Tuesday, September 13, 2022

கிழக்கின் சாதனைக்கு பங்களித்த அதிபர், ஆசிரியர், மாணவர்களை விடுத்து அதிகாரிகள் மாத்திரம் கௌரவிக்கப்பட்டமை தவறான முன்மாதிரியாகும்; கல்வி நிர்வாக சங்கம் ஆளுநருக்கு மகஜர்..!

-செயிட் ஆஷிப்-

இம்முறை க.பொ.த.உயர்தர பரீட்சையில் கிழக்கு மாகாணம் முதலிடம் பெற்று சாதனை படைத்தமைக்கான முழுப் பங்களிப்பையும் வழங்கிய அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை மாகாண ஆளுநர் விசேட விருது வழங்கி கௌரவிக்க வேண்டும். இவர்களை விடுத்து அதிகாரிகள் மாத்திரம் கௌரவிக்கப்பட்டமை மிகவும் தவறான முன்மாதிரியென என இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனை வலியுறுத்தி மாகாண ஆளுநருக்கு இச்சங்கத்தினால் மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அதன் செயலாளர் ஏ.எல்.முஹம்மட் முக்தார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

க.பொ.த.உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கிழக்கு மாகாணம் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றமைக்காக இம்மாகாணத்திலுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு விசேட நற்சான்றிதழ்களை வழங்கி, கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவித்திருக்கிறார். அத்துடன் மாகாண கல்விப் பணிப்பாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு விசேட விருது வழங்கப்பட்டு, ஆளுநரினால் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நடைமுறை முற்றிலும் பிழையான முன்மாதிரியென்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். உண்மையாக இந்த விருது திறமை காட்டிய மாணவர்களுக்கும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் பாடசாலைகளின் அதிபர்களுக்குமே முதலில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதுவே நீதியும் தார்மீகமுமாகும்.

திறமையான மாணவர்களும் ஆசிரியர்களும் இல்லாதிருப்பின் இப்படி கிழக்கு மாகாணத்தை அகில இலங்கை மட்டத்தில் முதலிடத்திற்கு கொண்டு வந்திருக்க முடியுமா என்பது பற்றி ஆளுநருக்கு ஆலோசனை வழங்கிய அதிகாரிகள் சிந்தித்து பார்த்திருக்க வேண்டும்.

வலயக் கல்விப் பணிப்பாளர்களை திருப்திபடுத்தினால் தமது அமைச்சை சிறப்பாக கொண்டு நடத்தலாம் என்ற சிந்தனையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இவ்வாறு செயற்பட்டிருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. ஆனால் இது பிழையான எடுகோளாகும்.

வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தமக்கான கடமையைச் செய்தனரே தவிர விசேட முன்னெடுப்புக்கள் எதனையும் க.பொ.த.உயர்தர மாணவர்களது பரீட்சை விடயத்தில் மேற்கொண்டிருக்கவில்லை. 

இவ்விடயத்தில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றியோர் ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என்பதனை கிழக்கு மாகாண ஆளுநர் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.

அத்துடன் இந்த பரீட்சை நடைபெற்ற காலப்பகுதியில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக தற்போதையவர் இருக்கவில்லை. ஆனால் ஆளுநரிடமிருந்து அவரும் விருது பெற்றுள்ளார்.

இந்த பரீட்சை உண்மையாக நடைபெற்றிருக்க வேண்டிய காலப்பகுதி 2021 ஆகஸ்ட் மாதமாகும். அந்தக் காலப்பகுதியில் தற்போதைய மாகாண கல்வி பணிப்பாளர் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார். எனவே அக்காலத்தில் மாகாண கல்விப் பணிப்பாளராக இருந்தவரை விசேடமாக அழைத்து கௌரவித்திருக்க வேண்டும்.

அதுபோல் பரீட்சை நடைபெற்ற காலப்பகுதியில் கடமையிலிருந்த கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களும் கௌரவிப்பின்போது புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களாயின் இவர்களும் உள்வாங்கப்பட்டு, விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட்டிருக்க வேண்டும். இவர்களது விடயத்தில் மாகாண கல்வி அமைச்சு தவறிழைத்துள்ளது- எனவும் ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரில் சுட்டிக்காட்டியிருப்பதாக செயலாளர் ஏ.எல்.எம்.முஹம்மட் முக்தார் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment