Tuesday, February 14, 2023

துருக்கி பூகம்பத்தினால் உயிர்நீத்தவர்களுக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபத் தீர்மானம்..!

-சாய்ந்தமருது நிருபர்-

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட பூகம்பத்தினால் உயிரிழந்த மக்களுக்காக கல்முனை மாநகர சபையில் அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் 59ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு செவ்வாய்க்கிழமை (14) பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றபோது இதற்கான பிரேரணையை முதல்வர் சமர்ப்பித்திருந்தார். இதனை மாநகர சபை உறுப்பினர் எஸ்.சந்திரசேகரம் இராஜன் வழிமொழிந்து ஆமோதித்ததுடன் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதன்போது முதல்வர் உரையாற்றுகையில்;

அண்மையில் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வினால் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை 40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். அது ஒரு இலட்சம் வரை அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்படுகிறது. இப்பேரழிவால் நிர்க்கதியடைந்திருக்கும் மக்களின் துயரங்களில் நாமும் பங்கேற்கிறோம். 

இந்த பேரனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு கல்முனை மாநகர மக்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவும் அந்நாடுகள் மீள் எழுந்து நிற்பதற்குமான சக்தியை எல்லாம் வல்ல இறைவன் வழங்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்- என்றார்.

அத்துடன் இந்த அனுதாபப் பிரேரணையை இரு நாடுகளினதும் தூதரகங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் சபைச் செயலாளரை முதல்வர் கேட்டுக்கொண்டார்.




















No comments:

Post a Comment