Thursday, May 30, 2024

கல்வி, கலாசார, சமூக மேம்பாட்டுக்கு முன்னின்று உழைத்தவர் அன்ஸார் மெளலவி; அம்பாறை மாவட்ட உலமா சபை அனுதாபம்.!

-அஸ்லம் எஸ்.மெளலானா-

அம்பாறை மாவட்டத்தில் அஹதியாப் பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கும் கல்வி, கலாசார, ஆன்மீக, சமூக மேம்பாட்டுக்கும் அர்ப்பணிப்புடன் முன்னின்று உழைத்து வந்த சாய்ந்தமருது ஜம்மியத்துல் உலமா சபையின் உப தலைவரான ஏ.எல். அன்ஸார் மெளலவியின் திடீர் மறைவு இப்பிராந்தியத்திற்கும் சமூகத்திற்கும் பேரிழப்பாகும் என்று அம்பாறை மாவட்ட உலமா சபை தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்ட அஹதியாப் பாடசாலைகள் சம்மேளனத்தின் முக்கியஸ்தரும் சாய்ந்தமருது உலமா சபையின் உப தலைவருமான ஏ.எல். அன்ஸார் மெளலவி இன்று வியாழக்கிழமை (30) காலமானார். அன்னாரது ஜனாஸா இன்று இரவு பெருந்திரளான மக்கள் பங்கேற்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து அம்பாறை மாவட்ட உலமா சபையின் சார்பில் அதன் தலைவர் ஐ.எல்.எம்.ஹாஷிம் மெளலவி, செயலாளர் ஏ.எல்.நாசிர் கனி மெளலவி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

சாய்ந்தமருது பிரதேசத்தின் மூத்த உலமாவான அன்ஸார் மெளலவி, இஸ்லாமிய சன்மார்க்கத்தைப் போதிப்பதிலும் மக்களை நெறிப்படுத்துவதிலும் மிகக் கரிசனையுடன் செயற்பட்டு வந்துள்ளார். குறிப்பாக தான் ஒரு பாடசாலை ஆசிரியர் என்ற ரீதியில் மாணவர்களுக்கு மார்க்கக் கல்வியைப் போதிப்பதில் ஒரு முன்மாதிரியான நல்லாசானாகத் திகழ்ந்திருக்கிறார்.

மார்க்கக் கல்வியின் ஊடாக அறநெறிகளைப் போதித்து மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கான அஹதியாப் பாடசாலைகளை இப்பிராந்தியத்தில் அறிமுகப்படுத்துவதிலும் அவற்றை முன்னேற்றுவதிலும் அவர் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.

அத்துடன் சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய்யா அறபுக் கல்லூரியின் ஆளுநர் சபையில் நீண்ட காலமாக அங்கம் வகித்து அக்கல்லூரியின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியுள்ளார்.

இவற்றுக்கு மேலதிகமாக சாய்ந்தமருது பத்தாஹ் பள்ளிவாசலில் கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாக இமாமாகப் பணியாற்றியுள்ள அன்ஸார் மெளலவி அப்பள்ளிவாசலை விஸ்தரிப்பதற்கான கட்டுமாணத்திலும் முன்னின்று உழைத்துள்ளார்.

இவ்வாறு கல்வி, கலாசார, ஆன்மீக, சமூக முன்னேற்ற விடயங்களில் தியாக சிந்தனையுடன் மிகவும் துடிப்புடன் செயலாற்றி வந்த நிலையில் ஆசிரியர் தொழிலில் இருந்து ஓய்வுபெற முன்னரே அவர் இறையடி சேர்ந்திருப்பதானது எமது சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்- என்று அந்த அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment