Thursday, August 3, 2023

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் மர்யம் மன்சூர் சந்திப்பு; கிழக்கு பாடசாலைகளின் அபிவிருத்திக்கு உதவ உறுதி.!

-அஸ்லம் எஸ்.மெளலானா-

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் உமர் பாறுக் புர்கி, முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் புதல்வியும் அவுஸ்திரேலிய முஸ்லிம் கவுன்சில் மற்றும் ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷன் என்பவற்றின் தலைவியுமான 'கிழக்கின் மகள்' மரியம் மன்சூர் நளீமூதீன் அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகத்தில் வியாழக்கிழமை (03) இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் பல தேவைகள் குறித்தும் அங்குள்ள பாடசாலைகளின் அவசரத் தேவைகள், குறைபாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் இப்பகுதி மாணவர்களுக்கு பாகிஸ்தானில் உயர் கல்வி கற்பதற்கான புலமைப்பரிசில் வழங்க வேண்டியதன் அவசியம் பற்றியும் சட்டத்தரணி மரியம் மன்சூர், இதன்போது பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

இதையடுத்து கல்முனையிலுள்ள இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயம் உள்ளிட்ட சில பாடசாலைகளுக்கு கணினித் தொகுதிகளையும் விஞ்ஞான ஆய்வு கூடங்களுக்கான உபகரணங்களையும் அவசரமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் எதிர்காலத்தில் முழுக் கிழக்கு மாகாணத்தையும் மையப்படுத்தி பாடசாலைகளின் அபிவிருத்தி உள்ளிட்ட பல வேலைத் திட்டங்களைச் செய்வதற்கு உதவுவதாகவும் உயர்ஸ்தானிகர் உறுதியளித்துள்ளார்.

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயமும் அது அமைந்துள்ள நகரமும் பாகிஸ்தான் நாட்டின் தலைநகரின் நாமத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருப்பதையிட்டு உயர்ஸ்தானிகர் இதன்போது மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவுக்கு சூட்டப்பட்ட 'Daughter of the East' - 'கிழக்கின் மகள்' என்ற அதே மகுடத்தை மர்யம் மன்சூர் பெற்றிருப்பதானது இறைவனின் அருட்கொடை என்று கூறி உயர்ஸ்தானிகர் பாராட்டுத் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது பரஸ்பரம் நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொண்ட இருவரும் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல், சமூக, கல்வி, கலாசார, பொருளாதார விடயங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.



No comments:

Post a Comment