Tuesday, December 29, 2020

கல்முனை தெற்கில் தீவிரமடையும் கொரோனா; 176 பேருக்கு தொற்று; நகரம் உள்ளிட்ட 11 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்; இராணுவத்தினரின் கண்காணிப்பு தீவிரம்

அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.ஐ.சம்சுதீன்

கல்முனை தெற்குப் பிரதேசத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதையடுத்து, கல்முனையின் சில பிரதேசங்கள் இன்று செவ்வாய்க்கிழமை (29) முற்றாக முடக்கப்பட்டு, இராணுவத்தினரின் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன.

கல்முனை செய்லான் வீதி தொடக்கம் வாடி வீட்டு வீதி வரையான 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை பொதுச் சந்தையிலும் கல்முனைக்குடியின் ஒரு பகுதியிலும் திங்கட்கிழமை (28) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அன்றைய தினம் இரவு தொடக்கம் மறு அறிவித்தல் வரை மக்கள் நடமாட்டத்தை முற்றாகக் கட்டுப்படுத்தி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரியினால் தனிமைப்படுத்தல் அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

இதனால் இன்று கல்முனை நகரின் தெற்குப் பகுதி மற்றும் கல்முனைக்குடியின் சில பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள், கடைகள் யாவும் மூடப்பட்டிருந்தன. கல்முனை மாநகர பொதுச் சந்தையும் முடக்கப்பட்டிருந்தது. இதனால் இப்பகுதிகள் யாவும் சனநடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

இப்பகுதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, மக்கள் நடமாட்டம் முற்றாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதன்போது வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் தவிர வேறு எவரும் வீடுகளில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறே அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் தரப்பினர் தவிர வேறு எவரும் இப்பிரதேசங்களினுள் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களின் எல்லை வீதிகள் மூடப்பட்டிருந்ததுடன் முக்கிய சந்திகள் மற்றும் கல்முனை நகரின் முக்கிய இடங்களில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் நிலை கொண்டிருந்ததுடன் மற்றும் சில விசேட இராணுவ சிப்பாய்கள் மோட்டார் சைக்கிள்களில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

எனினும், இப்பிரதேசங்களை ஊடறுத்து செல்லும் கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதி ஊடான பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம்பெற்றதுடன் இப்பிரதேச பரப்பினுள் வாகனங்கள் எவையும் நிறுத்துவதற்கோ ஆட்களை ஏற்றி, இறக்குவதற்கோ அனுமதி வழங்கப்படவில்லை. தனிப்பட்ட வாகனங்களில் பயணித்தோர் தொடர்ந்தும் பயணிக்க அனுமதிக்கப்படாமல் திருப்பி விடப்பட்டனர்.

நேற்று திங்கட்கிழமை (28) மாலை வரை கல்முனை தெற்கு சுகாதாரப் பிரிவில் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் இரவு கல்முனையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் சில இடங்களில் பலருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வரவேண்டியிருப்பதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment