Friday, June 14, 2024

கல்முனை மாநகர ஆணையாளராக என்.எம்.நெளபீஸ் கடமையேற்பு.!


-அஸ்லம் எஸ்.மெளலானா-

கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள என்.எம்.நெளபீஸ் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (14) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம் அவர்கள் தலைமையில் புதிய ஆணையாளர் வரவேற்கப்பட்டார்.

இந்நிகழ்வில் மாநகர சபையின் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், உள்ளுராட்சி உத்தியோகத்தர் தாரிக் அலி சர்ஜுன், வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம், நிதி உதவியாளர் யூ.எம். இஸ்ஹாக் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் ஐ.எம்.றிகாஸ், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எம். ஆஷிக், லகுகல பிரதேச செயலாளர் நவநீதன், மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஸ்,   கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினர் யூ.எல். நூருல் ஹுதா உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றி வந்த ஏ.எல்.எம். அஸ்மி அவர்கள் கிழக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளராக (ஆளணி மற்றும் பயிற்சி) பதவி உயர்வு பெற்று சென்றதையடுத்தே கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு பணிப்பாளரான என்.எம். நெளபீஸ் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களினால் நியமிக்கட்பட்டிருக்கிறார்.

கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாகவே என்.எம். நெளபீஸ் அவர்கள் கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த நௌபீஸ் அவர்கள் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளராகவும் கிண்ணியா நகர சபை மற்றும் ஏறாவூர் நகர சபை என்பவற்றின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

சிறந்த நிருவாகத் திறனும் அனுபவம், ஆற்றலும் கொண்ட நௌபீஸ் அவர்கள் ஏறாவூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment