Monday, June 10, 2024

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்ஸின் நீண்ட காலக் கனவு முஷாரப் எம்.பி. ஊடாக நிறைவேறுகிறது..!

மூன்று மாடிக் கட்டிடத்திற்கு இன்று அடிக்கல் நடப்பட்டது.!


-அஸ்லம் எஸ்.மெளலானா-

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களின் ஏற்பாட்டில்
சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையில் அமைக்கப்படவுள்ள மூன்று மாடி கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நடும் விழா இன்று திங்கட்கிழமை (10) கோலாகலமாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எம். ஆஷிக், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் ஆகியோர் கெளரவ அதிதிகளாக கலந்து கொண்டிருந்ததுடன் பாடசாலையின் உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது குறித்த கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நடப்பட்டு, கட்டிட நிர்மான வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் மற்றும் அவரது இணைப்பாளர் ஏ.எம். அஸாம் மெளலவி ஆகியோர் உட்பட அதிதிகள், பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இதன்போது உரையாற்றிய திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள்: இக்கட்டிட நிர்மாணப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் தனது பதவிக் காலத்தினுள் இத்திட்டம் பூரணப்படுத்தப்பட்டு, திறந்து வைக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

இக்கட்டிடத் தொகுதி வேலைத் திட்டத்திற்காக முஷாரப் எம்.பி. தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியில் இருந்து முதற்கட்டமாக இரண்டு மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருப்பதுடன் அவரது வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண சபையினால் மூன்று மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை வலயத்தில் மிகவும் பழமை வாய்ந்ததும் பிரபல முன்னணி ஆரம்ப பாடசாலையாகவும் திகழ்கின்ற சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையின் நிலம் மற்றும் கட்டிடப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு இங்கு மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றை அமைக்க வேண்டிய தேவை நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இப்பாடசாலைக்கு விஜயம் செய்திருந்த முஷாரப் எம்.பி.யிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அவர் இதற்கான முதற்கட்ட நிதியை ஒதுக்கீடு செய்திருந்ததுடன் மேலதிக நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களின் இணைப்பாளரும் இப்பாடசாலையின் பழைய மாணவருமான ஏ.எம். அஸாம் மெளலவியின் அயராத முயற்சி காரணமாகவே முஷாரப் எம்.பி. இப்பாடசாலை விடயத்தில் தலையிட்டு அதன் நீண்ட காலக் கனவை நிறைவேற்றுவதற்கு முன்வந்து, துரித நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment