Sunday, April 16, 2023

ஊர் விவகாரங்களில் கரிசனையுடன் செயற்பட்ட ஓர் அபூர்வ ஆளுமையாக காஸிம் மௌலவி பிரகாசித்தார்; மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு..!


-அஸ்லம் எஸ்.மௌலானா-

ஊர் விவகாரங்களில் மிகவும் கரிசனையுடன் செயற்பட்ட ஓர் அபூர்வமான ஆளுமையாக மர்ஹூம் யூ.எல்.எம்.காஸிம் மௌலவி பிரகாசித்தார் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மெற்றோ பொலிட்டன் கல்லூரி ஒழுங்கு செய்திருந்த வருடாந்த இப்தார் வைபவம், மர்ஹூம் ஹஸ்ரத் யூ.எல்.எம்.காஸிம் மௌலவி தொடர்பான நினைவேந்தல் மற்றும் விஷேட துஆப் பிராத்தனை நிகழ்வுகள் கல்லூரியின் ஸ்தாபகத் தவிசாளரும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு காஸிம் மௌலவி தொடர்பான நினைவுப் பேருரையை நிகழ்த்துகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில்;

இந்த மண்ணிலே தனது ஆன்மீகப் பணியையும் சமூகப் பணியையும் மிக சிறப்பாக ஆற்றியிருக்கின்ற மூத்த உலமா யூ.எல்.எம்.காஸிம் மௌலவி அவர்கள் அண்மையில் காலமான செய்தி எம் எல்லோருக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வேளையில், இந்த இப்தார் நிகழ்வுடன் மர்ஹூம் காஸிம் மௌலவி அவர்களுக்கான நினைவேந்தல் மற்றும் துஆப் பிரார்த்தனை நிகழ்வுகளையும் சேர்த்து ஏற்பாடு செய்திருக்கின்ற முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

1964ஆம் ஆண்டு மஹரகம கபூரியா அரபுக் கல்லூரியில் ஒரு மாணவனாக இணைந்து 1972ஆம் ஆண்டு அங்கு மௌலவி பட்டத்தை பெற்றுக் கொண்ட காசிம் மௌலவி, அடுத்த வருடமே அரபு ஆசிரியராக நியமனம் பெற்றிருந்தார்.

அனுராதபுரம் நாச்சியாதீவு முஸ்லிம் வித்தியாலயம் தொடங்கி சுமார் 38 வருட காலம் பல்வேறு பாடசாலைகளிலும் ஆசிரியராகவும் பிந்திய காலப்பகுதியில் ஒரு பாடசாலையில் பிரதி அதிபராகவும் கடமையாற்றி கடின உழைப்புடன் கல்விச் சேவையாற்றியிருக்கிறார்.

எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகி, அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற சிறந்த பண்பாளராக மர்ஹூம் காஸிம் மௌலவி காணப்பட்டார். கல்வி, கலாசாரம், ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகளில் மிகுந்த அர்ப்பணிப்புடன் அவர் சேவையாற்றியிருக்கிறார்.

ஒரு சன்மார்க்க அறிஞராக மாத்திரம் இருந்து ஆன்மீகப் பணிகளுடன் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளாமல் ஊர் விவகாரங்கள், சமூக சேவைகள் என்று பல பரிமாணங்களிலும் அவர் கால்பதித்திருந்தார்.

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் சுமார் 30 வருட காலம் மரைக்காயராக, அதன் நம்பிக்கையாளர் சபையின் பிரதித் தலைவராக பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் தலைவராக, சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய அறபுக் கலாபீடத்தின் தலைவராக, உலமா சபையின் செயலாளராக, அதன் தலைவராக என்று இப்பிரதேசத்தின் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்திருக்கிறார்.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலில் நீண்ட காலம் குத்பாப் பேருரைகளை நிகழ்த்தி வந்த அதேவேளை சபா பள்ளிவாசலில் இமாமாகவும் பணியாற்றியிருக்கிறார். அத்துடன் ஆரம்ப காலம் தொட்டு தனது வீட்டில் குர்ஆன் மத்ரஸா ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். ஹஜ் யாத்திரைக்கான முக்கிய வழிகாட்டியாகவும் அவர் செயற்பட்டிருக்கிறார்.

ஊர் நலன்களில் மிகவும் கரிசனையுடன் செயற்பட்ட அன்னார் ஊருடன் சம்மந்தப்பட்ட சில பிரச்சினைகள், தேவைகள் தொடர்பாக எம் போன்ற அரசியல் தலைவர்களுடன் சிநேகபூர்வமாக பேசுவதிலும் தேவையேற்படுகின்றபோது அன்போடு உரிமையுடன் முரண்படுகின்ற ஒருவராகவும் அவரைக் கண்டிருக்கிறேன்.

ஹஸ்ரத் காஸிம் மௌலவி அவர்கள் சமூகத்திற்கு ஆற்றியிருக்கின்ற தொண்டுகளை எல்லாம் குறுகிய நேரத்திற்குள் ஒரு சில வார்த்தைகளினால் சொல்லிவிட முடியாது. அன்னாரின் திடீர் மறைவு எமது சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்திருக்கிறது என்பதை கவலையுடன் சொல்லிக் கொள்கின்றேன்.

அன்னாரை நினைவுகூர்கின்ற இச்சந்தர்ப்பத்தில் அன்னார் மார்க்கக் கல்வி கற்ற மஹரகம கபூரியா அரபுக் கல்லூரியின் வக்பு சொத்துக்கள் இன்று சர்ச்சைக்குரியதாக மாற்றப்பட்டிருப்பது குறித்து கவலையோடு பிரஸ்தாபித்து, பேச வேண்டியிருக்கிறது. இது ஒரு சமூகப் பிரச்சினையாக கருதப்பட வேண்டிய முக்கியமான பிரச்சினையாகும்.

இந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் மத்தியில் ஏராளமான வசதி படைத்தவர்கள், பரோபகாரிகள் தம்முடைய மரண ஈடேற்றத்திற்காக மனவுவந்து வக்பு சொத்தாக விட்டுச் சென்றிருக்கின்ற பல சொத்துக்களை சரியான பரிபாலனம் இல்லாமல், சீரழிந்து போக, தவறாக பயன்படுத்தப்படுகின்ற நிகழ்வுகள் ஏராளமாக நடந்து கொண்டிருக்கின்றன.

அண்மைக்காலமாக பேசப்படுகின்ற இந்த கபூரியா அரபுக் கல்லூரியின் வக்பு சொத்துக்கள் மர்ஹூம் எம்.கே.எச். அப்துல் கபூர் எனப்படுகின்ற கொழும்பின் பெரும் கோடீஸ்வர வர்த்தகரினால் அன்பளிப்பு செய்யப்பட்டவையாகும். அவற்றுள் மிக முக்கியமான சொத்து மஹரகம பகுதியில் 17.5 ஏக்கர் காணியை இக்கல்லூரிக்கென வழங்கியிருப்பதுடன் தலைநகரில் அமைந்துள்ள சுலைமான் வைத்தியசாலையையும் கிராண்ட்பாஸ் பகுதியில் இரண்டரை ஏக்கர் காணியையும் கல்லூரியின் பரிபாலனத்திற்காக அவர் வக்பு செய்திருந்தார்.

ஆனால் இந்த வக்பு சொத்துக்கள் இன்று மர்ஹூம் அப்துல் கபூர் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் கல்லூரி நிர்வாகத்தினருக்கும் இடையில் பெரும் சர்ச்சைக்குரியதாக மாற்றப்பட்டு, நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வக்பு செய்தவரின் நோக்கத்திற்கு மாறான நிலைப்பாடுகளை எடுப்பதைத் தவிர்த்து, இதனை சுமூகமாக தீர்ப்பதற்குரிய சில சட்டத்திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் கூடிய அவதானம் செலுத்தி, ஆலோசித்து வருகின்றோம்- என்று ரவூப் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில்  மௌலவி எம்.எச்.எம். நிப்ராஸ் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தியதுடன் விசேட துஆ பிராத்தனையையும் மேற்கொண்டார்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காஸிம், முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன், சிரேஷ்ட சட்டத்தானி எம்.எம்.முஸ்தபா உட்பட உலமாக்கள், கல்வியியலாளர்கள், பிரமுகர்கள், வர்த்தகர்கள், இளைஞர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மர்ஹூம் யூ.எல்.எம்.காஸிம் மௌலவியின் புதல்வர்கள் உள்ளிட்ட உறவினர்களும் பங்கேற்றிருந்தனர்.

Pix by Sarjoon Lafeer






























No comments:

Post a Comment