Saturday, March 25, 2023

சேவையின் சிகரம் சாய்ந்தமருதின் மூத்த உலமா காஸிம் மெளலவி வபாத்; பெருந்திரளான மக்கள் பங்கேற்புடன் ஜனாஸா நல்லடக்கம்..!

-அஸ்லம் எஸ்.மௌலானா-

சாய்ந்தமருது பிரதேசத்தின் பிரபல மூத்த உலமா அல்ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.காஸிம் ஹஸ்ரத் அவர்கள் தனது 73 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை பிற்பகல் காலமானார்.

ஓய்வுபெற்ற பிரதி அதிபரான காஸிம் மௌலவி அவர்கள் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் பிரதித் தலைவராகவும் பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் தலைவராகவும் நீண்ட காலம் பதவி வகித்து, பிரதேசத்தின் சமூக, கல்வி, கலாசார முன்னேற்றத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளார்.

அத்துடன் சாய்ந்தமருது ஜம்மியத்துல் உலமா சபை, சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய அறபுக் கலாபீடம் என்பவற்றின் ஸ்தாபகர்களுள் ஒருவராகவும் தலைவராகவும் இருந்து அவற்றின் வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றியிருக்கிறார்.

தஃவா இஸ்லாமிய அறபுக் கலாபீடத்தின் ஊடாக நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்களை உள்வாங்கி, அவர்களை ஹாபிழ்களாக உருவாக்குவதற்காக காசிம் மௌலவி அவர்கள் தியாக மனப்பாங்குடன் முன்னின்று உழைத்துள்ளார்.

அவ்வாறே பைத்துஸ் ஸகாத் நிதியத்திற்கு நீண்ட காலமாக தலைமைத்துவம் வழங்கிய காசிம் மௌலவி அவர்கள், எவ்வித தனிப்பட்ட செல்வாக்குகளுக்கும் இடமளிக்காமல் அல்குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஸக்காத் வழங்குவதற்குத் தகுதியானவர்களை இனங்கண்டு, அவர்களின் வறுமையை துடைப்பதற்குரிய ஸக்காத் பங்கீட்டு முறைமையை மிகவும் நேர்மையாக நடைமுறைப்படுத்தியிருந்தார். 

இவ்வாறு சமூக மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்து வந்த ஊரின் முதுசங்களில் ஒன்றான ஹஸ்ரத் காசிம் மௌலவி அவர்கள் காலமான செய்தி மிகுந்த கவலையையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.  

அன்னாரது ஜனாஸா சனிக்கிழமை இரவு 10.00 மணியளவில், சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ் ஸபா பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு, தக்வா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜனாஸா நல்லடக்கத்தில் உலமாக்கள், கல்விமான்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், சிவில் சமூக அமைப்பினர், இளைஞர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் பங்கேற்றிருந்தனர்.

காஸிம் மெளலவியின் மறைவுக்கு சாய்ந்தமருது ஷூரா சபை, மறுமலர்ச்சி மன்றம் உள்ளிட்ட சிவில் அமைப்புகளும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் குழுத் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் உள்ளிட்டோரும் அனுதாபச் செய்திகளை வெளியிட்டிருப்பதுடன் சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை மற்றும் ஜம்மியத்துல் உலமா சபை என்பன அனுதாபம் தெரிவித்து துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment