Thursday, August 12, 2021

கொரோனா உடல்களால் நிரம்பி வழியும் மஜ்மா நகர்; கிண்ணியா, இறக்காமம் போன்ற இடங்களிலும் அடக்க அனுமதிக்க வேண்டும்..!


(அஸ்லம் எஸ்.மௌலானா)

மஜ்மா நகரில், கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் உடலங்கள் நிரம்பி வழிவதால், அங்கு மேலும் உடல்களை அடக்க முடியாத சூழ்நிலை உருவாகியிருப்பதால் கிண்ணியா, இறக்காமம் போன்ற இடங்களிலும் அடக்கம் செய்ய உடனடியாக அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதுடன் மாவட்டம் தோறும் அவசரமாக புதிய இடங்கள் அடையாளம் காணப்பட வேண்டும் எனவும் சாய்ந்தமருது சமூக, கலாசார அபிவிருத்தி மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதங்களை அனுப்பி வைத்திருப்பதாக மன்றத்தின் தவிசாளர் எம்.அஹமட்லெப்பை இன்று (12) தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்ட துரதிஷ்டமான நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களையடுத்து, இவ்வாறான ஜனாஸாக்களை அடக்குவதற்காக அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதுடன் அதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, மஜ்மா நகர் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அன்று தொடக்கம் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் மாத்திரமல்லாமல் இந்து, பௌத்தர், கிறிஸ்தவர் உள்ளிட்ட அனைத்து இனத்தவரினதும் உடல்கள் வெற்றிகரமாக அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது அங்கு 1500 இற்கு மேற்பட்ட உடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக  அறிவிக்கப்படுகிறது.

இலங்கையில் உள்ள அனைத்து மயானங்களுக்கும் முன்மாதிரியான ஒரு மையவாடியாக மஜ்மா நகர் திழ்கிறது. மயானங்கள் அனைத்தும் தனித்தனி இனங்களுக்கென இருக்கும்போது மஜ்மா நகர் மாத்திரம் அனைத்து இன, மதங்களுக்குமான ஒற்றுமை மயானம் என்ற பெயரை பெற்றிருக்கிறது.

எவ்வாறாயினும் தற்போது அங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் ஏற்கனவே கொவிட் ஜனாஸாக்களை அடக்குவதற்காக தெரிவு செய்யப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டுள்ள திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா , மற்றும் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் போன்ற இடங்களிலும் அடக்கம் செய்வதற்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட வேண்டும்.

அத்துடன் ஏனைய மாகாணங்களிலும் மாவட்டம் தோறும் இதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அக்கடிதங்களில் வலியுறுத்திக் கேட்டுள்ளோம்- என்றார்.


No comments:

Post a Comment