Tuesday, August 30, 2022

சாதனை என்றாலும் தண்டனைக்குரிய குற்றமே; 09ஆம் வகுப்பு மாணவன் A/L பரீட்சை எழுதிய விவகாரம் தொடர்பில் கல்வி நிருவாக அதிகாரிகள் சங்கம் அறிக்கை..!

-செயிட் ஆஷிப்- 

09ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் இம்முறை க.பொ.த.உயர்தர பரீட்சை எழுதியுள்ளமையானது பொதுப் பரீட்சை விதிமுறைகளை மீறும் செயற்பாடாகும். இது குறித்து உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டு, தொடர்புடைய உத்தியோகத்தர்கள் கண்டு பிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை கல்வி நிருவாக அதிகாரிகள் சங்கம், இலங்கை பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது விடயமாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

பரீட்சை விதிமுறைகளை மீறி, க.பொ.த.உயர்தர பரீட்சை எழுதி சித்தி பெற்றுள்ள இம்மாணவனை பாராட்டி, ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளியாகி வருகிறன. உண்மையில் இம்மாணவனை பரீட்சைத் திணைக்களம் பரீட்சையை எழுதுவதற்கு எவ்வாறு அனுமதித்தது என்பது பெரும் மர்மமாக உள்ளது.

இம்மாணவனது சாதனை பரீட்சை சட்ட விதிமுறைகளுக்கமைய தண்டனைக்குரிய குற்றமாகும்.

இம்மாணவன் மேற்படி பரீட்சையை வெளிவாரியாகவே எழுதியுள்ளான். இம்மாணவன் தம்மை எவ்வாறு மாகாணக் கல்வித்திணைகளத்தில் பதிவு செய்து கொண்டான்? இவனது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட அதிகாரி யார்?

இம்மாணவனது பரீட்சைக்கான விண்ணப்பத்தை உறுதிப்படுத்திய கிராம சேவகர் என்ன அடிப்படையில் இவனது விண்ணப்பத்தினை உறுதிப்படுத்தினார்?

தரம் ஒன்பது கற்கும் மாணவன் என்பவன் 14 அல்லது 15 வயது உடையவனாக இருப்பான். இவனுக்கு தேசிய அடையாள அட்டை எவ்வாறு வழங்கப்பட்டிருக்கும்? 

தேசிய அடையாள அட்டை க.பொ.த.உயர்தரத்திற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அடையாள அட்டை இன்றி எவ்வாறு பரீட்சை மண்டபத்தில் மாணவன் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டார்?

இம்மாணவனுக்கு தேசிய அடையாள அட்டை இம்மாணவனுக்கு இல்லாதிருப்பின் பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் DCX எனும் Cover இல் இரகசிய அறிக்கையினை அனுப்பி இருப்பார். அந்த அறிக்கை பரீட்சைத் திணைக்கள அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்ட பின்னரே முடிவு வெளியிடப்படும்.

இந்நடைமுறை இம்மாணவன் விடயத்தில் ஏன் பின்பற்றப்படவில்லை?

இவ்விடயங்களுக்கு முதலில் தெளிவு காணப்பட வேண்டும். பொதுப் பரீட்சை சட்ட விதிகள் இறுக்கமாக்கப்பட்டுள்ள இக்காலப் பகுதியில் பரீட்சை விதிமுறை மீறல் இம்மாணவன் விடயத்தில் கடுமையாக மீறப்பட்டுள்ளது.

இம்மாணவன் ஏற்கனவே 08ம் தரத்தில் கல்வி பயிலும்போது க.பொ.த.சா.தர பரீட்சைக்கு தோற்றி திறமைச் சித்திகளை பெற்றதாகவும் தெரிய வருகிறது.

பிழைகளையும் சரியாக செய்தால் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவிக்கும் கலி காலத்தில் வாழ்கின்றோம் என்பதை எண்ணும்போது இலங்கையில் கல்வித்துறை எங்கே போகிறது என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்- என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment