகாரமிக்க , பலம் பொருந்திய அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் - நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான நஸீர் - மேலும் உயர் பதவிகளை எட்ட மனதார வாழ்த்துகிறேன்.

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்ஸின் நீண்ட காலக் கனவு முஷாரப் எம்.பி. ஊடாக நிறைவேறுகிறது..!

மூன்று மாடிக் கட்டிடத்திற்கு இன்று அடிக்கல் நடப்பட்டது.!


-அஸ்லம் எஸ்.மெளலானா-

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களின் ஏற்பாட்டில்
சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையில் அமைக்கப்படவுள்ள மூன்று மாடி கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நடும் விழா இன்று திங்கட்கிழமை (10) கோலாகலமாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எம். ஆஷிக், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் ஆகியோர் கெளரவ அதிதிகளாக கலந்து கொண்டிருந்ததுடன் பாடசாலையின் உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது குறித்த கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நடப்பட்டு, கட்டிட நிர்மான வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் மற்றும் அவரது இணைப்பாளர் ஏ.எம். அஸாம் மெளலவி ஆகியோர் உட்பட அதிதிகள், பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இதன்போது உரையாற்றிய திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள்: இக்கட்டிட நிர்மாணப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் தனது பதவிக் காலத்தினுள் இத்திட்டம் பூரணப்படுத்தப்பட்டு, திறந்து வைக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

இக்கட்டிடத் தொகுதி வேலைத் திட்டத்திற்காக முஷாரப் எம்.பி. தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியில் இருந்து முதற்கட்டமாக இரண்டு மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருப்பதுடன் அவரது வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண சபையினால் மூன்று மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை வலயத்தில் மிகவும் பழமை வாய்ந்ததும் பிரபல முன்னணி ஆரம்ப பாடசாலையாகவும் திகழ்கின்ற சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையின் நிலம் மற்றும் கட்டிடப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு இங்கு மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றை அமைக்க வேண்டிய தேவை நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இப்பாடசாலைக்கு விஜயம் செய்திருந்த முஷாரப் எம்.பி.யிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அவர் இதற்கான முதற்கட்ட நிதியை ஒதுக்கீடு செய்திருந்ததுடன் மேலதிக நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களின் இணைப்பாளரும் இப்பாடசாலையின் பழைய மாணவருமான ஏ.எம். அஸாம் மெளலவியின் அயராத முயற்சி காரணமாகவே முஷாரப் எம்.பி. இப்பாடசாலை விடயத்தில் தலையிட்டு அதன் நீண்ட காலக் கனவை நிறைவேற்றுவதற்கு முன்வந்து, துரித நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.