Saturday, August 31, 2024

முஸ்லிம் கட்சிகளை சந்தித்த அஜித் தொவால்.!

-அஸ்லம் எஸ்.மெளலானா-

இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பிரதிநிதிப்படுத்தி அதன் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் ரிஷாட் பதியுத்தீன் மற்றும் அமிர் அலி ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.

இதன்போது தங்களுடைய இரு கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முடிவு எடுத்த பின்னணியில் இலங்கையில் விஷேடமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுமார் 90 வீதமான முஸ்லிம் மக்கள் நிச்சயமாக சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிப்பார்கள் என்ற விடயத்தை எடுத்துரைத்துள்ளனர்.

இதுவரையான பிரச்சாரக் கூட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன என்றும் இக்கூட்டங்களில் மக்கள் நிறைந்து காணப்பட்டனர் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், எதிர்காலத்தில் புதிதாக உருவாக்கப்படும் சஜித் பிரேமதாசவின் அரசாங்கத்தில் தாங்கள் முக்கிய பொறுப்புகள் வகிப்போம் என்றும் ஆகவே புதிய அரசாங்கத்தின் வெளிவிவாகர கொள்கைகள் நிச்சயமாக இந்தியாவின் நேச சக்திக்கு முரணாக இருக்க மாட்டாது என்றும் அவர்களினால் உத்தரவாதம் வழங்கப்பட்டது.

ஆகவே இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு இலங்கைக்கு கிடைக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் பொருளாதார விடயங்கள் உட்பட முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் உரிமைகள் சம்பந்தமான விடயங்களிலும் இந்தியாவின் பங்களிப்பு இருக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இவர்களால் சொல்லப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக இந்தியாவும் ஒரு சாதகமான நிலைப்பாட்டில் இருப்பதாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment