Monday, August 23, 2021

யாழ் முஸ்லிம்களின் விடிவுக்காக தன்னை அர்ப்பணித்தவர் பத்திரிகையாளர் லாபிர்..! -முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என்.எம்.அமீன் அனுதாபம்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சிரேஷ்ட பத்திரிகையாளர் கலாபூஷணம் மீராலெப்பை லாபிர் அவர்கள், ஊடகங்கள் மற்றும் பொது அமைப்புகள் மூலம் சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சோனகத்தெருவை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் சமூக சேவையாளருமான கலாபூஷணம் மீராலெப்பை லாபிர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) காலமானார்.

இவரது மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே என்.எம்.அமீன் அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

கலாபூஷணம் மீராலெப்பை லாபிர் அவர்கள் 1972ஆம் ஆண்டு ஒளி என்ற சஞ்சிகையை வெளியிட்டதில் இருந்து மரணிக்கும் வரை எழுத்து, கலை, இலக்கியம், பத்திரிகைத்துறை மற்றும் சமூக சேவைகளில் மிக அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் தமிழ் தேசிய பத்திரிகைகள் பலவற்றின் பிராந்திய செய்தியாளராகவும் எமது முஸ்லிம் மீடியா போரத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளராகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

2013 ஆம் ஆண்டு கலாசார, பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் கலாபூஷணம் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட இவர் சாமஶ்ரீ, தேசகீர்த்தி, ஊடகச்சுடர், நிழல்படத் தாரகை போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

யாழ் மானிப்பாய் வீதி, பெரிய முஹிதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவராகவும் யாழ்- கிளிநொச்சி சம்மேளனத்தின் பிரதிச் செயலாளராகவும் கிராமிய சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ள இவர், பிளவ்ஸ் ஹாஜியார் பவுண்டேஷன் எனும் அமைப்பின் மூலமும் அகில இலங்கை முஸ்லிம் லீக் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்றவற்றை பிரதிநிதித்துவப்படுத்தியும் பல சமூகப் பணிகளையாற்றி வந்துள்ளார்.

யாழ். முஸ்லிம் கலாசார மஜ்லிஸ் மூலம் செஞ்சிலுவைச் சங்கம், பாமிஸ் நிறுவனம் போன்றவற்றின் அனுசரணையுடன் அனர்த்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கும் உதவிகளைப் பெற்றுக் கொடுத்திருப்பதுடன் நிறைய சமூகத் தொண்டாற்றியுள்ளார்.

அத்துடன் ஜனாஸா நலன்புரிச் சங்கம் ஒன்றை உருவாக்கி, ஜனாஸா நல்லடக்கப் பணிகளையும் சிறப்பாக முன்னெடுத்து வந்துள்ளார்.

1990ஆம் ஆண்டு யாழ்ப்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது தானும் குடும்பத்தினருடன் அகதியாக வெளியேறி, மாவனல்லையில் குடியேறிய போதிலும், தொண்டு நிறுவனங்களின் உதவிகளை இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் முன்னின்று உழைத்துள்ளார்.

யாழ் மண்ணில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில முஸ்லிம் ஊடகவியலாளர்களே இருந்து வருகின்ற நிலையில், யாழ் முஸ்லிம்களின் விடிவுக்காக தன்னை அர்ப்பணித்த பத்திரிகையாளர் எம்.எல்.லாபிர் அவர்களின் சமூகப் பங்களிப்பு என்பது மிக அளப்பரியதாகும்.

யாழ் முஸ்லிம்களினதும் ஏனைய பிராந்திய முஸ்லிம்களினதும் இணைப்புப் பாலமாகவும் தமிழ்- முஸ்லிம் ஐக்கியத்துக்கான உறவுப் பாலமாகவும் திகழ்ந்த இவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்துள்ளது.

வல்ல இறைவன், அன்னாரது சகல பாவங்களையும் மன்னித்து, அவரது நற்செயல்களை பொருந்திக் கொண்டு பிர்தௌஸ் என்னும் மேலான சுவனத்தை வழங்க பிரார்த்திக்கிறோம்- என்று என்.எம்.அமீன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

metromirrorweb@gmail.com

No comments:

Post a Comment