Thursday, April 4, 2024

முஷாரப் எம்.பி.யின் தலையீட்டினால் கிழக்கு மாகாண பாடசாலைகளின் கல்வி சாரா ஊழியர்களின் இடமாற்றம் இரத்து.!

கிழக்கு மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் கல்வி சாரா ஊழியர்களின் வருடாந்த இடமாற்றம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரபின் வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளின் ஆளணி விடயம் தொடர்பில் பொறுப்புடமையைக் கொண்டிராத கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் தலையீடு மற்றும் முறையான பதிலீடுகள் எதுவுமின்றி இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரை திங்கட்கிழமை (01) நேரடியாக சந்தித்து தெளிவுபடுத்திய பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்பட்ட இவ்விடமாற்றத்தை இரத்து செய்யுமாறு வலியுறுத்தியிருந்தார்.

இதையடுத்து கல்வி அமைச்சு விடுத்த அறிவுறுத்தலின் பேரில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் மேற்படி இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த இடமாற்ற உத்தரவு குறித்து கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.சி. திசாநாயக்க கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

-செயிட் ஆஷிப்

No comments:

Post a Comment