Wednesday, July 31, 2024

சாய்ந்தமருதில் படகுத் தரிப்புத்துறை; பூர்வாங்க ஏற்பாடுகளை முன்னெடுக்க ஜனாதிபதி அவசர பணிப்பு.!

ஜெமீல் முயற்சியினால் நிறைவேறுகிறது மீனவர்களின் நீண்ட காலத்தேவை.!

-அஸ்லம் எஸ்.மெளலானா-

அம்பாறை மாவட்ட மீனவர்களின்
நீண்ட காலத் தேவையாக இருந்து வருகின்ற படகுத் தரிப்புத் துறையை (Boatyard) அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களுக்கான இணை அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவருமான கலாநிதி ஏ.எம். ஜெமீல் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்றே அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இதற்கான எழுத்து மூல கோரிக்கை மற்றும் திட்ட வரைபை கலாநிதி ஏ.எம். ஜெமீல் அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுகின்ற இயந்திரப் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கு இப்பகுதியில் Boat yard ஒன்று இல்லாதிருப்பதால் அப்படகுகளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை படகுத் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்க வேண்டியுள்ளது. இதனாலf அவற்றின் உரிமையாளர்களும் மீனவர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப், அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சாய்ந்தமருதில் படகுத் தரிப்புத் துறையொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.

எனினும் ஒலுவில் பகுதியில் துறைமுகம் அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதால் சாய்ந்தமருதில் படகுத்துறை அமைக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டிருந்தது.

ஆனால் ஒலுவில் பகுதியில் அமைக்கப்பட்ட துறைமுகம்  பயன்பாட்டுக்கு உகந்ததாக அமையாத காரணத்தால் அங்கும் படகுகளை தரித்து வைக்க முடியவில்லை.

இந்நிலையில் பல தசாப்த காலமாக ஆழ்கடல் மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்ற பாரிய சவாலான பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஐ.தே.க. அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களுக்கான இணை அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவருமான ஏ.எம். ஜெமீல், இவ்விடயத்தை ஜனாதிபதியின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்கான முன்மொழிவை சமர்ப்பித்திருந்தார்.

இதன் பிரகாரம் சாய்ந்தமருதில் படகுத் தரிப்புத்துறையை அமைப்பதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்துள்ள ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, படகுத்துறை அமைப்பதற்கு ஏற்றவாறு சாய்ந்தமருது முகத்துவாரம் அமைந்துள்ள பாலத்தை போதியளவு உயர்த்தி நிர்மாணிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை உடனடியாக முன்னெடுக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அவ்வாறே முகத்துவார தோணாப் பகுதியை தேவையானளவு தோண்டி ஆழமாக்குவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு கரையோரம் பேணல் திணைக்களத்திற்கு ஜனாதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Thursday, July 4, 2024

ஆளுநரின் இணைப்பாளர் பதவிகளை பொறுப்பேற்றால் ஒழுக்காற்று நடவடிக்கை; மு.கா. செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் எச்சரிக்கை.!

-அஸ்லம் எஸ்.மெளலானா-

கடந்த உள்ளுராட்சி மன்றங்களில் தவிசாளர் மற்றும் மேயர் பதவி வகித்தவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைய கிழக்கு மாகாண ஆளுநரினால் நியமிக்கப்படவுள்ள இணைப்பாளர் பதவிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவர்கள் பொறுப்பேற்க வேண்டாமென முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.நிசாம் காரியப்பர்  அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் கட்சியின் முன்னாள் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் மேயர்களுக்கு அவர் விடுத்துள்ள விசேட வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

முன்னாள் தவிசாளர்கள் மற்றும் மேயர்களுக்கு உள்ளுராட்சி மன்றங்களின் வாகனங்கள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது தேர்தல் சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும்.

ஏனெனில் இவர்களில் பெரும்பாலான தலைவர்கள் உள்ளாட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்களாக உள்ளனர், அவர்களின் வேட்பு மனுக்கள் இன்னும் செல்லுபடியாக உள்ளது.

மறுபுறம், இது மூன்று மாதங்களுக்குள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் உங்களின் ஆதரவைப் பெறுவதற்கான இலஞ்சமாக நாங்கள் கருதுகின்றோம்.   இது மிகவும் தீவிரமான விஷயமாகும். இதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

இந்த இணைப்பாளர் பதவிகளை நமது கட்சியைச் சேர்ந்த எந்த உறுப்பினரும் பொறுப்பேற்கக் கூடாது என கட்சித் தலைமையால் எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நமது கட்சியின் உறுப்பினர்களை இவ்வாறான பதவிகளை கொடுத்து தங்களுக்கு சார்பாக மாற்றிக் கொள்ளப்பார்க்கின்றனர்.

இவ்வாறான ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாட்டிற்கு எமது கட்சி ஒருபோதும் துனைபோகாது.

ஆளுநர் மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு உத்தரவுகளை அனுப்பி இந்த சட்டவிரோத நியமனங்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையாளருக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளேன்.

கட்சியின் தீர்மானத்தை மீறி அங்கத்தவர்கள் எவராவது செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

www.metromirror-lk

metromirrorweb@gmail.com 

WhatsApp 0779599929



Wednesday, July 3, 2024

மாளிகைக்காடு சபீனா வித்தியாலய அதிபர் காரியாலயம், நடைபாதை திறப்பு.!

பைசல் காசிம் எம்.பிக்கு விசேட கெளரவம்..!


திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களின் 2024 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் புனரமைக்கப்பட்ட மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய அதிபர் காரியாலயம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடங்களுக்கிடையிலான நடைபாதை ஆகியவற்றை திறந்து வைக்கும் "கல்வி சிறக்கும் வழி திறக்கும் விழா" நேற்று முன்தினம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

பாடசலையின் அதிபர் எம்.ஐ.எம். அஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் சஹதுல் நஜீம், விஷேட அதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபீர், சிறப்பு அதிதியாக காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ. சஞ்ஜீவன் மற்றும் சாய்ந்தமருது, காரைதீவு கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், மாளிகைக்காடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் எம்.எச்.எம். இஸ்மாயில், மாளிகைக்காடு கிழக்கு வட்டார அமைப்பாளர் எம்.எச். நாஸர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு சிறப்பு நுழைவாயில் "Gateway" அமைப்பதற்கான நிதி உதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் நீண்ட காலமாக பல்வேறு பௌதீக உட்கட்டமைப்பு பணிகளுக்கு தனது நிதிப் பங்களிப்பினை வழங்கி சபீனாவின் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் பக்க துணையாக நிற்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களுக்கு நன்றி பாராட்டி "மக்கள் ஒளி" எனும் நாமம் சூட்டி பாடசாலைச் சமூகம் அவரைக் கெளரவித்தது.

இந்நிகழ்வில் பல்வேறு துறைகளிலும் சாதனைகளை நிலைநாட்டிய பாடசாலை மாணவர்கள் பலரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

-செயிட் ஆஷிப்
















www.metromirror-lk

metromirrorweb@gmail.com 

WhatsApp 0779599929