Tuesday, January 4, 2022

நகர சபை விவகாரம்: சாய்ந்தமருது மக்களை அதாஉல்லா இனியும் ஏமாற்றக் கூடாது; மு.கா. பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் தெரிவிப்பு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையை வைத்து, தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா எம்.பி. அப்பிரதேச மக்களை இன்னும் இன்னும் ஏமாற்றக் கூடாதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளரும் உயர்பீட உறுப்பினருமான ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார்.

அவரது சாய்ந்தமருது அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

கல்முனை மாநகர சபையின் பதவிக் காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், 2022 பெப்ரவரியில் சாய்ந்தமருது நகர சபை மலரும் என்று கூறி சுமார் 9000 வாக்குகளை கபளீகரம் செய்த அதாஉல்லா, இன்னும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அந்த மக்களுக்கு இதுவரை நகர சபை கிடைக்கவில்லை.

சாய்ந்தமருதைச் சேர்ந்த தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர் சலீமும் அதாவுல்லாவுடன் இணைந்து , சாய்ந்தமருது நகர சபை கோஷத்தை முன்வைத்து கடந்த பொதுத் தேர்தலில் வாக்குகளை பெற்று ஏமாற்றி வருகின்றார். இதுவொரு ஆரோக்கியமான செயற்பாடல்ல.

ஒருபோதும் அதாவுல்லாவினால் நகர சபையை பெற்றுத் தர முடியாது. அவருக்கு அரசாங்கத்தில் பலம் இல்லாமை என்பது வர்த்தமானி இரத்துச் செய்யப்பட்டவுடனேயே அறிய முடிந்தது.

2022 பெப்ரவரி மாதத்துக்கு இடையில் அதாவுல்லாவும் சலீமும் நகர சபையை பெற்றுத் தர வேண்டும். இல்லையேல் தங்களால் முடியாது என மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக கூறி ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இன்னும் இன்னும் சாய்ந்தமருது மக்களை ஏமாற்ற முனையக் கூடாது- என்றும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment