Sunday, November 21, 2021

'நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளும் சவால்களும்' நூல் வெளியீட்டு விழா..!

(யூ.கே.காலித்தீன்)

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.அஸ்லம் சஜா எழுதிய 'நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளும் சவால்களும்' எனும் நூலின் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை (20) மாலை சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் ஏற்பாட்டில் எஸ்.சி.ஜி. நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் 

எம்.ஐ.எம்.சதாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், அம்பாரை மாவட்ட மேலதிக செயலாளர் வீ.ஜெகதீசன், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகளுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவருமான கலாநிதி ஏ.எல்.ஏ.அஸீஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு உரையாற்றினர்.

பேஜஸ் பதிப்பகத்தின் பணிப்பாளரும் பன்னூல் ஆசிரியருமான சிறாஜ் மஸ்ஹூர் நூல் அறிமுக உரையையும் நூலாசிரியர் கலாநிதி அஸ்லம் சஜா ஏற்புரையையும் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.நௌசாத், இலங்கை பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது உலமா சபைத் தலைவர் எஸ்.எம்.சலீம் மௌலவி உட்பட சாய்ந்தமருது, கல்முனைக்குடி ஜும்ஆப் பள்ளிவாசல்களின் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் செயற்பாட்டாளர்கள் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நூலானது திட்டமிடல், கொள்கை வகுத்தல், அபிவிருத்திச் செயன்முறை, அமுலாக்கம், மதிப்பிடல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளதாக நிகழ்வில் உரையாற்றிய அதிதிகள் தமதுரைகளில் சுட்டிக்காட்டி, நூலாசிரியருக்கு பாராட்டைத் தெரிவித்துக் கொண்டனர்.









No comments:

Post a Comment