Friday, June 10, 2022

சாய்ந்தமருது, கல்முனையில் வீசும் தூர்நாற்றம்; வழக்கு விசாரணை ஜூலை 18ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு..!


(கல்முனை நிருபர்)

சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசங்களில் வீசும் தூர்நாற்றம் தொடர்பாக கல்முனை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

குறித்த தூர்நாற்றம் எங்கிருந்து வருகிறது என்பதை இதுவரை துல்லியமாக கண்டறிந்து, அதனை இல்லாமல் செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, கல்முனை மாநகர சபையின் சுகாதார நிலையியற் குழுவின் தவிசாளரான சட்டத்தரணி றோஷன் அக்தாரினால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கு கடந்த 6ஆம் திகதி கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டு, அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த சுற்றாடல் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட எட்டுப் பேரில் முதலாம் பிரதிவாதி தவிர்ந்த ஏனைய 07 பிரதிவாதிகளும் நீதிமன்றுக்கு சமூகமளித்திருந்தனர்.

பிரதிவாதிகள் சார்பிலான ஆட்சேபனைகள், வாதப்பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதவான் குறித்த வழக்கை தொடந்து நடத்த தீர்மானித்த்தார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபை சார்பில் ஆஜரான சட்டத்தரணி, குறித்த துர்நாற்றம் சாய்ந்தமருது கரைவாகு பகுதியில் இயங்கி வருகின்ற விலங்கறுமனையிலிருந்து வருவதாகவும் விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டதை தொடந்து, இதுவரை ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கான காரணங்களைக் கோரிய நீதிமன்று சம்மந்தப்பட்ட தரப்பினரை எச்சரித்தது. 

சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் மேலதிக துப்புரவு பணிக்காகவும் ஏனைய நடவடிக்கைகளுக்காவும் கால அவகாசம் தேவைப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை சார்பான சட்டத்தரணி மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோர் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, நீதிமன்று கால அவகாசம் வழங்கி, அறிக்கை சமர்ப்பிக்கவும் மேலதிக விசாரணைக்காவும் வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 18ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணிகளான எம்.எஸ்.ரஸாக், பிரேம் நவாத், சுகாஷ் பிர்தௌஸ், ஜாவீட் ஜெமீல் மற்றும் முஹம்மட் ரிப்கான் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகளான சாரிக் காரியப்பர், அன்சார் மௌலானா, ஆரிகா காரியப்பர் மற்றும் ஏ.எல்.எம்.றிபாஸ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

No comments:

Post a Comment